இந்தியா

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட்
- நிசார் செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
- நிசார் செயற்கைக்கோளால் பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் சிறிய மாற்றங்களைக் கூட கண்டறிய முடியும்.
சென்னை:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றும் அமெரிக்காவின் நாசாவின் முதல் கூட்டு செயற்கைக்கோளான நாசா - இஸ்ரோ செயற்கை துளை ரேடார் (நிசார்), இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று மாலை 5.40 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
இதற்கான இறுதிக்கட்டப்பணியான 27½ மணி நேர கவுண்ட்டவுன் நேற்று பகல் 2.10 மணிக்கு தொடங்கியது.
இந்நிலையில், இஸ்ரோ-நாசா கூட்டு தயாரிப்பான நிசார் செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட் இன்று மாலை வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
நிசார் செயற்கைக்கோள் 2,392 கிலோ எடை கொண்ட, ஒரு தனித்துவமான பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளாகும். நாசாவின் 'எல்-பாண்ட்' மற்றும் இஸ்ரோவின் 'எஸ்-பாண்ட்' என்ற இரட்டை அதிர்வெண் செயற்கை துளை ரேடார் வகையைச் சேர்ந்தவை ஆகும். இந்த செயற்கைக்கோள் வானிலை, பகல் மற்றும் இரவு தரவுகளை வழங்குவதுடன் பரந்த அளவிலான பயன்பாடுகளை செயல்படுத்தும்.
நிசார் பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் சிறிய மாற்றங்களைக் கூட கண்டறிய முடியும். அதாவது, பனிப்படல இயக்கம் மற்றும் தாவர இயக்கவியல், கடல் பனி வகைப்பாடு, கப்பல் கண்டறிதல், கரையோர கண்காணிப்பு, புயல் தன்மை, மண்ணின் ஈரப்பதத்தில் ஏற்படும் மாற்றங்கள், மேற்பரப்பு நீர் வளங்களை வரைபடம் செய்யும் திறன் கொண்டதாகும்.