இந்தியா

வெளிநாட்டு கல்வி, பட்டங்கள் மோகத்தில் கடனில் மூழ்க வேண்டாம் - தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அறிவுரை
- வெளிநாட்டு பட்டங்கள் திறமையை அதிகரிக்கின்றன என்பது ஒரு கட்டுக்கதை.
- வெளிநாட்டு பட்டங்களுக்காக குடும்பங்களுக்கு கடன் சுமையை ஏற்படுத்த வேண்டாம்.
தெலுங்கானா ஐதராபாத்தில் உள்ள NALSAR சட்டப் பல்கலைக்கழகத்தின் 22வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கலந்து கொண்டார். முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியும் இந்த நிகழ்வில் பங்கேற்றார்.
நீதிபதி கவாய் தனது உரையில், இளம் வழக்கறிஞர்கள் மற்றும் சட்டத் தொழிலில் நுழையும் மாணவர்களுக்கு முக்கிய அறிவுரைகளை வழங்கினார்.
சட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வெளிநாட்டு பட்டங்களுக்காக கடனில் மூழ்க வேண்டாம் என்று எச்சரித்தார்.
இந்தியா தரமான சட்டக் கல்வியை வழங்குகிறது, வெளிநாட்டு பட்டங்கள் திறமையை அதிகரிக்கின்றன என்பது ஒரு கட்டுக்கதை என்றும், ஒருவரின் திறமை அவர்களின் பணி மூலம் நிரூபிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
எனவே வெளிநாட்டு பட்டங்களுக்காக குடும்பங்களுக்கு கடன் சுமையை ஏற்படுத்த வேண்டாம் என்று அவர் மாணவர்களை அறிவுறுத்தினார்.
மேலும் தற்காலத்தில் நீதித்துறை எதிர்கொள்ளும் சவால்களையும் கவாய் எடுத்துரைத்தார். இந்தியா பல்வேறு சட்ட சவால்களை எதிர்கொள்கிறது என்றும், வழக்கறிஞர்கள் மற்றும் சட்டத் தொழிலில் உள்ளவர்கள் அனைவரும் கவனமாக இருப்பது முக்கியம் என்றும் கூறினார்.