இந்தியா

மாட்டு கொட்டகையை இடித்ததால் எம்.எல்.ஏ. அலுவலகம் முன்பு எருமை மாடுகளுடன் போராட்டம்
- போராட்டத்தை கைவிட மறுப்பு தெரிவித்ததால் போலீசார் அவரை கைது செய்ய முயன்றனர்.
- சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தெலுங்கானா மாநிலம் பூபால பள்ளி சிங்கரேணி குரகுலாவை சேர்ந்தவர் ஓடேலு. இவரது மனைவி லலிதா. தம்பதியினர் சிங்கரேணி அரசு ஆஸ்பத்திரி அருகே குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். தங்களது வீட்டை ஒட்டி கொட்டகை அமைத்து ஏராளமான எருமை மாடுகளை வளர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் சாலை விரிவாக்கம் செய்ய மாட்டுக்கொட்டகையை இடிக்கப்படும் என அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். அதிகாரிகளின் நோட்டீசுக்கு ஓடேலு எந்த பதிலும் அளிக்கவில்லை.
நேற்று ஓடேலுவின் வீட்டிற்கு வந்த அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் மாட்டு கொட்டகையை இடித்து தள்ளினர். இதனைக் கண்ட தம்பதியினர் அதிர்ச்சி அடைந்தனர்.
நேற்று மாலை ஓடேலு தனது மனைவி மற்றும் உறவினர் ரமேஷ் என்பவருடன் அவருடைய எருமை மாடுகளை அங்குள்ள எம்.எல்.ஏ. அலுவலக வளாகத்திற்கு கொண்டு வந்தார்.
எருமை மாடுகளை எம்.எல்.ஏ. அலுவலக வளாகத்தில் கட்டி வைத்து எம்.எல்.ஏ. தூண்டுதலின் பேரில் சட்ட விரோதமாக தனது மாட்டு கொட்டையை இடித்து விட்டதாக போராட்டம் நடத்தினார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டம் நடத்திய ஓடேலுவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அவர் போராட்டத்தை கைவிட மறுப்பு தெரிவித்ததால் போலீசார் அவரை கைது செய்ய முயன்றனர். அப்போது தன்னிடம் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
மேலும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட லலிதா மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரஜினி நடித்த அண்ணாமலை சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.