இந்தியா

பஹல்காம் தாக்குதல் தொடர்பான தலைவர்களின் கருத்தில் இருந்து கட்சி விலகி நிற்கிறது: காங்கிரஸ்
- சில காங்கிரஸ் தலைவர்கள் மீடியாக்களில் பேசி வருகின்றனர்.
- அவர்களுடைய கருத்து அவர்களுடையதானது. காங்கிரஸ் கட்சியின் பார்வையை பிரதிபலிக்காது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சி தலைவர்களின் கருத்துகள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக உள்ளதாக பாஜக-வினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சி தலைவருமான சைபுதீன் சோஸ், பஹல்காம் தாக்குதலில் எங்களுக்கு தொடர்பு இல்லை என பாகிஸ்தானை கூறினால், இதை ஏற்றுக் கொள்ள வேண்டியதுதானே எனத் தெரிவித்திருந்தார். கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, "நாங்கள் போருக்கு ஆதரவாக இல்லை. போரை விரும்பவில்லை" எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில் தலைவர்களின் கருத்துகளில் இருந்து காங்கிரஸ் கட்சி விலகி நிற்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர், செய்தி தொடர்பு பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும், "காங்கிரஸ் காரிய கமிட்டி கடந்த 24ஆம் தேதி கூடியது. அப்போது பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின் மத்திய அரசு கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
சில காங்கிரஸ் தலைவர்கள் மீடியாக்களில் பேசி வருகின்றனர். அவர்களுடைய கருத்து அவர்களுடையதானது. காங்கிரஸ் கட்சியின் பார்வையை பிரதிபலிக்காது.
இந்த மிக முக்கியமான நேரத்தில், காங்கிரஸ் காரிய கமிட்டி தீர்மானம், கார்கே மற்றும் ராகுல் காந்தி வெளிப்படுத்திய கருத்துகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகளின் கருத்துக்கள் மட்டுமே காங்கிரசின் நிலைப்பாட்டை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்பதில் எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது" எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில், பாகிஸ்தான் மூளையாக செயல்பட்டு நடத்தப்பட்ட பஹல்காம் தாக்குதல் இந்திய குடியரசு மீதான நேரடி தாக்குதல். இந்த தாக்குதல் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறையின் வெளிப்படையான குறைபாடு என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.