தமிழ்நாடு செய்திகள்

தண்டவாளத்தில் கற்களை வைத்து ரெயிலை கவிழ்க்க சதி- போலீசார் விசாரணை
- தண்டவாளத்தில் ஜல்லிக்கற்கள் நொறுங்கி மாவு போல் கிடந்தன.
- ரெயிலை கவிழ்க்க சதி செய்தால் என்ன தண்டனை கிடைக்கும் என்பது குறித்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருப்பூர்:
திருப்பூர்- வஞ்சிபாளையம் இடையே காவிலிபாளையம் அருகே தண்டவாளத்தில் மர்மநபர்கள் சிலர் கற்களை வைத்திருந்தனர். அப்போது அந்த வழியே வந்த சரக்கு ரெயில் ஏறி சென்ற போது அந்த கற்கள் நொறுங்கியுள்ளது.
இது குறித்து என்ஜின் டிரைவர் திருப்பூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ரூவந்திகா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு தண்டவாளத்தில் ஜல்லிக்கற்கள் நொறுங்கி மாவு போல் கிடந்தன.
மர்மநபர்கள் தண்டவாளத்தில் வரிசையாக ஜல்லிக்கற்கள் வைத்திருந்த நிலையில் அதில் ரெயில் ஏறி சென்றது தெரியவந்தது. சிறிய கற்கள் என்பதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தொடர்ந்து ரெயில் தண்டவாளத்தில் கற்களை வைத்தது யார்? ரெயிலை கவிழ்க்க சதி நடந்ததா? என்பது குறித்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அந்த பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. அங்கு மது அருந்த வந்த மர்மநபர்கள் போதையில் இது போன்ற செயலில் ஈடுபட்டனரா என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தண்டவாளத்தில் கற்கள் வைத்து ரெயிலை கவிழ்க்க சதி செய்தால் என்ன தண்டனை கிடைக்கும் என்பது குறித்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.