புதுச்சேரி

புதுச்சேரி சட்டசபை கூடியது
- சட்டசபையை 6 மாதங்களுக்கு ஒருமுறை கூட்ட வேண்டும் என்பது விதி.
- சபையை சபாநாயகர் செல்வம் திருக்குறள் வாசித்து தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் 10-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி மார்ச் 12-ந் தேதி ரூ.13 ஆயிரத்து 600 கோடிக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார். பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 27-ந் தேதி வரை (13 நாட்கள்) மாநில அந்தஸ்து வலியுறுத்தும் அரசு தீர்மானத்தை நிறைவேற்றி காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.
சட்டசபையை 6 மாதங்களுக்கு ஒருமுறை கூட்ட வேண்டும் என்பது விதி. அதன்படி இந்த மாதம் (செப்டம்பர்) சட்டசபை கூட்டப்பட வேண்டும்.
அதன்படி புதுச்சேரி சட்டசபையின் 6-வது கூட்டத்தொடரின் 2-வது பகுதி இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. சபையை சபாநாயகர் செல்வம் திருக்குறள் வாசித்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இதைத்தொடர்ந்து கோப்புகளை அந்தந்த துறை அமைச்சர்கள் தாக்கல் செய்கின்றனர்.
தொடர்ந்து ஜி.எஸ்.டி. திருத்த மசோதா, எளிய முறையில் தொழில் தொடங்க அனுமதி குறித்து மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. இன்று ஒருநாள் மட்டுமே சட்டசபை நடைபெறும் எனத்தெரிகிறது. எத்தனை நாள் சபை நடத்தப்படும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்து தெரிவிக்கப்படும்.