புதுச்சேரி

புதுச்சேரி சட்டசபையில் தி.மு.க.-காங், எம்.எல்.ஏ.க்கள் தர்ணா: குண்டுகட்டாக தூக்கிச்சென்று வெளியேற்றம்
- சட்டசபையை குறைந்தபட்சம் 10 நாட்கள் நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
- சபாநாயகர் ஏம்பலம் செல்வம், தர்ணா செய்யும் உறுப்பினர்களை ஒட்டு மொத்தமாக சபையிலிருந்து வெளியேற்றும்படி சபை காவலர்களுக்கு உத்தரவிட்டார்.
புதுச்சேரி:
புதுச்சேரி சட்டசபை கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்தின் முதல் நிகழ்வாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் இரங்கல் குறிப்புகளை வாசித்தார். தொடர்ந்து அடுத்த அலுவலுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சென்றார். பேரவை முன்பு முதல்-அமைச்சர் தாக்கல் செய்யவேண்டிய ஏடுகளை சமர்பிக்கும்படி கோரினார்.
அப்போது சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு குறுக்கிட்டு, சுகாதாரமற்ற குடிநீர் விநியோகத்தால் எனது தொகுதியில் 6-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். அதுபற்றி விவாதிக்க வேண்டும். இதற்காக சபையை கூடுதல் நாட்கள் நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
அதேநேரத்தில் எதிர்கட்சித் தலைவர் சிவா தலைமையில் தி.மு.க., காங்கிரஸ், எம்.எல்.ஏ.க்களும் ஒட்டுமொத்தமாக எழுந்து, புதுச்சேரியின் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க சட்டசபையை குறைந்தபட்சம் 10 நாட்கள் நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
அப்போது சபாநாயகர் ஏம்பலம் செல்வம், முதல்-அமைச்சருடன் கலந்து பேசி சபையை நடத்துவது குறித்து தெரிவிக்கப்படும். தற்போது இருக்கையில் அமருங்கள் என கூறினார். ஆனாலும் தொடர்ந்து தி.மு.க., காங்கிரஸ், சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் பேசினர்.
புதுச்சேரியின் மக்கள் நல பிரச்சனைகள் குறித்து சட்டசபையில் விவாதிக்க வேண்டும். சட்டமன்ற அறிவிப்புகள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. அதற்கு ஒட்டுமொத்தமாக நீங்கள் காரணம் என கூறவில்லை. மத்திய அரசு ஏமாற்றுகிறது.
இதுதொடர்பாகவும் விவாதிக்க வேண்டும். குறைந்தபட்சம் 7 நாட்களாவது சபையை நடத்துங்கள் என பேசினார். அப்போதும் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், சபையை தொடர்ந்து நடத்த அமருங்கள். முதல்-அமைச்சருடன் பேசி சபையை நடத்துவது குறித்து முடிவெடுப்போம் என்றார்.
இந்த நேரத்தில் சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு தனது இருக்கையிலிருந்து வெளியேறி முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் சென்று ஒரு மனு அளித்தார். பின்னர் சபாநாயகர் இருக்கை முன்பு நின்று வாக்குவாதம் செய்தார். அப்போது எதிர்க்கட்சித்தலைவர் சிவா தலைமையில் தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு கோஷம் எழுப்பினர்.
இதனால் சபையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. சபையை நடத்த இடையூறாக இருந்தது. இதையடுத்து சபாநாயகர் ஏம்பலம் செல்வம், தர்ணா செய்யும் உறுப்பினர்களை ஒட்டு மொத்தமாக சபையிலிருந்து வெளியேற்றும்படி சபை காவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து சபை காவலர்கள் எதிர்க்கட்சித்தலைவர் சிவா, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், கென்னடி, செந்தில்குமார், சம்பத், நாகதியகராஜன், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத், சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு ஆகியோரை குண்டுக்கட்டாக தூக்கி சபையிலிருந்து வெளியேற்றினர். அப்போது எதிர்கட்சித்தலைவர் சிவா, அராஜகம் ஒழிக, ஜனநாயக படுகொலை என கோஷமிட்டார்.
தொடர்ந்து வெளியேற்றப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மைய மண்டப நுழைவுவாயில் அருகே தரையில் அமர்ந்து கோஷம் எழுப்பினர். இதனிடையே சபை நடவடிக்கைகள் தொடர்ந்தது.