இந்தியா

மது கொடுத்து 2 பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர்கள்
- வெகுநேரமாகியும் மாணவிகளுக்கு மயக்கம் தெளியாததால் வாலிபர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
- மாணவிகளுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்ததை தொடர்ந்து அவர்கள் மயக்கம் தெளிந்து எழுந்தனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் களக்கூட்டம் பகுதியில் தம்புரான்முக்கு பகுதியில் ஏராளமான ஓட்டல்கள் மற்றும் லாட்ஜூகள் இருக்கின்றன. அங்குள்ள ஒரு ஓட்டலுக்கு சம்பவத்தன்று 3 வாலிபர்கள் மற்றும் 2 மைனர் சிறுமிகள் வந்துள்ளனர்.
பள்ளி படிக்கும் அந்த சிறுமிகள், தங்களை அழைத்து வந்த வாலிபர்களுடன் சேர்ந்து மது குடித்ததாக தெரிகிறது. அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் போதை அதிகமாகி மாணவிகள் இருவரும் மயக்கமடைந்தனர்.
இதையடுத்து போதையை தெளியவைக்க முகத்தை கழுவ அறைக்கு அழைத்துச் செல்வதாக கூறிவிட்டு, மாணவிகள் இருவரையும் அங்குள்ள ஒரு அறையில் இருந்த குளியலறைக்கு வாலிபர்கள் தூக்கிச் சென்றுள்ளனர். அங்கு கொண்டுசென்று முகத்தை கழுவியபிறகும் மாணவிகளுக்கு மயக்கம் தெளியவில்லை.
அதனை பயன்படுத்தி குளியலறைக்குள் வைத்து மாணவிகள் இருவரையும் மயக்க நிலையிலேயே 3 வாலிபர்களும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். வெகுநேரமாகியும் மாணவிகளுக்கு மயக்கம் தெளியாததால் வாலிபர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதனால் அவர்கள் மாணவிகளை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். மேலும் மாணவிகள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறித்து, அவர்களது பெற்றோருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மாணவிகளின் பெற்றோர் மருத்துவமனைக்கு சென்றனர்.
மாணவிகளுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்ததை தொடர்ந்து அவர்கள் மயக்கம் தெளிந்து எழுந்தனர். அப்போது தங்களை 3 வாலிபர்களும் சேர்ந்து ஓட்டல் குளியலறையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த தகவலை மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர்.
அதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவிகளின் பெற்றோர், அது பற்றி தும்பா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் மாணவிகளை சீரழித்த வாலிபர்கள் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் திருவனந்தபுரம் சங்குமுகத்தை சேர்ந்த எபின் (வயது19), அபிலாஷ்(24), பைசர்கான்(38) ஆகியோர் என்பது தெரியவந்தது.
அதன்பேரில் 3 வாலிபர்களின் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டது. வாலிபர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் மது கொடுத்து மாணவிகள் இருவரையும் மயங்க செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிகிறது.
பள்ளி மாணவிகள் இருவருக்கு மது கொடுத்து மயங்க செய்து, ஓட்டல் குளியலறையில் வைத்து வாலிபர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் திருவனந்தபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.