இந்தியா

குருவாயூர் கோவிலுக்குள் வீடியோ: பா.ஜ.க. மாநில தலைவர் மீது வழக்குப்பதிவு
- கோவிலின் நடைப்பந்தலில் வீடியோ எடுக்க அனுமதி உள்ளது.
- வீடியோ காட்சிகளை தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கிறார்.
கேரள மாநிலம் குருவாயூரில் பிரசித்திபெற்ற கிருஷ்ணர் கோவில் இருக்கிறது. திருமணம் மற்றும் மத சடங்குகளுக்கு மட்டும் கோவிலின் நடைப்பந்தலில் வீடியோ எடுக்க அனுமதி உள்ளது. மற்ற நிகழ்வுகள் மற்றும் சாதாரண நேரங்களில் அங்கு வீடியோ எடுக்க அனுமதி கிடையாது.
இந்தநிலையில் பாரதிய ஜனதா கட்சியின் கேரள மாநில தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், குருவாயூர் கோவிலுக்கு சென்றிருந்தார்.
அப்போது அவர் கோவிலின் நடைப்பந்தல் (பாதை) மற்றும் தீபஸ்தம்பம் (விளக்கு கம்பம்) முன்பு வீடியோ எடுத்திருக்கிறார். அந்த வீடியோ காட்சிகளை தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கிறார்.
இதுகுறித்து கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் ஊடகக்குழு உறுப்பினர் அனூப் என்பவர் குருவாயூர் கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
ஐகோர்ட்டு உத்தரவை மீறி கோவில் வளாகத்தில் வீடியோ எடுக்கப்பட்டிருப்பதாக அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த புகாரின் அடிப்படையில் ராஜீவ் சந்திரசேகர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.