இந்தியா

பாஜகவுக்காக வாக்கு திருடும் தேர்தல் ஆணையம்.. 100% உறுதியான ஆதாரம் இருக்கு.. யாரையும் விடமாட்டோம் - ராகுல்
- அவை வெளியானால் தேர்தல் ஆணையம் ஒளிந்துகொள்ள இடம் இருக்காது.
- ஓய்வு பெற்றாலும் அவர்களை விட்டுவிட மாட்டோம் என்று ராகுல் எச்சரித்தார்.
பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக தங்களிடம் 100 சதவீதம் தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாக வாக்காளர் பட்டியலில் முறைகேடுகளைச் செய்கிறது என்றும் இது தொடர்பாக 'அணு குண்டு' போன்ற ஆதாரங்கள் இருப்பதாகவும், அவை வெளியானால் தேர்தல் ஆணையம் ஒளிந்துகொள்ள இடம் இருக்காது என்றும் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு நடந்த மத்தியப் பிரதேச சட்டசபை தேர்தலிலும், மக்களவைத் தேர்தலிலும் முறைகேடுகள் நடந்ததாக சந்தேகம் எழுந்ததாகவும், இந்த சந்தேகம் மகாராஷ்டிராவில் மேலும் வலுவடைந்ததாகவும் அவர் கூறினார்.
மகாராஷ்டிராவில் வாக்காளர் பட்டியலில் கோடிக்கணக்கான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து விரிவாக ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேர்தல் ஆணையத்தில் உள்ள அதிகாரிகள், உயர் பதவியில் இருந்து கீழ் நிலை வரை, இந்த முறைகேடுகளில் ஈடுபடுவர்கள் நாட்டுக்கு எதிராக செயல்படுகிறார்கள். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஓய்வு பெற்றாலும் அவர்களை விட்டுவிட மாட்டோம் என்று ராகுல் எச்சரித்தார்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், காங்கிரஸ் மற்றும் பல எதிர்க்கட்சித் தலைவர்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து உடனடியாக ஒரு சிறப்பு விவாதம் நடத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.