இந்தியா

பஹல்காம் தாக்குதல் உளவுத்துறையின் தோல்வி: கர்நாடக மாநில அமைச்சர் பரமேஷ்வரா
- நாட்டில் மிகவும் வலுவான ராணுவ உளவுத்துறையை நாம் கொண்டுள்ளோம்.
- பல்வேறு நிலைகளில் அவை சிறப்பாக செயல்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் அருகே உள்ளது பைசாரன் பள்ளத்தாக்கு. அடர்ந்த பைன் மரக் காடுகள் மற்றும் மலைகளால் சூழப்பட்ட இந்த இடம் மினி ஸ்விட்சர்லாந்து என்று அழைக்கப்படுகிறது. பஹல்காம் மற்றும் பைசாரன் ஜம்மு-காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத்தலமாகும்.
இந்த பகுதியில் நேற்று திடீரென சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் உயிரிழந்தனர். தீவிரவாதிகள் ஒவ்வொருவரின் பெயரை கேட்டு, தாக்குதல் நடத்தியுள்ளனர். கொலை செய்யப்பட்ட அனைவரும் ஆண்கள் எனக் கூறப்படுகிறது.
2019ஆம் ஆண்டு புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்குப் பிறகு மிகப்பெரிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த கொடூர தாக்குதல் உளவுத்துறை தோல்வியாகும் என கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் ஜி. பரமேஷ்வரா கூறியதாவது:-
நாட்டில் மிகவும் வலுவான ராணுவ உளவுத்துறையை நாம் கொண்டுள்ளோம். பல்வேறு நிலைகளில் அவை சிறப்பாக செயல்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் எப்படி, எங்கிருந்து தாக்குதல் நடத்தப்பட்ட இடத்திற்கு வந்தார்கள் என்பதில் ஏன் உளவுத்துறை தோல்வி நடைபெற்றது என்பதுதான் முக்கிய கேள்வி.
மத்திய அரசு இந்த விசயத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்துக்கள் மட்டுமே குறிவைக்கப்பட்டுள்ளது இன்னும் கவலை அளிக்கிறது.
இவ்வாறு பரமேஷ்வரா தெரிவித்தார்.
மேலும், இது தேசிய பாதுகாப்பு மற்றும் நமது சமூகத்தின் பாதுகாப்பு பற்றிய கேள்வி. இதில் நாம் ஏன் அரசியலை கொண்டு வர வேண்டும். நாம் எந்த அரசியல் கட்சியின் பெயரையும் பயன்படுத்தக்கூடாது. நான் எந்த அரசியல் கட்சியின் பெயரையும் பயன்படுத்தவில்லை எனக் கூறியுள்ளார்.