ஆந்திர மாநிலம், சித்தூர், பாலாஜி நகர் காலனியை சேர்ந்தவர் சவுக்கத் அலி. இவரது மகள் யாஸ்மின் பானு (வயது 26). எம்.பி.ஏ பட்டதாரி.
சித்தூர் அடுத்த பூதலப்பட்டை சேர்ந்தவர் சாய் தேஜா. பி.டெக் பட்டதாரி. சாய் தேஜாவும், யாஸ்மின் பானுவும் கல்லூரியில் படிக்கும் போதே காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் யாஸ்மின் பானுவின் வீட்டில் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த பிப்ரவரி மாதம் 9-ந்தேதி நெல்லூரில் உள்ள கோவிலில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் 13-ந் தேதி திருப்பதி டி.எஸ்.பி அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். போலீசார் 2 குடும்பத்தினரையும் அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
பின்னர் யாஸ்மின் பானுவின் குடும்பத்தினர் அவரிடம் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர்.
இந்த நிலையில் யாஸ்மின் பானுக்கு போன் செய்து அவரது தந்தை சவுக்கத் அலி தனக்கு உடல்நிலை சரியில்லை நேரில் வந்து பார்த்துவிட்டு செல்லவும் என தெரிவித்தார். இதையடுத்து சாய் தேஜா மனைவியை காரில் அழைத்துச் சென்று தாய் வீட்டில் விட்டு விட்டு வந்தார். நேற்று முன்தினம் சாய் தேஜா தனது மனைவிக்கு போன் செய்தார். போனை எடுக்கவில்லை. அவரது தந்தை சவுக்கத் அலி மற்றும் சகோதரர் லாலு ஆகியோரும் போன் எடுக்கவில்லை.
நேற்று காலை மனைவியின் வீட்டிற்கு சென்றபோது வீட்டில் யாஸ்மின் பானு இல்லை. இதுகுறித்து அவரது குடும்பத்தினரிடம் கேட்டபோது யாஸ்மின் பானு தற்கொலை செய்து கொண்டதாகவும் உடல் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் உள்ளதாகவும் அலட்சியமாக தெரிவித்தனர்.
மேலும் யாஸ்மின் பானுவின் தந்தை சவுக்கத் அலி சகோதரர் லாலு ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். மனைவியின் பிணத்தை பார்த்த சாய் தேஜா கதறி துடித்தார். திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரது குடும்பத்தினர் மனைவியை கொலை செய்து தற்கொலை நாடகமாடுவதாக போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள யாஸ்மின் பானுவின் தந்தை மற்றும் சகோதரரை தேடி வருகின்றனர்.