இந்தியா

மன்மோகன் சிங் 93-வது பிறந்தநாள்.. பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து
- 2004-2014 வரை இந்தியாவின் 13வது பிரதமராக மன்மோகன் சிங் செயல்பட்டார்.
- வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் அவரது வரலாற்றுப் பங்களிப்பு ஆகியவை நம்மை தொடர்ந்து வழிநடத்தும்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் நாட்டின் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் இன்று தனது 93வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
1931 செப்டம்பர் 26 பஞ்சாபில் சீக்கிய குடும்பத்தில் பிறந்த மன்மோகன் சிங் 1982-85 காலகட்டத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநராக பணியாற்றினார். பின் காங்கிரஸ் அரசில் 1991-96 காலகட்டத்தில் இந்தியாவின் நிதியமைச்சாராக பணியாற்றினார்.
இந்த காலத்தில் அவரின் தலைமையில் நாட்டில் முக்கிய பொருளாதார சீர்திருத்தங்கள் நிகழ்ந்தன. இதன் பின் 2004-2014 வரை இந்தியாவின் 13வது பிரதமராக மன்மோகன் சிங் செயல்பட்டார்.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, உள்ளிட்ட முக்கிய மற்றும் பொருளாதார சீர்திருந்தங்கள் அவரின் ஆட்சிக் காலத்தின் சிறப்புகளாக வரையறுக்கப்படுகிறது.
இந்நிலையில் அவரின் 93வது பிறந்தநாளை முன்னிட்டு தற்போதைய பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் பிறந்த தினத்தில் அவருக்கு வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன். அவரது நீண்ட நெடிய பொது வாழ்க்கையில் நாட்டுக்கு அவர் செய்த பங்களிப்பை நாம் நினைவு கூறுவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் பிறந்தநாளில் அவருக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன்.
தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கான அவரது துணிச்சலான முடிவுகள், வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் அவரது வரலாற்றுப் பங்களிப்பு ஆகியவை நம்மை தொடர்ந்து வழிநடத்தும்.
அவரது எளிமை, பணிவு மற்றும் நேர்மை ஆகியவை நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் ஒன்றாகும்" என்று தெரிவித்துள்ளார்.