இந்தியா

ராகுல் காந்தி, கார்கேவால் தங்கள் கட்சியை கட்டுப்படுத்த முடியவில்லையா?- பாஜக எம்.பி. கேள்வி
- அவர்களின் அனைத்து அறிக்கைகளும் பாகிஸ்தானில் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. அங்கு ஒரு ஊடக பிரசாரம் நடந்து வருகிறது.
- நாடு பொதுவான தொனியில் பேச வேண்டிய நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் பாகிஸ்தானுக்கு முன்னால் நாட்டை இழிவுபடுத்துகிறார்கள்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்தியா- பாகிஸ்தான் இடையில் போர் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இரு நாடுகளில் படைகளை உஷார்படுத்தி வருகின்றன.
இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான தலைவர்கள், பஹல்காம் தாக்குதலுக்கு பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை குறைபாடுதான் காரணம். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, பாகிஸ்தானுக்கு எதிராக போருக்கு நாங்கள் ஆதரவாக இல்லை. நாங்கள் போரை விரும்பவில்லை எனத் தெரிவித்திருந்தார்.
சித்தராமையா பேசிய வீடியோவை பாகிஸ்தானின் முக்கிய செய்தி நிறுவனம ஒளிப்பரப்பியது. போருக்கு எதிராக இந்தியாவிற்குள் இருந்து வரும் குரல் என்றும் செய்தி வெளியிட்டது.
இந்த நிலையில் பாஜக எம்.பி. ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:-
ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரால் தங்கள் கட்சியை கட்டுப்படுத்த முடியவில்லையா?. அவர்கள் விரும்பியதை பேச அனைவருக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் அனைத்து அறிக்கைகளும் பாகிஸ்தானில் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. அங்கு ஒரு ஊடக பிரசாரம் நடந்து வருகிறது.
நாடு பொதுவான தொனியில் பேச வேண்டிய நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் பாகிஸ்தானுக்கு முன்னால் நாட்டை இழிவுபடுத்துகிறார்கள். நீங்கள் (ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன் கார்கே) என்ன செய்கிறீர்கள்?. சித்தராமையாவிடம் ஏதேனும் கேள்விகள் கேட்கப்பட்டதா? யாரிடமாவது பொது மன்னிப்பு கேட்கச் சொல்லப்பட்டதா?. இந்த அணுகுமுறையை நாங்கள் கண்டிக்கிறோம்.
இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.