இந்தியா

இளம்பெண் சடலத்திலிருந்து நூதனமாக நகையை திருடிய உ.பி. அரசு ஆஸ்பத்திரி வார்டு பாய் - வீடியோ வைரல்
- 26 வயதான மனைவி ஸ்வேதா சனிக்கிழமை ஒரு சாலை விபத்தில் இறந்தார்.
- வார்டு பாய் விஜய் ஒரு காதணியை போலீசாரிடம் ஒப்படைத்து, தரையில் அதைக் கண்டதாகக் கூறினார்.
உத்தரப் பிரதேசத்தில் மாவட்ட அரசு மருத்துவமனையில் பெண்ணின் சடலத்தில் இருந்த தங்க காதணிகளை வார்டு பாய் ஒருவர் திருடிய வீடியோ வைரலாகி வருகிறது.
தகவலின்படி, ஷாம்லி மாவட்டத்தில் பாப்ரி பகுதியின் ஹிரன்வாடா கிராமத்தைச் சேர்ந்த சச்சின் குமாரின் 26 வயதான மனைவி ஸ்வேதா சனிக்கிழமை ஒரு சாலை விபத்தில் இறந்தார். உடல் பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.
பாப்ரி காவல் நிலையப் பெண் போலீசார், பிரேத பரிசோதனைக்கு முன் உடலைப் பரிசோதிக்கத் தொடங்கியபோது, அந்தப் பெண்ணின் காதணிகள் காணாமல் போனதைக் கவனித்தனர்.
விசாரணையின் போது, வார்டு பாய் விஜய் ஒரு காதணியை போலீசாரிடம் ஒப்படைத்து, தரையில் அதைக் கண்டதாகக் கூறினார். அவரது வாக்குமூலங்களில் சந்தேகம் இருந்ததால், சிசிடிவி காட்சிகள் சரிபார்க்கப்பட்டது.
சிசிடிவி காட்சிகளில், வார்டு பாய் விஜய் அந்தப் பெண்ணின் உடலில் இருந்து காதணிகளைக் கழற்றியது பதிவாகியிருந்தது.
போலீசார் அவரை விசாரிக்க தேடியபோது, அவர் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றுவிட்டார். பெண்ணின் குடும்பத்தினர் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நபரை தேடி வருகின்றனர்.