இந்தியா

கல்லூரியில் திருடிய மணியை 28 ஆண்டுகளுக்கு பிறகு ஒப்படைத்த என்ஜினீயர்
- கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து கொண்டு இருந்தபோது, ஒரு நாள் கல்லூரிக்கு தாமதமாக வந்தேன்.
- திருடிய விஷயத்தை பின்னாளில் மற்ற நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டேன்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் இடுக்கி தொடுபுழாவில் அரசு என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 1996-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நடந்தது.
விழாவில் பங்கேற்ற முன்னாள் மாணவர்கள் படிக்கும்போது நடந்த சம்பவம் பற்றி தங்களுடைய அனுபவங்களை ஒவ்வொருவராக பகிர்ந்து கொண்டனர். அதில் ஒருவர் முன்னாள் மாணவரான கண்ணூரை சேர்ந்த என்ஜினீயர் பிரதீப் ஜோய். அவர் பார்சலுடன் மேடைக்கு வந்தார். அதனை பார்த்த சக மாணவர்கள், ஏதோ ஒரு வித்தியாசமான அனுபவத்தை நமக்கு பிரதீப் கொடுக்க போகிறார், என நினைத்தனர். அந்த மாணவரும், பார்சலை மேடையில் வைத்து பிரித்தார். இதனை பார்த்தவர்களுக்கு ஆச்சரியத்தை தந்தது.
அதாவது பள்ளி கல்லூரிகளில் வகுப்பு தொடங்கும் போதும், வகுப்புகள் முடிந்த பின்னரும் அடிக்கும் உலோகத்திலான ஒலி எழுப்பும் மணி அது. இந்த மணியை படிக்கும்போது திருடியதாகவும், அதனை பத்திரமாக வைத்திருந்ததாகவும் பிரதீப் தெரிவித்த தகவலை கேட்டு அனைவரும் சிரித்துவிட்டனர். மேலும் எதற்காக திருடினேன் என்று அவர் அளித்த விளக்கமும் அரங்கம் முழுவதும் சிரிப்பை ஏற்படுத்தியது.
இதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து கொண்டு இருந்தபோது, ஒரு நாள் கல்லூரிக்கு தாமதமாக வந்தேன். இதனால் அப்போது கல்லூரியில் முதல்வராக இருந்த பி.வி.ஆன்றனி, என்னை முட்டி போட சொல்லி தண்டனை தந்தார். அதை நான் அப்போது அவமானமாக கருதினேன். அதனால் எனக்கு அப்போது ஒரு பிற்போக்கு தனமான புத்தி தோன்றியது. அதாவது, கல்லூரியில் ஒலி எழுப்பும் மணியை அடித்ததால் தானே, நான் தாமதமாக வந்தது தெரிந்தது. எனவே அந்த மணியையே திருடிவிட்டேன்.
திருடிய விஷயத்தை பின்னாளில் மற்ற நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டேன். ஆனால் அந்த மணியை இதுவரை வீட்டில் பத்திரமாக வைத்து இருந்தேன். தற்போது அது தவறு என்பதை உணர்ந்தேன். அதற்கு பரிகாரம் தேடும் வகையில், 28 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர் சந்திப்பில், தவறை ஒப்புக் கொண்டு இந்த மணியை கல்லூரியில் ஒப்படைக்கிறேன் என்றார்.
அதன்படி மணியை, தற்போதைய கல்லூரி முதல்வர் வி.ஜி.கீதம்மாவிடம் ஒப்படைத்தார். அப்போது அங்கிருந்த ஆசிரியர்களும், முன்னாள் மாணவர்களும் கைதட்டி வரவேற்றனர்.