புதுச்சேரி

புதுச்சேரியில் ஒப்பந்த ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்- பயணிகள் அவதி
- புதுச்சேரியில் அரசின் பெரும்பாலான பஸ்கள் இயங்கவில்லை.
- புதுவையை பொறுத்தவரை தனியார் பஸ்களே அதிகம்.
புதுச்சேரி:
புதுச்சேரி அரசின் சார்பு நிறுவனமான சாலை போக்குவரத்து கழகத்தின் (பி.ஆர்.டி.சி.) சார்பில் நகரம், கிராமம், வெளிமாநில பகுதிகளான சென்னை, பெங்களூரு, குமுளி, கடலூர், நாகர்கோவில், மாகி, திருப்பதி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
அரசு போக்குவரத்து கழகத்தில் சுமார் 40 ஊழியர்கள் மட்டும்தான் நிரந்தர பணியாளர்களாக உள்ளனர். டிரைவர், கண்டக்டர், பணிமனை ஊழியர்கள் என சுமார் 130-க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த ஊழியர்களாக உள்ளனர். இவர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி தொடர்ந்து பல ஆண்டாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அவ்வப்போது பணி நிரந்தரம் கோரி போராட்டமும் நடத்திவந்தனர். அரசு சார்பில் உறுதிமொழி அளித்தவுடன் போராட்டம் கைவிடப்படும்.
இந்த நிலையில் பணி நிரந்தரம் செய்யக்கோரி இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ஒப்பந்த ஊழியர்கள் அறிவித்திருந்தனர். இதற்காக சங்கத்தின் சார்பில் வேலைநிறுத்த நோட்டீசை நிர்வாகத்திடம் வழங்கியிருந்தனர்.
இதன்படி இன்று காலை ஒப்பந்த ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதனால் புதுச்சேரியில் அரசின் பெரும்பாலான பஸ்கள் இயங்கவில்லை. புதுச்சேரி நகரம், கிராமப்புறங்களுக்கு இடையே இயக்கப்படும் பஸ்கள் முழுமையாக ஓடவில்லை. காலை நேரத்தில் சென்னைக்கு மட்டும் நிரந்தர பணியாளர்கள் மூலம் பஸ்கள் இயக்கப்பட்டது.
நிரந்தர பணியாளர்கள் எண்ணிக்கையில் குறைவாகவும், ஷிப்ட் முறையில் பணியாற்றுவதாலும் அனைத்து பஸ்களையும் இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. புதுவையை பொறுத்தவரை தனியார் பஸ்களே அதிகம். தமிழக அரசின் பஸ்கள் புதுவையில் இருந்தும், அண்டை மாவட்டங்களில் இருந்தும் புதுச்சேரி வழியாக இயக்கப்படுகிறது.
இதனால் பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாகவில்லை. இருப்பினும் புதுச்சேரியின் கிராமப்புற பகுதிகளில் தனியார் பஸ்கள் செல்லாத பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் இயங்காததால் உட்புற கிராமப்புற மக்கள் புதுச்சேரிக்கு வந்து செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த ஊழியர்கள் புதிய பஸ்நிலையம் பின்புறம் உள்ள பணி மனை முன்பு திரண்டு பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.