இந்தியா

இது இந்துத்துவா-வின் வெற்றி.. காவியை அவமதித்தவர்களை கடவுள் மன்னிக்க மாட்டார் - பிரக்யா சிங் தாக்கூர்
- பிரக்யா, துறவறம் ஏற்று உலக உடைமைகளை துறந்ததால் அவரிடம் சொந்தமாக மோட்டார் சைக்கிள் இருந்திருக்க வாய்ப்பு இல்லை.
- இந்த வழக்கில் பகவான் எனக்காகப் போராடினார்.
மகாராஷ்டிராவில் 2008 செப்டம்பர் 29 அன்று மாலேகானின் பிக்கூ சௌக் மசூதி அருகே மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்ட குறைந்த சக்தி கொண்ட குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த வழக்கில் பாஜக முன்னாள் எம்.பி பிரக்யா சிங் தாக்கூர், முன்னாள் ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கர்னல் பிரசாத் ஸ்ரீகாந்த் புரோஹித் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பாஜக முன்னாள் எம்.பி பிரக்யா சிங் தாக்கூர் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது என்று குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் இறுதி வாதங்கள் முடிவடைந்த நிலையில், சிறப்பு புலனாய்வு நீதிமன்றம் (NIA ) இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரும் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டனர்.
குண்டுவெடிப்பு ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் பிரக்யா சிங் உடையது என நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டது என்றும் குண்டுவெடிப்புக்கு 2 வருடங்கள் முன் பிரக்யா துறவறம் ஏற்று உலக உடைமைகளை துறந்ததால் அவரிடம் சொந்தமாக மோட்டார் சைக்கிள் இருந்திருக்க வாய்ப்பு இல்லை என NIA நீதிமன்றம் தீர்ப்பில் சுட்டிக் காட்டியது.
குண்டுவெடிப்பில் பலியான 6 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.2 லட்சமும் காயமடைந்த அனைவருக்கும் ரூ.50,000 இழப்பீடாக வழங்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில் வழக்கிலிருந்து விடுதலையான பிரக்யா சிங் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "நான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதில் இருந்து என் வாழ்க்கையை சீரழிக்கும் வகையில் சித்திரவதை செய்யப்பட்டேன்.
17 ஆண்டுகள் துறவற வாழ்க்கை நடத்திய பிறகு மக்கள் என்னை பயங்கரவாதியாகக் கருதினர். நான் துறவியாக இருந்ததால் மட்டுமே உயிர் பிழைத்தேன். இந்த வழக்கில் பகவான் எனக்காகப் போராடினார்.
குறைந்த பட்சம் இந்த நீதிமன்றமாவது என் வாதத்தைக் கேட்டது. காவியை பயங்கரவாதி என்று அழைத்தவர்களை கடவுள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார். இந்த வழக்கில் வெற்றி பெற்றது நான் அல்ல, காவி தான். இது இந்துத்துவாவின் வெற்றி" என்று பிரக்யா கூறினார்.