இந்தியா

இன்னொரு மீரட் சம்பவம்: கணவரை கள்ளக் காதலனுடன் தீர்த்துக்கட்டிய மனைவி- உடலை சூட்கேசில் அடைத்து வீசிய கொடூரம்
- மீரட்டில் கடந்த மாதம் கணவனை கொலை செய்து டிரம்மில் அடைத்த சம்பவம் நடைபெற்றது.
- அதேபோல் துபாயில் இருந்து வந்த கணவனை கொலை செய்த மனைவி உடலை சூட்கேசில் அடைத்து வீசியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் கடந்த மாதம் வெளிநாட்டில் இருந்து வந்த கணவனை, கள்ளக் காதலனுடன் சேர்ந்து மனைவி கொலை செய்து டிரம்மில் உடலை போட்டு சிமெண்ட் வைத்து அடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவம் இந்தியாவை பயத்தில் நடுநடுங்க வைத்தது.
இந்த நிலையில் உத்தர பிரதேசம் கோரக்பூரில் அதேபோன்று வெளிநாட்டில் இருந்து வந்த கணவனை மனைவி கள்ளக் காதலனுடன் சேர்ந்து கொலை செய்து சூட்கேசில் அடைத்து வீசிய கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பதௌலி கிராமத்தைச் சேர்ந்தவர் நவுஷாத் அகமது (வயது 38). இவரது மனைவி ரஜியா. நவுஷாத் அகமது துபாயில் வேலைப் பார்த்து வந்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக சொந்த கிராமம் வந்துள்ளார்.
நவுஷாத் அகமது துபாயில் வேலை பார்த்தபோது ரஜியாவுக்கும், ரூமான் என்பவருக்கும் பழக்கம் இருந்துள்ளது. பின்னர் இது கள்ளக் காதலாக மாறியுள்ளது. கணவர் சொந்த கிராமம் திரும்பியதால் அவர்களது கள்ளக் காதலுக்கு இடையூறாக இருப்பதாக நினைத்துள்ளனர்.
இதனால் கணவனை தீர்த்துக்கட்ட கள்ளக் காதலனுடன் ரஜியா திட்டம் தீட்டியுள்ளார். இந்த திட்டத்திற்கு ரூமான் நண்பர் ஹிமான்ஷு உதவுவதாக தெரிவித்துள்ளார்.
இந்த மூன்று பேரும் சேர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நவுஷாத் அகமது கொலை செய்துள்ளனர். கொலை செய்ததுடன் உடலை இரண்டு துண்டாக வெட்டியுள்ளனர். வெட்டிய உடலை சூட்கேசில் வைத்து திணித்து 55 கி.மீ. தூக்கிச் சென்று பட்கவுலி என்ற கிராமத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் வீசிவிட்டு வந்துள்ளனர்.
விவசாயி காலையில் விவசாய நிலத்திற்கு செல்லும்போது, அங்கே ஒரு சூட்கேஸ் கிடப்பதை கண்டார். இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் சூட்கேஸை திறந்து பார்க்கும்போது இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்ட உடல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வெளிநாட்டில் இருந்து வரும்போது சூட்கேஸில் விமானம் பயணம் தொடர்பான டேக் ஒட்டப்பட்டிருக்கும். அந்த டேக் அகற்றப்படாமல் அப்டியே இருந்துள்ளது. அந்த டேக்கை வைத்து நவுஷாத் அகமது வீட்டை அடையாளம் கண்டு போலீசார் விசாரணை நடத்தினர்.
நவுஷாத் அகமது மனைவி முதலில் தனது கணவரை, சனிக்கிழமை இரவு முதல் காணவில்லை எனக் கூறியுள்ளார். பின்னர் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணையின்போது கணவரை காதலனுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் மேற்கண்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
வெளிநாட்டில் இருந்து வந்த கணவனை கள்ளக்காதலுடன் சேர்ந்து கொலை செய்ய சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.