புதுச்சேரி

கவர்னருடன் மோதல்: உறுதுணையாக இருப்போம்... முதலமைச்சர் ரங்கசாமியிடம் உறுதியளித்த MLA-க்கள்
- கடந்த சில மாதமாகவே இலைமறை காய்மறையாக இருந்த இந்த மோதல் சுகாதாரத்துறை இயக்குனர் நியமனத்தில் வெடித்தது.
- பா.ஜ.க. தரப்பில் முதலமைச்சரை சமாதானப்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் கைலாஷ் நாதனுக்கும், முதலமைச்சர் ரங்கசாமிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில மாதமாகவே இலைமறை காய்மறையாக இருந்த இந்த மோதல் சுகாதாரத்துறை இயக்குனர் நியமனத்தில் வெடித்தது. தனது அதிகாரத்துக்கு உட்பட்ட துறையில் இயக்குனரை கூட நியமிக்க முடியாமல் முதலமைச்சராக பதவியில் தொடர்வது தேவையா? என ரங்கசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யக் கூடும் என்ற தகவல்கள் பரவி வருகிறது. இது புதுவை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க. தரப்பில் முதலமைச்சரை சமாதானப்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது.
இந்த நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி இன்று காலை வழக்கம் போல கோரிமேட்டில் உள்ள அவரது வீட்டில் டென்னிஸ் விளையாடினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஆரோவில்லில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்றார்.
அங்கு அவரை துணை சபாநாயகர் ராஜவேலு, என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், கே.எஸ்.பி. ரமேஷ், பாஸ்கர், லட்சுமி காந்தன் ஆகியோர் சந்தித்து பேசினர்.
அப்போது முதலமைச்சர் ரங்கசாமி, ஆட்சி அதிகாரத்தில் இருந்தும் நமது விருப்பப்பட்டதை செய்ய முடியாத நிலை உள்ளது. சிறிய பிரச்சனைகளில் கூட கவர்னர் மாளிகையின் தலையீடு உள்ளது என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
அப்போது, நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு கட்டுப்படுவோம், உறுதுணையாக இருப்போம் என்று எம்.எல்.ஏ.க்கள் உறுதியளித்தனர். தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் அங்கிருந்து புறப்பட்டு, அமைச்சர் லட்சுமி நாராயணனை அவரின் வீட்டில் சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பேசினர்.
அமைச்சர் திருமுருகன், காரைக்கால் நெடுங்காடு தொகுதி எம்.எல்.ஏ. சந்திரபிரியங்கா ஆகியோரும் புதுவைக்கு விரைந்துள்ளனர். அமைச்சர் தேனீஜெயக்குமார் உடல் நலக்குறைவால் ஓய்வெடுத்து வருகிறார். கட்சியில் எடுக்கும் எந்த முடிவுக்கும் கட்டுப்படுவதாக அவர் எம்.எல்.ஏ.க்களிடம் தெரிவித்துள்ளார்.
புதுவை அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதால் ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் யாரும் சட்டசபைக்கு வரவில்லை.