கதம்பம்

பழச்சாறு சிறந்ததா.. பழம் சிறந்ததா..?
- பழங்களில் இனிப்பு குறைவான பழங்களுக்கு மவுசு குறைவு தான்.
- பழங்களை நார்ச்சத்துக்காக சாப்பிடுகிறேன் என்றால் அதே நார்ச்சத்து காய்கறி கீரைகளிலும் உண்டு.
பொதுவாக பழங்களில் இனிப்பு சுவை அதிகம். பழங்களுக்கு இனிப்பு சுவை தருவது "சுக்ரோஸ்" ஆகும். சுக்ரோஸுக்குள் இருப்பது ஃப்ரக்டோஸும் க்ளூகோஸும் ஆகும்.
எனவே பழங்களாக சாப்பிட்டாலும் நமது ரத்த க்ளூகோஸ் அளவுகள் கூடும். அதை கட்டுக்குள் வைக்க இன்சுலின் சுரப்பு ஏற்படும்.
இவ்வாறு ஒரு உணவை சாப்பிடும் போது எத்தனை விரைவாக ரத்த க்ளூகோஸை அது ஏற்றுகிறது என்பதை அளவிட க்ளைசீமிக் இண்டெக்ஸ் (GLYCEMIC INDEX) எனும் அளவீடு உதவுகிறது.
இனிப்பு சுவை குறைவான பழங்களுக்கு க்ளைசீமிக் இண்டெக்ஸ் குறைவான அளவில் உள்ளது ( கொய்யா காய், எலுமிச்சை, தேங்காய், நெல்லி காய் , வெள்ளரி காய் , பெர்ரிகள் )
அதுவே இனிப்பு சுவை கூடக் கூட க்ளைசீமிக் இண்டெக்ஸ் உயர்கிறது
( பேரீச்சம் பழம், மா, பலா, வாழை, ஆப்பிள், மாதுளை)
அதிலும் பழச்சாறாக்கி பருகும் போது க்ளைசீமிக் இண்டெக்ஸ் இன்னும் உயர்கிறது. எனவே ஒருவர் சீனி/ நாட்டு சர்க்கரை சேர்க்காமல் பழச்சாறு பருகினாலும் அவர்களுக்கு நீரிழிவு ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
அதுவே சீனி/ நாட்டு சர்க்கரை கலந்து அடிக்கடி பழச்சாறு பருகுபவர்களுக்கு நீரிழிவு ( Diabetes) ஏற்படும் வாய்ப்பு மிக அதிகமாகிறது.
பழச்சாறு அருந்துபவர்களுக்கு ஏன் அடிக்கடி அதை அருந்த வேண்டும் என்ற இச்சை ஏற்படுகிறது?
பழச்சாறின் இனிப்பு மற்றும் அதில் உள்ள சீனியும் நாட்டு சர்க்கரையும் ஜிவ்வென்று ரத்தத்தில் க்ளூகோஸை ஏற்றும். இது மூளைக்கு மிகவும் பிடித்த விசயமாகும். மூளை இத்தகைய திடீர் க்ளூகோஸ் ஏற்றுங்களுக்கு எளிதில் அடிமையாகி விடும்
இதனால் தான் பழச்சாறு மீதும் இனிப்பான பழங்கள் மீதும் நமக்கு இச்சை ஏற்படுகிறது.
பழங்களில் இனிப்பு குறைந்த பழங்கள் மீது நமக்கு இச்சை தோன்றாமல் இருப்பதற்கு/ குறைவாக இருப்பதற்கு காரணமும் இது தான்.
பழங்களில் உள்ள சத்துக்களுக்காக அதை உண்பவர்களை பருகுபவர்களை விடவும் அதன் இனிப்பு சுவைக்காகவும் தித்திப்புக்காகவும் தான் அதிகம் விற்கின்றன. இது தான் உண்மை.
பழங்களில் இனிப்பு குறைவான பழங்களுக்கு மவுசு குறைவு தான்.
எனினும் நீரிழிவு நோயர்கள் கூட இனிப்பான வாழைபழம், மாம்பழம், பலாப்பழம், பேரீச்சம் பழம் என்று உண்பது இதனால் தான்.
இனிப்பான ஆப்பிள் பழத்தில் உள்ள அத்தனை சத்துகளும் இனிப்பு குறைவான கொய்யா காயில் உண்டு.
பழங்களில் உள்ள அத்தனை ஊட்டச்சத்துகளும் நன்மைகளும் காய்கறிகளிலும் உண்டு என்பதை நாம் அறிய வேண்டும்.
பழங்களை நார்ச்சத்துக்காக சாப்பிடுகிறேன் என்றால் அதே நார்ச்சத்து காய்கறி கீரைகளிலும் உண்டு.
அதே பழங்களை பழக்கூழாக்கி பருகும் போது நார்ச்சத்து இன்னும் குறைந்து விடுகிறது.
உதாரணம் ஆரஞ்சு பழத்தின் நார்ச்சத்து 3.1 கிராம் என்றால் ஆரஞ்சு பழச்சாறின் நார்ச்சத்து 0.5 கிராம் என்று ஆறு மடங்கு குறைந்து விடுகிறது.
இதற்கடுத்தபடியாக இனிப்பு தித்திப்பு சுவை கொண்ட அனைத்து விசயங்களிலும் நம் மூளை அதற்கு அடிமை என்பதால் வரம்பு மீறினாலும் மூளை கண்டிக்காது.
அதுவே உப்பு காரம் புளிப்பு போன்றவை இத்தகைய வரம்பு மீறினால் உடனடியாக பிரச்சனைகளை கொண்டு வந்து விடுகின்றன
உதாரணம் குளாப் ஜாமூன் செய்யும் போது வழக்கமாக போட வேண்டிய பத்து ஸ்பூன் சீனிக்கு பதிலாக பதினைந்து ஸ்பூன் போட்டாலும் யாரும் குறை கூற மாட்டார்கள்
ஆனால் அதுவே சோற்றில் எப்போதும் போடும் உப்பை விட சற்று அதிகமாகப் போட்டாலும் உடனே மூளை கடுப்பாகிவிடும்.
வரம்பு மீறுதல் என்பது பழங்களை விட பழச்சாறுகளில் எளிதில் நடக்கும்.
உதாரணம் கரும்பை கடித்து சாப்பிடு என்று கூறினால் ஒரு சிறுவனால் அதிகபட்சம் அரைக் கரும்பைக் கூட முழுவதுமாக ஒரு சமயத்தில் சாப்பிட முடியாது .
ஆனால் அதுவே கரும்புச்சாறாக்கும் போது ஒரு முழுக் கரும்பும் சாறாகி ஒரு நிமிடத்தில் அவனால் குடித்து விட முடிகிறது.
ஒரு ஆப்பிள் பழத்தை துண்டுகளாக வெட்டும் போது எட்டு துண்டுகள் கிடைத்தால் அதை இரண்டு சிறுவர்களுக்கு ஸ்நாக்ஸாக கொடுக்கலாம்.
ஆனால் அதே ஆப்பிளை பழச்சாறாக்கினால் இரண்டு பழங்கள் போட்டு ஜூஸ் ஆக்க வேண்டும். இதில் பாலும் சீனியும் சேர்க்க வேண்டியிருக்கிறது .
பழமாக சாப்பிடும் போது மென்று மெதுவாக சாப்பிடுவதாலும் பழங்களின் திரவத்தன்மை திடமாக( VISCOSITY MORE) இருக்கும் என்பதால் வயிற்றில் நீண்ட நேரம் இருந்து பிறகு கீழிறங்கும்.
ஆனால் அதுவே பழச்சாறு நீர் போல இருப்பதால் சட்டென ஊற்றினால் விரைவில் வயிற்றை விட்டு இறங்கி விடும். இதனால் இண்ஸ்டண்ட் எனர்ஜி கிடைக்குமே தவிர நீண்ட நேரம் பசி அடங்காது. சீக்கிரமே அடுத்த ஸ்நாக்ஸ் மற்றும் உணவை கேட்கும் சூழல் ஏற்படும் .
குழந்தைகளுக்கு சிறார்களுக்கு வளர் இளம் பருவத்தினருக்கு பேக்கரி ஸ்நாக்ஸ்களுக்கு பதிலாக பழங்களை உண்ணக் கொடுப்பது நல்லது.
பழங்களை பழச்சாறாக்கி அடிக்கடி பருகுவது நன்மையன்று. அதிலும் சீனி நாட்டு சர்க்கரை தேன் போன்றவற்றை சேர்த்து பருகுவது நீரிழிவு / ஃபேட்டி லிவர் / பிசிஓடி / உடல் பருமன் போன்ற பிரச்சனைகளை வரவழைக்கலாம்.
இண்ஸ்டண்ட் எனர்ஜி பெற வேண்டிய நேரங்களில் பழச்சாறுகள் கை கொடுக்கும். அப்போதும் இனிப்பு கலப்பது நன்மையன்று.
நீரிழிவு நோயர்/ உடல் பருமன்/ பிசிஓடி/ ரத்த கொதிப்பு இருப்பவர்கள் இனிப்பு சுவை கொண்ட பழங்களை தவிர்த்து இனிப்பு சுவை குறைந்த பழங்களை விரும்பிச் சாப்பிடலாம்.
இவர்களுக்கு பழங்களில் உள்ள அத்தனை சத்துகளும் காய்கறிகளிலும் உண்டு. எனவே காய்கறிகள் சாப்பிடலாம்.
-டாக்டர். பரூக் அப்துல்லா