இந்தியா

காஷ்மீரில் இருந்து திரும்ப முடியாமல் கேரளாவை சேர்ந்த 258 பேர் தவிப்பு
- தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து காஷ்மீரில் பதட்டமாக சூழல் நிலவி வருகிறது.
- காஷ்மீரில் சிக்கியிருக்கும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களில் 4 எம்.எல்.ஏ.க் களும் உள்ளனர்.
திருவனந்தபுரம்:
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகளால் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுற்றுலா பயணிகளை குறி வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து காஷ்மீரில் பதட்டமாக சூழல் நிலவி வருகிறது. அங்கு சுற்றுலா சென்ற தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் பீதியில் உறைந்தனர்.
அவர்கள் தங்களது மாநிலத்துக்கு மீண்டும் திரும்ப முடியாமல் தவித்த படி இருக்கின்றனர். காஷ்மீரில் சிக்கி தவிக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்களை பத்திரமாக அழைத்து வரும் நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
கேரள மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் காஷ்மீரில் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது கேரளாவை சேர்ந்த மொத்தம் 258 பேர் அங்கு இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு உதவுவதற்காக உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த உதவி மையத்தின் 26 குழுக்களில் 262 பேர் பதிவு செய்திருந்ததாகவும், அவர்களில் 4 பேர் சொந்த ஊருக்கு திரும்பியிருக்கும் நிலையில், விமானங்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பதால் மற்ற 258 பேரும் காஷ்மீரில் இருந்து திரும்ப முடியாமல் அங்கேயே தவித்து வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
காஷ்மீரில் சிக்கியிருக்கும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களில் 4 எம்.எல்.ஏ.க் களும் உள்ளனர். சித்திக், முகேஷ், மஜீத், அன்சலன் ஆகியோர் தலைமையிலான கேரள சட்டமன்ற உத்தரவாத குழு ஐம்மு காஷ்மீர், பஞ்சாப், டெல்லி ஆகிய இடங்களுக்கு 9 நாள் சுற்றுப் பயணத்துக்கு புறப்பட்டனர்.
அவர்கள் முதலில் காஷ்மீருக்கு சென்றிருந்த நிலையில், பயங்கரவாதிகள் தாக்குதல் காரணமாக அங்கேயே சிக்கிக் கொண்டனர். அவர்களும் காஷ்மீரில் சிக்கியிருக்கும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களுடன் தங்கியுள்ளனர். பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவத்தால் எம்.எல்.ஏ.க்கள் குழு தனது சுற்றுப்பயண திட்டத்தை மாற்ற உள்ளது.
காஷ்மீரில் சிக்கியிருக்கும் கேரள மாநிலத்தை சேர்ந்த அனைவரையும் சொந்த ஊருக்கு அழைத்து வருவதற்காக ஏற்பாடுகளை கேரள மாநில அரசு செய்து வருகிறது.