இந்தியா

பீகார் சட்டசபை தேர்தலை புறக்கணிப்பதை தவிர வேறு வழியில்லை: தேஜஸ்வி யாதவ்
- பீகாரில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த ஆய்வு மூலம் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பெயர் நீக்கம்.
- குடியுரிமை சட்டத்தை மறைமுகமாக அமல்படுத்த பாஜக முயற்சி செய்வதாக குற்றச்சாட்டு.
பீகார் மாநிலத்தில் இந்த வருட இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கிடையே இந்திய தேர்தல் ஆணையம் பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்த ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக தகவல் தெரிவித்தது.
அதன்படி வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்படும். அப்போது வாக்காளர்கள் முறையான சான்றிதழ் வழங்க வேண்டும். ரேசன் கார்டு, ஆதார் அட்டை உள்ளிட்டவைகளை தவிர்த்து குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். ஜூலை 25ஆம் தேதிக்குள் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்றால் வாக்காளர் பட்டியலில் இடம்பெற முடியாது என தேர்தல் ஆணையம் காலக்கெடு நிர்ணயித்தது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. குடியுரிமை சட்டத்தை மறைமுகமாக தேர்தல் ஆணையம் மூலமாக பாஜக அமல்படுத்த முயற்சி செய்வதாக கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.
தேர்தல் ஆணையத்தின் SIR நடைமுறையால் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட இருக்கிறது. ஆகஸ்ட் 1ஆம் தேதி வரைவு பட்டியலை வெளியிடுகிறது. இதில் 50 லட்சம் பேர் பெயர் இடம்பெறாது. இவர்களில் பெரும்பாலானோர் இறந்தவர்கள், வெளி மாநிலத்திற்கு புலம் பெயர்ந்தவர்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் வாக்காளர் நீக்கப்பட்டதற்கு அம்மாநில முன்னாள் துணை முதல்வராக ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், "மெகா கூட்டணியில் (Mahagathbandhan) உள்ள அனைத்து கட்சிகளும் தேர்தலை புறக்கணிக்கனும். அதைத்தவிர வேறு வழியில்லை" எனத் தெரிவித்துள்ளார்.