இந்தியா

மருத்துவத்துறையில் ஓர் அதிசயம்: கர்நாடக பெண்ணுக்கு உலகிலேயே புதிய வகை ரத்தம் கண்டுபிடிப்பு
- பெண்ணின் ரத்த மாதிரியை இங்கிலாந்தில் உள்ள சர்வதேச ரத்த வகை கண்டறியும் மையத்துக்கு அனுப்பினார்.
- 10 மாதங்களாக நடந்த சோதனையில் அந்த பெண்ணுக்கு இருப்பது உலகிலேயே யாருக்கும் இல்லாத புதிய வகை ரத்தம் என கண்டுபிடிக்கப்பட்டது.
உலகில் அதிசயங்கள் என்பது எப்போதும் மக்களை வியக்க வைக்கும். அதிலும் மருத்துவ துறையில் அதிசயம் என்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும். அந்த வகையில் தற்போது கர்நாடகத்தில் மருத்துவ துறையில் ஒரு அதிசயம் நடந்துள்ளது. பொதுவாக 'ஓ' பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் உள்ளிட்ட ரத்த வகைகளை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் கர்நாடகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு புதிதாக ஒரு வகையைச் சேர்ந்த ரத்தம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-
கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயது நிரம்பிய பெண் இதய அறுவை சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அதையடுத்து அவருக்கு அங்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவரது ரத்தம் 'ஓ ஆர்.எச். பாசிட்டிவ்' வகையைச் சேர்ந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால் வழக்கத்திற்கு மாறாக அவரது ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களும் வினைபுரியும் நிலையில் இருந்தது. பொதுவாக சிவப்பு அணுக்கள் வினைபுரியும் நிலையில் இருக்காது என்று கூறப்படுகிறது.
இதையடுத்து டாக்டர்கள் அந்த பெண்ணின் ரத்த மாதிரியை பெங்களூரு டி.டி.கே. ரத்த மையத்தில் அமைந்திருக்கும் அதிநவீன இம்முனோஹெமடாலஜி ரெபரென்ஸ் ரத்த பரிசோதனை மையத்துக்கு அனுப்பினர். அங்கு அந்த பெண்ணின் ரத்தத்தை பரிசோதனை செய்ததில் அவரது ரத்தம் பான்ரியாக்டிவ் ஆவது, அதாவது அவரது ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களும் வினைபுரியும் நிலையில் இருந்தது.
இதை அந்த ரத்த பரிசோதனை மையத்தில் டாக்டர் அங்கித் மாதுர் உறுதிப்படுத்தினார். பின்னர் அவர் அந்த பெண்ணின் ரத்த மாதிரியை இங்கிலாந்தில் உள்ள சர்வதேச ரத்த வகை கண்டறியும் மையத்துக்கு அனுப்பினார்.
அங்கு 10 மாதங்களாக நடந்த சோதனையில் அந்த பெண்ணுக்கு இருப்பது உலகிலேயே யாருக்கும் இல்லாத புதிய வகை ரத்தம் என கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ரத்த வகைக்கு சி.ஆர்.ஐ.பி.(கோமர் இந்தியா பெங்களூரு) என்று பெயரிடப்பட்டுள்ளது. உலகிலேயே இந்த வகை ரத்தம் உள்ள முதல் நபர் கோலார் பெண் தான் என்று அவர்களும் அறிவித்தனர். இது மருத்துவத்துறையில் அதிசயமாக பார்க்கப்படுகிறது.