புதுச்சேரி

ஆன்லைனில் போலியான தீபாவளி பட்டாசு அறிவிப்புகளை நம்பி பணத்தை இழக்கும் பொதுமக்கள்
- மோசடி நடைபெறுகிறது என அறிந்தும் ஆன்லைனில் பணத்தை பலர் செலுத்தி ஏமாறுகின்றனர்.
- உண்மையான பட்டாசு விற்பனையாளர்கள் பெயரில் போலியான வலைத்தளங்களை உருவாக்கி இணைய வழி குற்றவாளிகள் மோசடியில் ஈடுபடுகின்றனர்.
புதுச்சேரி:
ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் பழக்கம் நாளுக்கு நாள் பொதுமக்களிடையே பெருகிவருகிறது.
குறிப்பாக பண்டிகை காலங்களில் வீட்டில் இருந்தே பொருட்களை வாங்க பொதுமக்கள் விருப்பம் காட்டுகின்றனர். ஆனால் இதில் மோசடி நடைபெறுகிறது என அறிந்தும் ஆன்லைனில் பணத்தை பலர் செலுத்தி ஏமாறுகின்றனர்.
இதில் பட்டாசு பொருட்களும் விதி விலக்கல்ல. இதனை தடுக்க சைபர் கிரைம் போலீசார் தொடர்ச்சியான எச்சரிக்கை மற்றும் அறிவுரை விடுத்தும் மீண்டும் மீண்டும் போலியான ஆன்லைன் பட்டாசு விளம்பரங்களை நம்பி பணம் செலுத்தி பணத்தை இழந்து வருகின்றனர்.
இந்த வருட தீபாவளி பண்டிகை வருவதற்கு இன்னும் ஒரு சில வாரங்களே உள்ள நிலையில் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் நிறைய புகார்கள் வந்து கொண்டு இருக்கிறது.
உண்மையான பட்டாசு விற்பனையாளர்கள் பெயரில் போலியான வலைத்தளங்களை உருவாக்கி இணைய வழி குற்றவாளிகள் மோசடியில் ஈடுபடுகின்றனர்.
எனவே பொதுமக்கள் இணையத்தில் எந்த பொருளை வாங்கும் முன்பும் அதனுடைய உண்மை, தன்மையையும் அதை விற்பவருடைய முழு விவரங்களையும் நன்கு சோதித்து பார்த்தபின் வாங்க வேண்டும் என்றும் இணைய வழி அறிவிப்புகளை நம்பி பணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம் என புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.