இந்தியா

தெலுங்கானா ஆலை வெடிவிபத்து: ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என முதல் மந்திரி உறுதி
- இந்த வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.
- முதல் கட்டமாக உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலம் மடக் மாவட்டம் பஷ்யல்ராம் பகுதியில் ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ரசாயன தொழிற்சாலையில் மருந்துப் பொருட்களுக்கு தேவையான ரசாயனங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த ரசாயன தொழிற்சாலையில் மருந்து தயாரிப்பிற்கான ரசாயன கலவை எந்திரத்தில் நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.
தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்நிலையில், தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி சம்பவ பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அதன்பின், அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
ஆலை நிர்வாகத்திடம் பேசி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு பெற்றுத்தர உரிய நடவடிக்கையை அரசு எடுக்கும்.
ரூ.1 கோடி வழங்குவதற்காக அரசு மற்றும் நிறுவனம் தரப்பில் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளேன். தீவிர காயம் அடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சமும், சிகிச்சைக்கு பின் குணமடைந்து பணிக்கு திரும்பக்கூடிய அளவுக்கு காயம் அடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சமும் கிடைக்கும்.
முதல் கட்டமாக, அரசுத்தரப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தின்போது 143 பேர் பணியில் இருந்தனர். அதில் 56 பேர் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளனர். மீதமுள்ளவர்களைத் தேடும் பணி நடந்து வருகிறது. வேலை செய்தவர்களில் பலர் ஒடிசா, பீகார், ஆந்திர பிரதேசம், மத்திய பிரதேசம், தெலுங்கானா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.