சிறப்புக் கட்டுரைகள்

ரஜினியின் ரகசிய ஆன்மீகம்- அருண் ஓட்டலில் குடியேறினார்!
- அருண் ஓட்டலுக்கு வருவதற்கு சிவாஜி ராவ் சம்மதித்தார்.
- அரசியல்வாதிகளும் அங்கு அடிக்கடி கூட்டங்கள் நடத்துவது உண்டு.
பெங்களூரில் இருந்து சிவாஜி ராவ் புறப்பட்டபோது அவருக்கு ராஜ்பகதூர் பல அறிவுரைகளை சொல்லி இருந்தார். குறிப்பாக புகை பிடிப்பதை கண்டிப்பாக குறைக்க வேண்டும். இதனால் பணம் மிச்சப்படும் என்று அறிவுறுத்தி இருந்தார். ஆனால் சிவாஜி ராவால் இந்த அறிவுரையை கடைபிடிக்க இயலவில்லை.
அதே சமயத்தில் ராஜ்பகதூர் கூறியிருந்த மற்றொரு அறிவுரை சிவாஜி ராவ் மனதுக்குள் அடிக்கடி வந்து போனது. திரைப்படக் கல்லூரி வாழ்க்கைக்கு தேவையான பணத்தை சம்பாதிக்க வாரக் கடைசி நாட்களில் பெங்களூருக்கு வந்து அரசு போக்குவரத்து கழகத்தில் கூடுதல் நேரம் பணிபுரிந்து பணம் சம்பாதிக்கலாம் என்று ராஜ்பகதூர் கூறி இருந்தது நினைவுக்கு வந்தது.
எனவே சிவாஜி ராவ் வாரக் கடைசி நாட்களில் பெங்களூருக்கு சென்று கூடுதல் நேரம் பணிபுரிந்து சென்னைக்கு திரும்பி வருவதை வழக்கத்தில் வைத்திருந்தார். என்றாலும் புதிய உடை வாங்க முடியாத நிலையில்தான் சிவாஜி ராவ் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது.
இதற்கிடையே திரைப்படக் கல்லூரியில் மாணவர்கள் அனைவரும் சகஜமாக பழகத் தொடங்கி இருந்தனர். ஒவ்வொருவரின் வாழ்க்கை பின்னணி மற்றவர்களுக்கு தெரிய வந்தது. இதனால் நண்பர்களுக்குள் நட்புணர்வு அதிகரித்தது. இப்படியே ஒரு மாதம் கடந்து இருந்தது.
இந்த நிலையில்தான் சிவாஜி ராவ் பற்றிய தகவல்களை மற்ற நண்பர்கள் தெரிந்துக் கொள்ள ஆரம்பித்தனர். அப்போது சிவாஜி ராவ் சாதாரண விடுதி ஒன்றில் தங்கி இருந்து கஷ்டப்படுவது அவரது வகுப்பு தோழர்களான வேணுகோபால், ரவீந்திரநாத், ரகுநந்தன் ஆகியோருக்கு தெரிய வந்தது.
ஒருநாள் வேணுகோபாலும், ரவீந்திரநாத்தும் திடீரென சிவாஜி ராவ் தங்கியிருந்த விடுதிக்குள் சென்றனர். அங்கு சிவாஜி ராவ் ஒரு பாயை விரித்து தரையில் தூங்கும் நிலையை கண்டனர். அவர்களுக்கு கடும் அதிர்ச்சியாகி விட்டது.
சிவாஜி ராவை எழுப்பி, "டேய் இந்த அறையில் எப்படிடா தங்கி இருக்கிறாய்? ஏற்கனவே வெளியில் வெயில் தாக்கம் தாங்க முடிய வில்லை. உள்ளே அடுப்பு வெப்பம் வேறு வருகிறது. இந்த கடுமையான வெப்பத்தில் எப்படி தங்கி இருக்கிறாய்? சூடு பிடித்தே உடல்நலம் கெட்டு போய் விடுமே?" என்றனர்.
சிவாஜி ராவ் தலையை குனிந்து கொண்டார். கண்களில் கண்ணீர் மல்கி இருந்தது. முதல் ஒரு நிமிடம் மவுனமாக இருந்தார். பிறகு அவர், "நான் வசதியான வீட்டு பையன் இல்லை. சாதாரண கண்டக்டர் வேலை பார்த்து வந்தேன். குடும்பத்தில் யாருக்கும் அவ்வளவு வசதி கிடையாது. நண்பர்கள்தான் உதவி செய்கிறார்கள். அப்படி இருக்கும் போது நான் எப்படி சற்று வசதியான வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியும்?
எனக்கு இதை விட்டால் வேறு வழி தெரியவில்லை. சென்னையில் எனக்கு வேறு யாரையும் தெரியாது. சென்னையில் உறவினர்களும் கிடையாது. நான் எங்கு போக முடியும்? எனக்கு இந்த இடம் கிடைத்ததே பெரிய விஷயம். எனவேதான் இங்கு தங்கி விட்டேன்.
இங்கேயே எனக்கு காலை சாப்பாடு தருகிறார்கள். இரவிலும் உணவு கிடைக்கிறது. என் கையில் இருக்கும் பணத்துக்கு இதுதான் கட்டுப்படி ஆகிறது. எனவேதான் இந்த விறகு அடுப்பு வெப்பத்தை கண்டு கொள்ளாமல் இங்கு தங்கியிருந்து சமாளித்து வருகிறேன்" என்றார்.
சிவாஜி ராவ் சொல்ல... சொல்ல... வேணு கோபாலுக்கு மிகவும் வேதனையாகி விட்டது. இன்னும் சொல்லப் போனால் முதல் முதலாக அவருக்கு சிவாஜி ராவ் மீது இரக்கம் பிறந்தது. ஒரு வாழ்க்கை லட்சியத்துக்காக எந்த அளவுக்கு கஷ்டப்படுகிறார் என்று பிரமித்துப் போனார்.
இப்படிப்பட்ட நண்பனுக்கு உதவி செய்ய வேண்டும் என்று அவரது உள்மனது விடாப்பிடியாக சொன்னது. அடுத்த நிமிடமே அவர், "சிவாஜி ராவ் இனி நீ இங்கு இருக்க வேண்டாம். நாங்கள் எல்லோரும் அமைந்தகரையில் உள்ள அருண் ஓட்டலில் தங்கி இருக்கிறோம். நீயும் எங்களுடன் வந்து அங்கு தங்கிக் கொள்ளலாம்" என்றார்.
ஆனால் சிவாஜி ராவ் அதை ஏற்கவில்லை. வேண்டாம் வேணுகோபால் எனக்கு அது சரிப்பட்டு வராது என்றார். ஆனால் வேணுகோபால் விடவில்லை. இப்போதே புறப்படு என்று வலியுறுத்தினார். அப்போது ரவீந்திரநாத் முகம் மட்டும் மாறியது. அவருக்கு சிவாஜி ராவை அமைந்தகரை அருண் ஓட்டலுக்கு அழைத்துச் செல்ல விருப்பம் இல்லை.
ஏற்கனவே அவர் இருந்த அறையில் 3 பேர் இருந்தனர். எனவே சிவாஜி ராவ் வந்தால் உள்ளே தங்குவதற்கும், தூங்குவதற்கும் சிரமமாக இருக்குமோ என்று நினைத்தார். அவர் வேணுகோபாலை சற்று தொலைவுக்கு அழைத்துச் சென்றார். சிவாஜி ராவை ஓட்டலுக்கு கூப்பிடாதே. அவனை அங்கு வைத்து நம்மால் சமாளிக்க இயலாது. அவன் இங்கேயே இருக்கட்டும் என்று ரவீந்திரநாத் கூறினார்.
ஆனால் வேணுகோபால் அதை ஏற்கவில்லை. சிவாஜி ராவை எப்படியாவது அருண் ஓட்டலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். எனவே சிவாஜி ராவிடம் புறப்படு... புறப்படு என்று நச்சரித்துக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்துக்குப் பிறகு அருண் ஓட்டலுக்கு வருவதற்கு சிவாஜி ராவ் சம்மதித்தார்.
மறுநாளே அந்த விடுதி அறையை காலி செய்து விட்டு சிவாஜி ராவ் அந்த ஒரே ஒரு பையை எடுத்துக் கொண்டு அமைந்தகரை அருண் ஓட்டலுக்கு வந்து சேர்ந்தார். அந்த ஓட்டல் நான்கு மாடிகளுடன் பிரமாண்டமாக கட்டப்பட்ட ஓட்டல் ஆகும்.
சென்னையில் 1970-களில் இருந்த புகழ் பெற்ற ஓட்டல்களில் ஒன்றாக அமைந்தகரை அருண் ஓட்டல் இருந்தது. வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து வரும் முக்கிய பிரமுகர்கள் அங்குதான் தங்குவார்கள். அரசியல்வாதிகளும் அங்கு அடிக்கடி கூட்டங்கள் நடத்துவது உண்டு.
எனவே அருண் ஓட்டலை பார்த்ததும் சிவாஜி ராவுக்கு பிரமிப்பாக இருந்தது. வேணுகோபால் மற்றும் 16 திரைப்படக் கல்லூரி மாணவர்கள் அங்குதான் தங்கி இருந்தனர். 18-வது நபராக அந்த ஓட்டலுக்குள் சிவாஜி ராவ் காலடி எடுத்து வைத்தார். அந்த ஓட்டலில் 3-வது மாடியில் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் அடுத்தடுத்த அறைகளில் தங்கி இருந்தனர்.
சிவாஜி ராவை வேணுகோபால் தனது அறையில் தங்கிக் கொள்ளும்படி கூறினார். அந்த அறையில் ஏற்கனவே 3 பேர் இருந்தனர். சிவாஜி ராவ் 4-வது நபராக அந்த அறைக்கு சென்றார். இதன் மூலம் சிவாஜி ராவுக்கு பிரச்சினை இல்லாமல் தூங்குவதற்கு ஒரு இடம் கிடைத்து விட்டது.
அருண் ஓட்டலில் அறை எண் 324 என்பதுதான் சிவாஜிராவ் வசித்த அறையாகும். 10க்கு15 என்ற அளவில் அந்த சிறிய அறை இருந்தது. ஏற்கனவே இருந்த 3 பேரில் 2 பேர் மட்டும்தான் கட்டிலில் படுத்து தூங்கும் வசதி பெற்று இருந்தனர். இதனால் சிவாஜி ராவ் அந்த அறையில் கீழே தரையில்தான் படுத்து தூங்க வேண்டியதாயிற்று.
அந்த அறையை வேணுகோபாலும், ரவீந்திர நாத்தும் மிக மிக சுத்தமாக வைத்து இருந்தனர். ஒரு கட்டில், மூலையில் ஒரு மேஜை. துணி அடுக்கி வைப்பதற்கு அலமாரி என்று அந்த அறை கச்சிதமாக காணப்பட்டது. விறகு அடுப்பு வெப்பத்தில் தூங்கி பழக்கப்பட்டு இருந்த சிவாஜி ராவுக்கு அந்த அறை சொர்கமாக தெரிந்தது.
அந்த அறைக்கு அருண் ஓட்டல் நிர்வாகம் மாத வாடகைக்காக ரூ.175 நிர்ணயம் செய்து இருந்தது. வேணுகோபாலும், அவருடன் இருந்த மற்ற 2 பேரும் சரிசமமாக பணம் கொடுத்து அந்த வாடகையை செலுத்தி வந்தனர். அதாவது ஒவ்வொரு மாதமும் அவர்கள் ஓட்டலில் தங்குவதற்கு 60 ரூபாய் செலவு செய்தனர்.
சிவாஜி ராவின் ஏழ்மை நிலை வேணுகோபாலுக்கு தெரிந்ததால் அவர் அதிக வாடகையை சிவாஜிராவிடம் கேட்கவில்லை. வாடகை பணத்துக்காக அவர் வலியுறுத்தவில்லை. என்றாலும் நண்பர்கள் நிர்பந்தம் செய்ததால் சிவாஜி ராவிடம் இனி மாத வாடகைக்காக 40 ரூபாய் தந்தால் போதும் என்று கூறி விட்டார்.
இதைக் கேட்டதும் சிவாஜி ராவ் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. திரைப்படக் கல்லூரியில் படிக்கும் இந்த 2 ஆண்டுகளிலும் நிம்மதியாக இங்கு தங்கி இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார். அமைந்தகரையில் இருந்து மாநகர டவுன் பஸ்சில் ஜெமினி பாலம் வரை சென்று வரலாம் என்று சிவாஜி ராவ் திட்டமிட்டுக் கொண்டார்.
கல்லூரிக்கு கட்டணம் கட்டியாகி விட்டது. தங்குவதற்கு நல்ல இடமும் கிடைத்து விட்டது. ஆனால் சாப்பாடு சிவாஜி ராவுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருந்துக் கொண்டே இருந்தது. திரைப்படக் கல்லூரி கேண்டினில் தினமும் சாப்பிடுவது மிகப்பெரிய போராட்டமாக அவருக்கு இருந்தது.
நல்ல சாப்பாடு கிடைத்தால் நன்றாக இருக்குமே? என்று சிவாஜி ராவ் மனதுக்குள் ஏங்கினார். அதற்கும் அவர் நம்பி வணங்கிய ராகவேந்திரர் சுவாமிகள் வழி காட்டினார். அவரது திரைப்படக் கல்லூரி நண்பர் ரகுநந்தன் மூலம் அதற்கான வழி பிறந்தது.
ஒரு நாள் ரகுநந்தனிடம் சிவாஜிராவ் மனம் விட்டு பேசிக்கொண்டிருந்தார். நீ எங்கு தங்கி இருக்கிறாய்? என்று கேட்டார். அதற்கு ரகுநந்தன், "திரைப்படக் கல்லூரி அருகே இருக்கும் உட்லண்ட்ஸ் ஓட்டலில் எனது உறவினர் சங்கர்ராவ் மானேஜராக இருக்கிறார்.
எனவே நான் அந்த ஓட்டலிலேயே தங்கி இருக்கிறேன்" என்று கூறினார். இதைக் கேட்டதும் சிவாஜி ராவுக்கு ஆச்சரியமாக இருந்தது. ரகுநந்தன் தொடர்ந்து பேசுகையில் திரைப்படக் கல்லூரி படிப்பு நேரம் போக அந்த ஓட்டலில் வரவேற்பாளராக பணிபுரிவதாகவும் கூறினார். அதில் கிடைக்கும் பணத்தை வைத்து திரைப்படக் கல்லூரி கட்டணம் செலுத்துவதாகவும் தெரிவித்தார்.
அது மட்டுமின்றி உட்லண்ட்ஸ் ஓட்டலிலேயே தனக்குரிய சாப்பாட்டையும் பார்த்துக் கொள்வதாக ரகுநந்தன் கூறினார். இதைக் கேட்டதும் சிவாஜி ராவுக்கு மிகவும் உற்சாகமாகி விட்டது. நானும் அங்கு சாப்பிட வரட்டுமா? என்று சிவாஜிராவ் குழந்தைப் போல அப்பாவித்தனமாக கேட்டார்.
அதற்கு ரகுநந்தன் என்ன சொன்னார்? என்பதை நாளை பார்க்கலாம்.