இந்தியா

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த பெண் யூடியூபருடன் ராகுல் காந்தி இருக்கும் புகைப்படங்கள் வைரல்.. உண்மை என்ன?
- நவம்பர் 2023 முதல் பாகிஸ்தான் தூதர் டேனிஷுடன் தொடர்பில் இருந்துள்ளார்.
- உளவு பார்த்த வழக்கில் ஜோதி மல்ஹோத்ராவை NIA, புலனாய்வுப் பிரிவு மற்றும் ராணுவ புலனாய்வு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
பாகிஸ்தானுடன் உளவு பார்த்ததாக கடந்த மாதம் கைது செய்யப்பட்ட யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
பாஜக ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் இந்த புகைப்படத்தை பகிர்ந்து தேச துரோக சக்திகளுடன் ராகுல் தொடர்பில் உள்ளார் என சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். ஆனால் இந்த புகைப்படத்தின் உண்மைத் தன்மை தற்போது வெளியாகி உள்ளது.
பல உண்மைச் சரிபார்ப்பு நிறுவனங்கள் ராகுல் மற்றும் ஜோதி மல்ஹோத்ராவின் புகைப்படங்களை மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் என்று அறிவித்துள்ளன.
கூகிள் படத் தேடலின் படி, பல ஊடகங்கள் 2017 இல் அசல் புகைப்படத்தை வெளியிட்டன. மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் செய்து தேடியதில், ராகுலுடன் இருந்த நபர் முன்னாள் காங்கிரஸ் தலைவர் அதிதி சிங் என்பது தெரியவந்தது.
வைரலாகும் புகைப்படங்களில் ஜோதி மல்ஹோத்ரா அணிந்திருக்கும் அதே சேலையை அதிதி சிங் அணிந்திருப்பதைக் காணலாம். அவர்களும் அதே போஸில் காணப்படுகிறார்கள். பின்னணியில் இருப்பவர் கூட மாறவில்லை.
ராகுல் மற்றும் அதிதி சிங் இருக்கும் புகைப்படம் பல வருடங்களுக்கு முந்தையது. இந்தப் புகைப்படத்தை அவர் 2017 இல் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார்.
அதிதி சிங் ரேபரேலியைச் சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஆவார். 2021 இல் பாஜகவில் சேர்ந்தார். தற்போது அவர் ரேபரேலி சதார் தொகுதியின் பாஜக எம்எல்ஏவாக உள்ளார். ராகுல் காந்தியுடன் ஜோதி மல்கோத்ரா இருப்பது போன்ற பல புகைப்படங்கள் இதுபோன்று போலியாக பரபரப்படுகின்றன.
பாகிஸ்தானுடன் உளவு பார்த்த குற்றச்சாட்டில் ஜோதி மல்ஹோத்ரா கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். நவம்பர் 2023 முதல் பாகிஸ்தான் தூதர் டேனிஷுடன் தொடர்பில் இருந்துள்ளார்.
நாட்டைப் பற்றிய முக்கியமான தகவல்களை வழங்கியதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் டேனிஷ் மே 13 அன்று இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டார்.
உளவு பார்த்த வழக்கில் ஜோதி மல்ஹோத்ராவை NIA, புலனாய்வுப் பிரிவு மற்றும் ராணுவ புலனாய்வு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.