புதுச்சேரி

புதுச்சேரியில் கடந்த 3 மாதத்தில் சாலை விபத்தில் 24 பேர் உயிரிழப்பு
- கடந்த ஜனவரி மாதம் 12-ந் தேதி புதுச்சேரி முழுவதும் ஹெல்மெட் கட்டாயம் சட்டம் அமலுக்கு வந்தது.
- புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் போலீசார் ஹெல்மெட் அணியாமல் வருபவர்களை பிடித்து அபராதம் விதித்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் ஆண்டுதோறும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப சாலை விபத்துகளில் உயிரிழப்புகளும் அதிகரித்து கொண்டு இருக்கிறது.
குறிப்பாக கடந்த 2020-ம் ஆண்டு முதல் புதுச்சேரியில் சாலை விபத்து 8 முதல் 12 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதில் உயிரிழப்புகள் 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதனை நாடு முழுவதும் ஒப்பிடுகையில் புதுச்சேரியில் உயிரிழப்பு அதிகமாக உள்ளது.
பைக் விபத்தில் கடந்த 2023-ம் ஆண்டு 140 பேர் உயிரிழந்துள்ளனர். 2024-ம் ஆண்டு 123 பேர் உயிரிழந் துள்ளனர். இதனால் இந்தாண்டு சாலை உயிரிழப்புகளை தடுப்பதற்காக ஜீரோ உயிரிழப்பு என்ற திட்டத்தை புதுச்சேரியில் அமல்படுத்த புதுச்சேரி போக்குவரத்து போலீசார் முடிவு செய்தனர்.
அதன்படி கடந்த ஜனவரி மாதம் 12-ந் தேதி புதுச்சேரி முழுவதும் ஹெல்மெட் கட்டாயம் சட்டம் அமலுக்கு வந்தது.
இதையடுத்து புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் போலீசார் ஹெல்மெட் அணியாமல் வருபவர்களை பிடித்து அபராதம் விதித்தனர். இதனால் அடுத்து சில நாட்கள் மட்டுமே மக்கள் குறைந்த அளவில் ஹெல்மெட் அணிந்தபடி சென்றனர். அதன்பிறகு போக்குவரத்து போலீசார் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியும், மக்கள் ஹெல்மெட் அணியாமல் சென்ற வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 3 மாதத்தில் 385 சாலை விபத்துகள் நடந்து இருப்பதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 2 சிறுவர்கள் உட்பட 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
புதுச்சேரி போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை உயிரிழப்புகளை தடுப்பதற்காக ஜீரோ உயிரிழப்பு என்ற திட்டத்தை அமல்படுத்தியும், 3 மாதத்தில் 24 பேர் விபத்தில் உயிரிந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.