இந்தியா

'தோல் நிறம்' குறித்த விமர்சனம்.. உயர் பதவியில் உள்ளவர்தான் காரணம் - கேரள தலைமைச் செயலாளர் பளிச்
- கருப்பு நிறம் குறித்த அணுகுமுறையின் பிரச்சினை இது என்று தெரிவித்தார்.
- ஆனால் அந்த நபர் இந்த விவகாரம் குறித்து பேசவில்லை.
கேரள தலைமைச் செயலாளர் சாரதா முரளீதரன் கடந்த மாதம் ஒரு பேஸ்புக் பதிவில் தான் எதிர்கொண்ட நிறம் மற்றும் பாலின பாகுபாடு குறித்து பதிவிட்டிருந்தார். தனது தோல் நிறம் குறித்து விமர்சிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தது விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் வரும் ஏப்ரல் 30 ஆம் தேதியுடன் சாரதா முரளீதரன் ஓய்வு பெற உள்ள நிலையில் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில் தோல் நிறம் குறித்த விமர்சனம் பற்றி பேசிய அவர், கருப்பு நிறம் குறித்த அணுகுமுறையின் பிரச்சினை இது என்று தெரிவித்தார்.
அத்தகைய கருத்தை தெரிவித்தது ஒரு உயர் பதவியில் உள்ள நபரா என்று அவரிடம் கேட்டபோது, ஆம் என ஒப்புக்கொண்டார். ஆனால் அந்த குறிப்பிட்ட நபர் ஒரு அரசியல்வாதியா அல்லது உயர் பதவியில் உள்ள அதிகாரியா என்பதை வெளிப்படுத்தத் தயங்கினார்.
"அதற்குப் பிறகும் (சர்ச்சை) நாங்கள் இருவரும் மிகவும் நட்பான முறையில் பேசினோம், ஆனால் அந்த நபர் இந்த விவகாரம் குறித்து பேசவில்லை" என்று சாரதா மேலும் தெரிவித்தார்.
தோல் நிறம் குறித்த பாகுபாடு குறித்துத் தான் பேசியபோது, பல்வேறு துறைகளைச் சேர்ந்த பலர் தன்னை அழைத்து தனக்கு ஆதரவை வெளிப்படுத்தியதாகவும், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் அதே அவமானத்தை அனுபவித்ததாகத் தெரிவித்ததாகவும் சாரதா கூறினார்.
சாரதா முரளீதரன் ஏப்ரல் 30 ஆம் தேதி ஓய்வு பெறுவதால், கேரளாவின் புதிய தலைமைச் செயலாளராக ஏ. ஜெயதிலக் நியமிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.