என் மலர்

    சிறப்புக் கட்டுரைகள்

    உதவிகளும் உபத்திரவங்களும்!
    X

    உதவிகளும் உபத்திரவங்களும்!

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குடும்பத்தை ஒழுக்கமும் நன்னடத்தையும் உள்ள குடும்பமாக உருவாக்க வேண்டிய பெரும்பொறுப்பு, குடும்பத்திலுள்ள ஒவ்வொரு தனிமனிதருக்கும் உண்டு.
    • பிரதிபலன் கருதாமல் செய்கிற உதவியே ஆகச் சிறந்த உதவி.

    உபத்திரவங்கள் வந்து சேர்ந்தாலும் உதவுவதற்கு எப்போதும் தயாராக இருக்கின்ற அன்பின் வாசகப் பெருமக்களே! வணக்கம்!.

    ஒவ்வொரு மனிதனின் உயிர் வாழ்க்கையும் சக மனிதனோடு ஒத்துப் போவதையும், சக மனிதனுக்கு உதவிசெய்து வாழ்வதைப் பொறுத்துமே அமைவு பெறுகிறது. தமிழில் 'உதவி' என்பதற்கும் 'நன்றி' என்பதற்கும் 'நன்மை செய்தல்' என்று ஒரே பொருள்தான். திருவள்ளுவர் தமது திருக்குறளில் இவ்விரண்டு சொற்களையும் ஒரே பொருண்மையில் பயன்படுத்தியுள்ளார்.

    "தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து

    முந்தி யிருப்பச் செயல்"

    "மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை

    என்நோற்றான்கொல் எனும் சொல்"

    ஆகிய குறள்களில் மகன் தந்தைக்கும், தந்தை மகனுக்கும் செய்ய வேண்டிய உதவிகளைக் குறித்து வள்ளுவர் சுட்டிக்காட்டுகிறார். ஒரு குடும்பத்து உறவுகளுக்குள்ளேயே பெற்றோர்கள் பிள்ளைகளுக்கும், பிள்ளைகள் பெற்றோருக்கும் நன்மைகள் செய்துகொள்வது சமூகக் கடமையாகும்.

    கல்வி கேள்விகளில், ஒழுக்க நடத்தைகளில் தாம் பெற்றெடுத்த பிள்ளைகள், மற்ற எல்லாரையும்விட முந்தியிருக்கும்படி செய்வது ஒவ்வொரு பெற்றோரின் சமூகக் கடமையாகும். அதேபோல, இப்படிப்பட்ட நல்ல பிள்ளைகளை உருவாக்க இவர்களது பெற்றோர்கள் என்ன தவம் இயற்றினார்களோ என்று பார்ப்பவர்கள் வியக்கும்படிப், பிள்ளைகள் சாதனைகளில் சாதித்துக் காட்ட வேண்டும். இந்தச் சமூகத்தை நல்ல சமூகமாகக் கட்டமைக்க வேண்டிய பொறுப்பு, சமூகத்தின் அங்கமாகத் திகழுகிற ஒவ்வொரு குடும்பத்திற்கும் உண்டு.

    அதேபோலக், குடும்பத்தை ஒழுக்கமும் நன்னடத்தையும் உள்ள குடும்பமாக உருவாக்க வேண்டிய பெரும்பொறுப்பு, குடும்பத்திலுள்ள ஒவ்வொரு தனிமனிதருக்கும் உண்டு. அந்த வகையில் தனிமனிதர் தொடங்கி, சமூக மனிதர் வரை ஒருவருக்கொருவர் நன்மை செய்து கொள்வதும், உதவி செய்துகொள்வதும் அவசியமான சமுதாயக் கடமையாகும்.

    'இந்தச் சமூகமும் மனிதர்களும் எனக்கு என்ன உதவிகள் செய்தார்கள்? நான் எதற்காக அவர்களுக்கு நன்மைகள் செய்ய வேண்டும்?' என்று சிலர் கேட்கக்கூடும்; அவர்களது கேள்வியிலும் சில நியாயங்கள் இருக்கவும் கூடும். ஆனாலும் பிரதிபலன் கருதாமல் செய்கிற உதவியே ஆகச் சிறந்த உதவி. நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகாயம் என்னும் ஐந்து பூதங்கள் சூழ்ந்துள்ள இந்த உலகத்தில் நாம் இயல்பாகப் பெறக்கூடிய உதவிகள் எண்ணற்றவை.

    நாம் இயற்கையிடமிருந்து பெறும் உதவிகளுக்குச், செய்நன்றியறிதலாய் வேறு எவற்றைத் திருப்பிச் செய்ய இருக்கிறோம்?. இயற்கைச் சூழலை அதன் இயல்புகெடாமல் பாதுகாத்தாலே போதும்; வேறு எதையும் நம் சக்திக்குமீறிச் செய்ய வேண்டாம். அதேபோல 'வாழையடி வாழையாக வந்த திருக்கூட்ட மரபாகிய' இந்த மானுட சுழற்சிப் போக்கிலே, எத்தனையோ ஆயிரமாயிரம் உதவிகளை நமது முன்னோர்கள், தங்களது அறிவின் துணைகொண்ட கண்டுபிடிப்புகளின் வாயிலாக நமக்கு வழங்கிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். நாமும் நம் பங்கிற்கு, இந்தச் சமூகத்திற்கு, எதிர்காலச் சந்ததிக்கு யாதானும் உதவிகளைச் செய்துவிட்டுச் செல்ல வேண்டாமா?.

    உதவிகளில் சிறந்த உதவி, செய்யாமல் செய்த உதவி என்கிறார் திருவள்ளுவர்.

    "செய்யாமற் செய்த உதவிக்கு வானகமும்

    வையமும் ஆற்றல் அரிது"

    சுந்தர ஆவுடையப்பன்


    அடுத்தவர் எந்த உதவியும் செய்யாமல், அவர்களுக்கு நாம் செய்கிற நன்மைக்கு ஈடாக இந்த மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் தந்தால்கூட ஈடாகாது என்கிறது திருக்குறள். அதே போலப், பிரதிபலன் கருதாமல் அடுத்தவர்க்கு யார் உதவுகிறார்களோ அந்த நன்மை கடலைவிடப் பெரியது என்று மற்றொரு குறள் இயம்புகிறது. அடுத்தவர்க்கு உதவும் குணத்தை மனிதன் இயற்கையிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

    என்ன பிரதிபலன் கருதி சூரியன் அன்றாடம் உதிக்கிறது? எதை அனுபவிப்பதற்காகக் காற்று வீசிக்கொண்டிருக்கிறது? எந்தப் பலனை எதிர்பார்த்து மழை பெய்து பயிர் விளைந்து கொண்டிருக்கிறது?. இவையெல்லாம் இயற்கை; இவற்றிற்கு யோசிக்கும் மனமில்லை; ஆனால் மனமுள்ள மனிதன், தனக்கு அடுத்தவர் உதவினாலும் அதற்குப் பிரதியாக உபத்திரவத்தையே பரிசாக வழங்குகிறானே அது ஏன்? என்று அனுபவசாலியான சிலர் கேட்கலாம். ஏன் இப்படி நமக்கு நன்மை செய்பவர்க்கும் இடையூறு செய்யும் மனோபாவம்?. சிலபேருக்கு அது பிறவிக்குணமாகவும் அமைந்து விடுகிறது.

    ஓர் ஆப்பிரிக்க நாட்டு நாட்டுப்புறக் கதை. மலைகளால் சூழ்ந்த ஒரு பெரிய காடு. அந்தக் காட்டில் திடீரென்று தீப்பிடித்துக் கொள்கிறது. காட்டுத் தீயில் அகப்பட்டு ஏகப்பட்ட விலங்குகள் வெந்து சாம்பலாயின. விலங்குகள், பறவைகள் பாதுகாப்பாக ஒளிவதற்கு ஒரு மரமுமில்லை; ஒரு புதருமில்லை. எல்லாம் மளமளவென்று தீப்பிடித்துச் சாம்பலாகிக் கொண்டிருந்தன. இந்தக் களேபரத்தில் ஒரு நல்லபாம்பும் சிக்கி கொண்டது. காட்டின் நிலப்பரப்பில் ஊர்ந்துகொண்டிருந்தால் மரணம் நிச்சயம் என்பதை உணர்ந்த பாம்பு, நிலத்தில் தெரிந்த ஒரு துவாரத்திற்குள் நுழைந்து விட்டது; அது பெரிய ஆழமான ஓட்டை என்பதால் பத்திரமாக அடியாழம்வரை சென்றுவிட்டது.

    அந்த நேரத்தில், காட்டின்மீது ஒரு கடும்மழை பெய்தது; நெருப்பு அணைந்து, காட்டின் வெப்பம் தணிந்தது. ஓட்டை வழியே பூமிக்குள் சென்றிருந்த நல்ல பாம்பு இப்போது, தரையின் மேலடுக்குக்கு வந்தது; ஆனால், வனப்பகுதியின் சமவெளிப் பகுதிக்கு வருவதற்கான ஓட்டை அடைபட்டிருந்தது. எப்படி வெளியே வருவது?. தீவிபத்தில் தப்பித்திருந்த சில விலங்குகள், பாம்பு சிக்கியிருந்த தரைக்கு மேல்பகுதியில் செல்வதும் திரும்புவதுமாக இருந்தன. அப்போது அந்த வழியில் வேடன் ஒருவனும் வந்தான். தரைக்குள்ளிருந்த பாம்பு, " நான் நல்லபாம்பு!, பூமியின் ஓட்டைக்குள் சிக்கிக் கொண்டுள்ளேன்! யாராவது ஓட்டைத் துவாரம் பார்த்து என்னை வெளியே எடுத்துக் காப்பாற்றி விடுங்கள்!" என்று மன்றாடியது.

    " நீ இப்படித்தான் சொல்வாய்!. உன்னைக் காப்பாற்றி வெளியேற்றினால், உடனே உதவி செய்த எங்களையே கடித்து வைத்துவிடுவாய்!. பெயர்தான் நல்ல பாம்பு; ஆனால் பாம்பின் குணம் கடித்து வைப்பதுதானே!" என்று கூறி எந்த விலங்கும் பாம்பைக் காப்பாற்றுவதாய் இல்லை. பார்த்துக்கொண்டிருந்த வேடன், " அவையெல்லாம் விலங்குகள்!; நான் ஆறறிவு உள்ள மனிதன்; நான் உன்னைக் காப்பாற்றுகிறேன்; ஆனால் கடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்துகொடு!" என்று பாம்பிடம் பேசினான்.

    "கட்டாயம் கடிக்க மாட்டேன்!; காப்பாற்று!" என்றது நல்லபாம்பு. பூமிக்குக் கீழே பாம்பு சிக்கியிருக்கும் அடுக்குக்கு அருகிலிருக்கும் ஒரு துவாரத்தின் வழியே விரலைவிட்டுப் பாம்பைப் பிடித்து இழுத்து, பூமிக்கு வெளியே கொண்டுவந்து விட்டான் வேடன். வெளியே வந்ததுதான் தாமதம், அடுத்த நொடியே வேடனைக் கொத்துவதற்கு நல்லபாம்பு ஒரு சீறு சீறியது. சுதாரித்து விலகிக்கொண்ட வேடன்," பார்த்தாயா! சொன்ன சொல்லைத் தவறுவதற்கு முயற்சிக்கிறாயே!, உதவி செய்ததற்கு உபத்திரவம் கொடுப்பதுதான் நீதியா?.

    எங்காவது நன்மை செய்தவர்களுக்குத் தீமையை யாராவது பரிசளிப்பார்களா?" என்று பாம்பிடம் கேட்டான். " அதெல்லாம் எனக்குத் தெரியாது . சீறுவதும் கொத்துவதும்தான் என்னுடைய குணம்!. அதைத்தான் நான் இப்போது செய்தேன்!" என்றது நல்ல பாம்பு. " சரி வா!. நகரத்திலிருக்கும் நீதிமான் அவர்களிடம் சென்று வழக்கை வைப்போம்! அவர் தீர்ப்பு வழங்கட்டும்!". என்று நீதிமானிடம் அழைத்தான் வேடன்; சரியெனப் பாம்பும் அவனுடன் கிளம்பியது.

    நகரத்திற்குச் செல்லுகிற வழியில் இருவரும் ஒரு குதிரையைச் சந்தித்தார்கள்; நடந்ததை விவரித்து, இது குறித்து உன்னுடைய தீர்ப்பு என்ன? என்று குதிரையிடம் கேட்டனர். "என்னைப் பொறுத்த வரை, என்மீது ஏறிச் சவாரி செய்பவருக்குத் தொந்தரவில்லாமல் சொகுசாகத்தான் சுமந்து செல்வேன்!; ஆனால் அதற்குப் பரிசாக நாலைந்து சவுக்கடி கொடுத்து இன்னும் விரைவாகப் போகச்சொல்லித் துன்புறுத்தவே செய்வார்கள்!" என்றது குதிரை. நல்ல பாம்பு வேடனைப் பார்த்துச் சிரித்தது.

    அடுத்து, செல்லும் வழியில் ஒரு கழுதையை இருவரும் பார்த்தார்கள்; இருவருக்கும் இடையேயுள்ள வழக்கைப்பற்றிக் கழுதையிடம் சொல்லி, அதனுடைய தீர்ப்பு என்ன? என்று கேட்டார்கள். "எவ்வளவு பொதி சுமந்தாலும் சாட்டைக்கம்பு அடியைத் தவிர வேறு எதனையும் நான் பரிசாகப் பெற்றதில்லை" என்று சோகமாக சொன்னது கழுதை.

    அடுத்து ஒரு பசுமாட்டை வழியில் பார்த்த வேடனும் நல்ல பாம்பும், உதவி செய்தவர்களுக்கு உபத்திரவம் தருபவர்கள் பற்றி உன்னுடைய அபிப்பிராயம் என்ன? என்று கேட்டார்கள். " அதை ஏன் கேட்கிறீர்கள்; நாங்கள் எங்கள் எஜமானர்களுக்கு மாடாய் உழைக்கிறோம்; ஆனாலும் கடைசியில் எங்களை அடிமாடாய்த்தானே விற்றுவிடுகிறது இந்த உலகம்!" என்று புலம்பித் தள்ளிவிட்டது பசுமாடு.

    "குதிரை, கழுதை, பசுமாடு ஆகியவை கூறிய நடைமுறைத் தீர்ப்புகளைக் கேட்டோம்.

    எல்லாமே எனக்குச் சாதகமானவை. இனிமேலுமா நகரத்திற்குச் சென்று நீதிமானைப் பார்க்க வேண்டும்?" கேட்டது நல்ல பாம்பு. "இதோ நகரம் வரப்போகிறது. அவரும் என்ன தீர்ப்புச் சொல்கிறார் என்று பார்ப்போம்" என்று விடாமல் பாம்பை அழைத்துக்கொண்டு நடந்தான் வேடன்.

    வழக்கை விசாரித்த நீதிமான், சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்த்தபின் தீர்ப்புச் சொல்கிறேன் என்றார். மூவரும் தீப்பிடித்த வனப்பகுதிக்குள் சென்றனர். சம்பவம் எப்படி நடந்தது என்பதை நிகழ்த்திக் காட்டச் சொன்னார் நீதிமான்.

    பாம்பு சிக்கியிருந்த பொந்துக்குள் சிரமப்பட்டு உள்ளே நுழைந்தது; என்னைக் காப்பாற்றுங்கள்! என்று கத்தியது. காப்பாற்றினால் கடிக்க மாட்டேன் எனச் சத்தியம் பண்ணச் சொல்லி வேட்டுவன் கேட்டான். சரி என்றது பாம்பு. காப்பாற்ற பொந்துக்குள் வேடன் கையை விட்டான். இப்போது அவனது கையை நீதிமான் பிடித்து இழுத்துத் தடுத்துவிட்டார். உதவி பெறுகிறவர் அந்த உதவியின் மதிப்பைத் தெரிந்தவராக இருந்தால் தான் நன்றியோடு இருப்பார்; இல்லையென்றால் உபத்திரவங்களையே செய்வார்.

    இன்று முழுவதும் பாம்பு பொந்துக்குள்ளேயே கிடக்கட்டும்; பசியில் வாடட்டும்; பிறகு காப்பாற்று; நிச்சயம் அதன்பின் உன்னிடம் அன்போடு நடந்து கொள்ளும்!" என்றார் நீதிமான். ஆம் திருவள்ளுவர் குறிப்பிடுவதைப்போல,

    "உதவி வரைத்தன்று உதவி உதவி

    செயப்பட்டார் சால்பின் வரைத்து"

    உதவியைப் பெறுகிறவரின் சான்றாண்மைக் குணத்தைப் பொறுத்தே, சிறிய உதவிகூடப் பெரும் உபகாரமாய் மாறும். தகுதியில்லாதவர்க்குச் செய்யும் உதவி, திரும்பவும் நமக்கு உபத்திரவமாகவே வந்து சேரும்.

    தொடர்புக்கு 94431 90098

    Next Story
    ×