இந்தியா

அறிவியல் ரீதியானது அல்ல.. இந்தியை கட்டாயமாக்கிய அரசின் முடிவை நிராகரித்த மகாராஷ்டிர மொழிக் குழு!
- மும்மொழிக் கொள்கை "அறிவியல் ரீதியானது அல்ல" என்றும், இளம் மாணவர்கள் மீது தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் மொழிக் குழு எச்சரித்துள்ளது.
- தேவையான ஆசிரியர்களின் எண்ணிக்கை இருப்பதால், இந்தியைத் தேர்ந்தெடுத்தோம் என்று முதல்வர் கூறினார்.
மகாராஷ்டிராவில் தேசிய கல்விக் கொள்கையின்கீழ் மும்மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்துவதாக பாஜக கூட்டணி அரசு அறிவித்தது. இதன்படி முதற்கட்டமாக 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை ஏற்கனவே உள்ள மராத்தி, ஆங்கிலத்துடன், இந்தி மொழியை மூன்றாவது மொழியாகக் கட்டாயமாக்குவதாக அறிவிக்கப்பட்டது. இதை இந்தி திணிப்பு என எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில் இந்தியை மூன்றாவது மொழியாக அறிமுகப்படுத்தப்படுவதை மகாராஷ்டிரா அரசின் மொழி ஆலோசனைக் குழு வெளிப்படையாக எதிர்த்துள்ளது.
மேலும் தனது கடிதத்தில், இந்த நடவடிக்கை கல்வி ரீதியாக நியாயமானது அல்ல. மாணவர்களின் உளவியலுக்கு ஏற்றது அல்ல என்று தெரிவித்துள்ளது.
மும்மொழிக் கொள்கை "அறிவியல் ரீதியானது அல்ல" என்றும், இளம் மாணவர்கள் மீது தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் மொழிக் குழு எச்சரித்துள்ளது. அதற்குப் பதிலாக, மராத்தி உட்பட இரண்டு மொழிகள் மட்டுமே பன்னிரண்டாம் வகுப்பு வரை அமல்படுத்தப்பட வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைத்தனர்.
SCERT (மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்) இத்தகைய முடிவுகளை எடுப்பதற்கு முன்பு குழுவுடன் கலந்தாலோசித்திருக்க வேண்டும். எங்கள் உறுப்பினர்களில் பேராசிரியர்கள் மற்றும் மொழியியல் மற்றும் மொழி அறிவியலில் அங்கீகரிக்கப்பட்ட நிபுணர்கள் இருவரும் உள்ளனர்" என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்த பத்திரிகையாளர் கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், குழுவின் கடிதத்தைப் படிக்கவில்லை என்றும் இந்தி, மராத்திக்கு மாற்று அல்ல என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "மராத்தி கட்டாயம். ஆனால் தேசிய கல்விக் கொள்கையின் கீழ், மூன்று மொழிகளைக் கற்றுக்கொள்வது கட்டாயமாகும், அவற்றில் இரண்டு இந்திய மொழிகளாக இருக்க வேண்டும்.
எனவே அமைச்சர் தலைமையிலான மொழிக் குழு தங்கள் அறிக்கையைச் சமர்ப்பித்தபோது, இந்தி கற்பிக்க தேவையான ஆசிரியர்களின் எண்ணிக்கை எங்களிடம் இருப்பதால், இந்தியைத் தேர்ந்தெடுத்தனர்" என்று தெரிவித்தார்.