புதுச்சேரி
மதுக்கடைகளின் உரிமம் கட்டணம் உயர்வு- புதுச்சேரியில் பீர், மது விலை உயர்கிறது
- ஏற்றுமதி, இறக்குமதி கலால் வரியும் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
- புதுவையில் கடந்த ஆண்டு கலால்துறை ரூ.1500 கோடி வருவாய் கிடைத்தது.
புதுச்சேரி:
புதுவையில் பிராந்தி, பீர், விஸ்கி உள்ளிட்ட மதுபானங்கள் விற்பனை செய்யும் கடைகள் 558 உள்ளன.
மது கடைகள் ஆண்டுக்கு ஒருமுறை உரிமம் கட்டணம் செலுத்தி புதுப்பிக்க வேண்டும். உரிமம் கட்டணத்தை கடந்த 2015-க்கு பிறகு 10 ஆண்டுகளாக அரசு உயர்த்தவில்லை. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உரிமம் கட்டணம் உயர்த்தப்பட்டு அறிவிப்பு வெளியானது. ஆனால், அரசாணை வெளியாகவில்லை. இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி உரிமம் கட்டணம் உயர்வு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி ஆண்டுக்கு 20 லட்சம் லிட்டர் மது உற்பத்தி செய்யும் ஐ.எம்.எப்.எல். மதுபான தொழிற்சாலைகளுக்கான உரிமக் கட்டணம் ரூ. 20 லட்சத்தில் இருந்து ரூ. 40 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு கூடுதல் 1 லட்சம் லிட்டர் மது உற்பத்திக்கும் ரூ.2 லட்சம் உரிமம் தொகை செலுத்த வேண்டும்.
எப்.எல். 1 என்ற மொத்த மதுபான விற்பனை கடைகளுக்கான உரிமம் கட்டணம் ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாகவும், எப்.எல். 2 சில்லரை மதுபான கடைகளுக்கான உரிமம் கட்டணம் ரூ.19 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோல் அனைத்து வகை உரிமம் கட்டணங்களும் இரட்டிப்பாக உயர்ந்துள்ளது
இதுபோல் ஏற்றுமதி, இறக்குமதி கலால் வரியும் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி கலால் வரியும் 2018-க்கு பிறகு உயர்த்தப்பட்டுள்ளது. பீர் ஒரு லிட்டருக்கு ரூ. 3.50 இருந்து ரூ.5 ஆகவும், மதுபானங்கள் லிட்டருக்கு ரூ.5-ல் இருந்து ரூ.7 ஆகவும் உயர்ந்துள்ளது. ஏற்றுமதி வரி 2001-ம் ஆண்டுக்கு பிறகு உயர்த்தப்பட்டுள்ளது. புதுவையிலிருந்து ஏற்றுமதியாகும் பீர்களுக்கு ஒரு லிட்டருக்கு 75 பைசாவில் இருந்து ரூ. 5 ஆகவும், மதுபானங்களுக்கு ரூ. 1-ல் இருந்து ரூ.7 ஆகவும் உயர்ந்துள்ளது.
புத்தாண்டு காலங்களில் மதுபானங்களை விற்க சிறப்பு அனுமதி பெற கட்டணம் ரூ. 5 ஆயிரத்தில் இருந்து ரூ. 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இவை அரசிதழிலும் முழுமையாக வெளியிடப்பட்டுள்ளது.
புதுவையில் கடந்த ஆண்டு கலால்துறை ரூ.1500 கோடி வருவாய் கிடைத்தது. நடப்பு ஆண்டு ரூ.1850 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது பல ஆண்டுகளுக்கு பிறகு உரிமக்கட்டணம், ஏற்றுமதி, இறக்குமதி வரி உயர்வு மூலம் கூடுதலாக ரூ.100 கோடி வரை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.