இந்தியா

பிளஸ்-1 மாணவனை காதலிக்குமாறு 10-ம் வகுப்பு மாணவிக்கு தொல்லை - 2 இளைஞர்கள் கைது
- மாணவியை பிளஸ்-1 மாணவன் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.
- திருமணம் செய்து வைக்குமாறு மாணவியின் தாயையும் மிரட்டி இருக்கின்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் வெள்ளரடா பகுதியை சேர்ந்த ஒரு சிறுமி, அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். அந்த மாணவியை பிளஸ்-1 படித்து வந்த மாணவன் ஒருவன் காதலித்துள்ளார்.
ஆனால் அவரது காதலை 10-ம் வகுப்பு மாணவி ஏற்றுக் கொள்ளவில்லை என தெரிகிறது. இருந்த போதிலும் மாணவியை பிளஸ்-1 மாணவன் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். மேலும் மாணவியை மிரட்டி தனக்கு அடிபணிய வைத்துவிடலாம் என்று நினைத்துள்ளார்.
அவர் மன்னம்கோட்டை பகுதியை சேர்ந்த ஆனந்து (20), சஜின்(30) ஆகிய இருவரையும் தொடர்பு கொண்டு தனக்கு உதவுமாறு கேட்டுள்ளார். தனக்கு உதவினால் மதுபானம் மற்றும் விரும்பும் உணவு வாங்கித்தருவதாக பிளஸ்-1 மாணவன் கூறியிருக்கிறான்.
இதையடுத்து ஆனந்து, சஜின் ஆகிய இருவரும் 10-ம் வகுப்பு மாணவியின் தாயின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். பிளஸ்-1 மாணவனை காதலிக்குமாறு 10-ம் வகுப்பு மாணவியை மிரட்டியுள்ளனர்.
அது மட்டுமின்றி பிளஸ்-1 மாணவனை மாணவிக்கு திருமணம் செய்து வைக்குமாறு மாணவியின் தாயையும் மிரட்டி இருக்கின்றனர்.
இதுகுறித்து வெள்ளரடா போலீஸ் நிலையத்தில் மாணவியின் தாய் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி 10-ம் வகுப்பு மாணவி மற்றும் அவரது தாய்க்கு மிரட்டல் விடுத்த ஆனந்து, சஜின் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.