உள்ளூர் செய்திகள்

தருமபுரியில் அரசு பஸ் டிரைவரை தாக்கிய 3 பேர் கைது
- டிரைவர் ராஜா தருமபுரி டவுன் போலீசில் புகார் கொடுத்தார்.
- போலீசார் அவர்கள் 3 பேர் மீதும் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது50). இவர் அரசு பஸ்சில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் இவர் நேற்று மாலை தருமபுரி 4 ரோட்டில் பயணிகளை இறக்கி விட்டு பஸ்சை பேருந்து நிலையத்திற்கு கொண்டு செல்ல நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு போதையில் வந்த மர்ம நபர்கள் 3 பேர், நாங்கள் கிருஷ்ணகிரிக்கு செல்ல வேண்டும், உடனே பஸ்சை திருப்புங்கள் என்று கூறியுள்ளனர். டிரைவர் இந்த பஸ் கிருஷ்ணகிரிக்கு செல்லாது. தருமபுரி பஸ் நிலையத்திற்கு செல்கிறது என்றார்.
நீங்கள் பஸ்நிலையத்தில் இருந்து வேறு பஸ்சில் கிருஷ்ணகிரிக்கு செல்லுங்கள் என்று கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. மர்ம நபர்கள் 3 பேரும் சேர்ந்து டிரைவர் ராஜாவை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து டிரைவர் ராஜா தருமபுரி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் அரசு பஸ் டிரைவர் ராஜாவை தாக்கியது அண்ணா நகர் பகுதியை சேர்ந்த சர்மா (24), பிடமனேரி பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் (27), பிடமனேரி ஏரிக்கரை பகுதியை சேர்ந்த தனுஷ் (21) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேர் மீதும் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். கைதான அவர்களை கோர்ட்டில் ஆஜர் படுத்தி தருமபுரி சிறையில் அடைத்தனர்.