இந்தியா

வில்லன் முதலில் சாகமாட்டான்: முறைகேடு விசாரணை தொடர்பாக ரேவந்த் ரெட்டி பதில்..!
- காலேஷ்வரம் லிஃப்ட் பாசன திட்ட முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தப்படவில்லை என விமர்சனம்.
- விசாரணை நடைபெற்று வருகிறது என ரேவந்த் ரெட்டி சினிமாவை சுட்டிக்காட்டி விளக்கம்.
தெலுங்கானா மாநிலத்தில் சந்திரகேர ராவ் முதல்வராக இருந்தபோது, காலேஷ்வரம் லிஃப்ட் பாசன திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான விசாரணையில் சின்ன மீன்கள் (கீழ்மட்ட அதிகாரிகள்) மட்டுமே பிடிபட்டுள்ளன என விமர்சனம் எழுந்துள்ளது.
இதற்கு ரேவந்த் ரெட்டி பதில் அளிக்கையில் "சினிமாவில் வில்லன் முதலில் சாகமாட்டான். நீங்கள் படங்கள் பார்த்திருக்கிறீர்களா?. டெல்லியில் மதுபான கொள்கை மோசடியில் நீண்ட நாட்கள் கழித்துதான் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.
காலேஷ்வரம் லிஃப்ட் பாசன திட்டம் தொடர்பாக விசாரணை நடைபெற்றுதான் வருகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட அதிகாரிகள் வீட்டில் அளவுக்கு அதிகமான சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நீதிபதி கோஷ் தலைமையிலான கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது. உயர்மட்ட விசாரணை நடத்தி, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வருகிற 31ஆம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது" என்றார்.
காலேஷ்வரம் பாசன திட்டம் தொடர்பாக சந்திரசேகர ராவ் கோஷ் கமிஷன் முன் கடந்த 11ஆம் தேதி ஆஜரானார். முன்னாள் பாசன அமைச்சர் டி. ஹாரிஸ் ராவ் பலமுறை ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.