திருவனந்தபுரம்:
71-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த திரைப்படமாக '12த் ஃபெயில்' மற்றும் சிறந்த தமிழ் திரைப்படமாக 'பார்க்கிங்' தேர்வு செய்யப்பட்டது. இந்தப் படத்தில் நடித்த எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறந்த துணை நடிகர் விருது, சிறந்த திரைக்கதைக்கான விருதும் இப்படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது, 'தி கேரளா ஸ்டோரி' படத்தை இயக்கிய சுதீப்தோ சென்னுக்கு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், கேரளாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் தவறான தகவல்களைப் பரப்பி, வகுப்புவாத வெறுப்பை விதைக்கும் ஒரு திரைப்படத்தை கவுரவிப்பதன் மூலம், தேசிய விருதுகள் நடுவர் குழு, சங்பரிவாரின் பிளவுபடுத்தும் சித்தாந்தத்தில் வேரூன்றிய ஒரு கதைக்கு சட்டபூர்வ அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக எப்போதும் நல்லிணக்கம் மற்றும் எதிர்ப்பின் கலங்கரை விளக்கமாக நிற்கும் நிலமான கேரளாவுக்கு, இந்த முடிவு மிகப்பெரிய அவமானத்தைத் தந்துள்ளது. மலையாளிகள் மட்டுமல்ல, ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும், அரசியலமைப்பு மதிப்புகளைப் பாதுகாக்க தங்கள் குரலை எழுப்ப வேண்டும் என பதிவிட்டுள்ளார்.