என் மலர்

    சிறப்புக் கட்டுரைகள்

    கர்ப்பிணி பெண்களுக்கு உணவு விஷயத்தில் ஏற்படும் சந்தேகங்கள்
    X

    கர்ப்பிணி பெண்களுக்கு உணவு விஷயத்தில் ஏற்படும் சந்தேகங்கள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அன்னாசிப்பழம் சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படும் என்று சொல்வார்கள்.
    • கிரகணம் தொடர்பாக கர்ப்பிணிகள் எல்லோருமே சில கேள்விகளை கேட்கிறார்கள்.

    பெண்கள் தங்களின் வாழ்க்கையில் எதிர்பார்க்கும் சிறந்த தருணம் என்பது கர்ப்ப காலம் மற்றும் பிரசவ நேரம் ஆகியவை ஆகும். இந்த காலகட்டம் பெண்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான பங்கை வகிக்கிறது. இந்த காலகட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு, வயதில் மூத்த பெண்கள் பலரும் பல்வேறு அறிவுரைகளை கூறுவார்கள். அவற்றில் எது நல்லது, எது கெட்டது என்பதை ஒவ்வொரு கர்ப்பிணி பெண்களும் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.

    கர்ப்பிணி பெண்களுக்கு உணவு விஷயத்தில் ஏற்படுகிற சந்தேகங்கள்:

    மேலும் கர்ப்ப காலத்தின்போது என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும், என்னென்ன உணவுகளை சாப்பிடக்கூடாது என்கிற சந்தேகங்களும் நிறைய கர்ப்பிணி பெண்களுக்கு இருக்கிறது.

    வயதில் மூத்த பெண்கள் பலரும் அறிவியல் அடிப்படை இல்லாமல் தங்களின் அனுபவத்தில் ஏற்பட்ட ஏராளமான விஷயங்களை கர்ப்பிணி பெண்களிடம் சொல்வதால்தான், கர்ப்ப காலத்தின்போது கர்ப்பிணி பெண்கள் பல விஷயங்களையும் தவறாக புரிந்து கொள்கிறார்கள். இது அவர்களுக்கு தவறான வழிகாட்டுதலாக அமைகிறது. இதைப்பற்றி இன்னும் சில சுவையான விஷயங்களை பார்க்கலாம். ஏனென்றால் இதெல்லாம் கர்ப்பிணிகள் அனைவரும் தெரிந்து கொள்ளக்கூடிய முக்கியமான விஷயங்கள் ஆகும்.

    பொதுவாகவே கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு மனதில் பலவிதமான குழப்பங்கள் இருக்கும். வயிற்றில் இருக்கும் குழந்தையை தான் கவனிப்பதற்கு கடைபிடிக்கும் விஷயங்கள் சரியா? தவறா? கருவில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக வளர என்ன செய்ய வேண்டும்? அதை எப்படி பாதுகாப்பாக பார்க்க வேண்டும்? அதற்காக என்ன சாப்பிட வேண்டும் என்று பலவிதமான சந்தேகங்களும், எதிர்பார்ப்புகளும் இருக்கும்.

    பல நேரங்களில் இதுபோன்ற விஷயங்களால் கர்ப்பிணி பெண்களின் மனதில் பெரிய அளவிலான அழுத்தங்களும் ஏற்படும். மேலும் கர்ப்ப காலத்தின்போது அவ்வப்போது எதிர்கொள்ளும் அல்லது உணரும் விஷயங்களால் ஒவ்வொரு நாளுமே கர்ப்பிணிகளுக்கு நிறைய சந்தேகங்கள் இருந்து கொண்டே இருக்கும்.

    ஆனால் இதை யாரிடம் போய் கேட்பது என்று தான் அவர்களுக்கு தெரியாது. ஏனென்றால் எல்லாம் அறிந்தவர்கள் என்று நிறைய பேர் சொல்வதையெல்லாம் அவர்கள் சரி என்று நினைப்பார்கள். ஆனால் சில நேரங்களில் அதில் அறிவியல் அடிப்படை என்பது இருக்காது. இதனால் அவர்கள் சொல்வது சில நேரங்களில் தவறாக அமையும். இந்த வகையில் கர்ப்ப காலத்தை பற்றி பலவிதமான தவறான தகவல்கள் இன்றைக்கு உலா வந்து கொண்டுதான் இருக்கிறது.

    கர்ப்பிணி பெண்கள் பப்பாளி பழம் சாப்பிடலாமா?

    இதில் உணவு விஷயத்தில் கர்ப்பிணிகள் நிறைய பேருக்கு பலவிதமான சந்தேகங்கள் ஏற்படுகிறது. கர்ப்பமாக இருக்கும் பெண்கள் உணவு விஷயத்தில் முதலில் என்னிடம் கேட்பது, 'டாக்டர்... கர்ப்பிணி பெண்கள் பப்பாளி சாப்பிடலாமா? பப்பாளி சாப்பிடக்கூடாது என்று பலரும் சொன்னார்கள். ஆனால் நான் அது தெரியாமல் பப்பாளி சாப்பிட்டு விட்டேன், எனக்கு கருச்சிதைவு ஏற்படுமா?' என்று கேட்பார்கள்.

    அவர்களுக்கு நான் சொல்லும் பதில், கர்ப்பிணி பெண்கள் பப்பாளி பழம் சாப்பிடலாம். அதில் எந்த தவறும் இல்லை. பப்பாளி பழத்தில் உள்ள போலிக் அமிலம் குழந்தையின் நரம்பு வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். அதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கர்ப்ப காலத்தில் நன்மை பயக்கும்.

    ஆனால் அதில் ஒரே ஒரு விஷயம், பப்பாளி காயாக இருக்கும்போது கர்ப்பிணி பெண்கள் சாப்பிடக்கூடாது. அதேபோல் பாதி பழுத்த பப்பாளியையும் அவர்கள் சாப்பிடக்கூடாது. ஏனென்றால் பப்பாளி காயாக இருக்கும்போது அதில் உள்ள லேடெக்ஸ் எனப்படும் பொருள் பல நேரங்களில் கர்ப்பிணிகளுக்கு வயிற்று வலியை உண்டாக்கலாம்.

    அது மென்மையான தசைகளை சுருங்கச் செய்யக்கூடிய தன்மை கொண்டது. இதனால் கர்ப்பப்பையில் எரிச்சலை ஏற்படுத்தலாம். அதனால் வயிற்றுவலி ஏற்படலாம். மேலும் கருப்பையை சுருங்க வைத்து சில நேரங்களில் கருச்சிதைவையும் ஏற்படுத்தலாம். இதுவே நன்றாக பழுத்த பப்பாளியில் இந்த பொருள் எதுவுமே இருப்பதில்லை. எனவே பப்பாளி பழமாக இருக்கும்போது கர்ப்பிணிகள் சாப்பிடலாம்.

    இதேபோல் சிலர் அன்னாசிப்பழம் சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படும் என்று சொல்வார்கள். ஆனால் அன்னாசிப்பழம் எந்த வகையிலும் கருச்சிதைவை உருவாக்குவதில்லை. இதெல்லாம் தவறான கருத்துக்கள். ஆனால் கர்ப்பிணிகள் அன்னாசிப்பழத்தை மிதமான அளவிலேயே சாப்பிட வேண்டும்.

    பல நேரங்களில் 'பேரிச்சம்பழம் சாப்பிட்டால் குழந்தை கருப்பாக இருக்கும் என்று சொல்கிறார்களே டாக்டர்' என்பார்கள். அதுவும் தவறுதான். பேரிச்சம்பழத்தில் இரும்பு சத்து இருக்கிறது, புரோட்டீன் இருக்கிறது, நிறைய நுண் ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. இவை அனைத்தும் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு தேவை. இதெல்லாம் அவர்கள் உட்கொள்கின்ற உணவுப் பழக்க வழக்க முறைகளில் தவறான கருத்துக்களாக சொல்லப்படுகின்றன. எனவே கர்ப்பிணி பெண்கள் இதில் தெளிவு பெற வேண்டும்.

    டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701

    கர்ப்பிணிகளுக்கு வாந்தி அதிகம் ஏற்பட்டால் பெண் குழந்தை பிறக்குமா?

    மேலும் பெண்கள் கர்ப்பகாலத்தில் எதிர்நோக்குகின்ற பலவிதமான பிரச்சினைகளுக்கும் ஏதாவது அறிவியல் அடிப்படை இருக்கிறதா என்பதை பார்க்கலாம். பொதுவாக கர்ப்பிணி பெண்கள் பலரும் வாந்தி எடுப்பது வழக்கம். ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போது அதிகாலையில், அதிக அளவில் வாந்தி எடுத்தால் அது பெண் குழந்தை என்று பலரும் கர்ப்பிணிகளிடம் சொல்கிறார்கள்.

    கருவில் இருக்கும் குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் தான் நிறைய வாந்தி வரும். அதிகமாக வாந்தி எடுத்துக்கொண்டே இருந்தால் அது பெண் குழந்தைகள் தான் என்று பலரும் சொல்லி விடுவார்கள். இது சரியா தவறா என்று பார்த்தால், இதுபற்றி கடந்த 2014-ம் ஆண்டு ஒரு ஆய்வு செய்தார்கள். அந்த ஆய்வில் கருவில் பெண் குழந்தையை சுமக்கின்ற பெண்களுக்கு, சற்று அதிகமாக வாந்தி வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்று தெரிவித்தார்கள்.

    அதற்காக ஆண் குழந்தையை சுமக்கும் பெண்களுக்கு வாந்தி வராது என்பது அர்த்தமல்ல. பொதுவாக பெண் குழந்தையை சுமந்தால் அதிகமாக வாந்தி வருகிறது என்பதை இந்த ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். 2 ஆயிரம் கர்ப்பிணி பெண்களிடம் ஆராய்ச்சி செய்து இதை கண்டுபிடித்து அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

    மேலும் கிரகணம் தொடர்பாக கர்ப்பிணிகள் எல்லோருமே சில கேள்விகளை கேட்கிறார்கள். 'டாக்டர்... சூரிய கிரகணம், சந்திர கிரகணத்தின்போது கர்ப்பிணிகள் பலரும் பரிசோதனைக்கு வருவதில்லை. சூரிய கிரகணத்தின்போது பிரசவத்துக்கு கூட கர்ப்பிணிகள் பெரும்பாலும் வெளியே வருவதில்லையே ஏன்?' என்பார்கள்.

    கர்ப்பமாக இருப்பதற்கும், சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணத்திற்கும் ஏதாவது அறிவியல் ரீதியான அடிப்படை இருக்கிறதா என்பதை பார்த்தால், இன்றும் பலவிதமான விஞ்ஞான முறைகளில் ஆய்வு செய்த வரைக்கும், சூரிய கிரகணத்தினாலோ அல்லது சந்திர கிரகணத்தினாலோ எந்த விதமான பாதிப்பும் கர்ப்பத்துக்கு ஏற்பட்டது இல்லை, கர்ப்பிணிகளுக்கும் ஏற்பட்டது கிடையாது.

    கிரகணத்தின்போது கர்ப்பிணி பெண்கள் வெளியே வருவது, அதனால் கர்ப்பம் பாதிக்கப்படுவது என்பது தவறான கண்ணோட்டம் தான். இதற்கு எந்த விதமான விஞ்ஞான ரீதியான அடிப்படையும் இல்லை. இதை நினைத்து யாரும் பயப்பட வேண்டியதில்லை.

    என்னிடம் சிகிச்சைக்கு வந்த ஒரு கர்ப்பிணி பெண், 'டாக்டர்... கிரகணத்தை கவனிக்காமல் நான் சிகிச்சைக்கு வந்து விட்டேன். எனது குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடுமோ?' என்று கேட்டார். கிரகணம் பற்றிய அவர்களின் பய உணர்வு தான் பிரச்சினைகளை உருவாக்கும். சூரிய கிரகணமும், சந்திர கிரகணமும் கர்ப்பத்துக்கு கண்டிப்பாக எந்தவித பாதிப்பையும் உருவாக்காது.

    கர்ப்பிணி பெண்கள் 'ஹேர் டை' பயன்படுத்தலாமா?

    தற்காலத்தில் பெண்கள் கேட்கிற ஒரு முக்கியமான விஷயம், 'டாக்டர்... நான் கர்ப்பமாக இருக்கும்போது 'ஹேர் டை' பயன்படுத்தலாமா?' என்பார்கள். குறிப்பாக வயது அதிகமாக இருக்கும் பெண்கள் கர்ப்பமான பிறகு எங்களிடம் பரிசோதனைக்கு வருவார்கள். அவர்கள் கர்ப்ப காலத்தின்போது 'ஹேர் டை' போடுவதில்லை, ஆனால் ஹேர் டை போடலாமா என்று கேட்கிறார்கள்.

    அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்கள், அந்த கர்ப்பிணிகளிடம், 'நீ ஹேர் டை போடக்கூடாது, ஹேர் டை போட்டால் குழந்தைக்கு பிரச்சினை வரும், குழந்தை வயிற்றிலே இறந்துவிடும் அல்லது குழந்தை குறைபாடுகளுடன் பிறக்கும்' என்று பயமுறுத்துகிறார்கள். இது சரியா, தவறா என்று பார்த்தால், பல ஹேர் டைகளில் இருக்கிற சில ரசாயனங்கள் சில நேரங்களில் கர்ப்பிணி பெண்களின் உடலில் சேரலாம். அவை ரத்தத்தில் கலந்தால் சில நேரங்களில் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.

    அந்த வகையில் ஒரு பெண் கர்ப்பம் அடைந்தவுடன் முதல் 3 மாதங்களுக்கு 'ஹேர் டை' பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. அதன்பிறகு அவர்கள் 'ஹேர் டை' போடுவதால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுவது குறைவாகிறது. எனவே கர்ப்ப காலத்தில் 'ஹேர் டை' பயன்படுத்துவது என்பது தவறு என்கிற கருத்து கிடையாது. கர்ப்பிணிகள் 3 மாதங்களுக்கு பிறகு கண்டிப்பாக 'ஹேர் டை' போடலாம்.

    கர்ப்பிணிகளுக்கு இதுபோல இன்னும் பல விஷயங்களில் ஏராளமான சந்தேகங்கள் இருக்கிறது. அதாவது, உடற்பயிற்சி செய்யலாமா? 2 மடங்கு சாப்பிட வேண்டுமா? அடிக்கடி வரும் வயிற்றுவலி, எப்படி படுத்து தூங்க வேண்டும்? தாம்பத்திய உறவு கொள்ளலாமா? காபி குடிக்கலாமா என்பது போன்ற சந்தேகங்கள் ஏற்படுகிறது. அந்த சந்தேகங்களுக்கான விளக்கங்களை அடுத்த வாரம் பார்க்கலாம்.

    Next Story
    ×