புதுச்சேரி

புதுச்சேரி முதலமைச்சர் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
- ஏற்கனவே முதலமைச்சர் ரங்கசாமி வீட்டுக்கு 2 முறை இமெயில் மூலம் மிரட்டல் வந்தது.
- பிரெஞ்சு தூதரகம், முல்லா வீதியில் உள்ள பள்ளிவாசலுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவையில் கடந்த சில வாரங்களாக கவர்னர் மாளிகை, முதலமைச்சர் ரங்கசாமி வீடு, பிரெஞ்சு தூதரகம், ஜிப்மர் ஆஸ்பத்திரி மற்றும் அரசு அலுவலகங்கள், தனியார் விடுதிகளுக்கு தொடர்ந்து இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வருகிறது.
இமெயில் மூலம் மிரட்டல் விடுபவர் யார்? என்பதை கண்டறிவது சவாலாக உருவெடுத்துள்ளது. புதுவை சைபர் கிரைம் போலீசார் மத்திய சைபர் கிரமை் போலீசார் உதவியை நாடியுள்ளனர்.
மிரட்டல் புரளி என்றாலும், தொடர்ந்து போலீசார் மிரட்டல் வரும் இடங்களுக்கு சென்று வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாயுடன் சோதனை நடத்துகின்றனர். ஏற்கனவே முதலமைச்சர் ரங்கசாமி வீட்டுக்கு 2 முறை இமெயில் மூலம் மிரட்டல் வந்தது.
இந்நிலையில் இன்று காலையில் டி.ஜி.பி. அலுவலக மெயிலுக்கு முதலமைச்சர் ரங்கசாமியின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் வந்தது.
இதையடுத்து கோரிமேடு போலீசார் திலாசுப்பேட்டை மற்றும் கோரிமேடு அப்பா பைத்தியம் சுவாமிகள் கோவில் வளாகத்தில் உள்ள முதலமைச்சர் ரங்கசாமியின் வீடுகளில் சோதனை நடத்தினர். வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு இந்த சோதனை நடந்தது. இதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
இதனிடையே ஜிப்மர் மருத்துவமனைக்கும் இமெயில் மூலம் மிரட்டல் வந்தது. இதுதொடர்பாக ஜிப்மர் நிர்வாகம் கோரிமேடு போலீசுக்கு தகவல் கொடுத்தது. போலீசார் ஜிப்மரில் சோதனை நடத்தினர்.
இதேபோல பிரெஞ்சு தூதரகம், முல்லா வீதியில் உள்ள பள்ளிவாசலுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இங்கும் போலீசார் சோதனை நடத்தினர். இந்த தொடர் வெடிகுண்டு மிரட்டலை விடுக்கும் நபரை கண்டு பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.