சிறப்புக் கட்டுரைகள்

ரஜினியின் ரகசிய ஆன்மீகம்- நண்பர் அறிவுரையால் மாற்றம்!
- ராஜ் பகதூரின் வார்த்தைகள் சிவாஜி ராவ் மனதில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
- அருண் ஓட்டலில் ஒரு அறையில் 3 பேர்தான் தங்க வேண்டும் என்று விதிமுறை வகுக்கப்பட்டு இருந்தது.
சிவாஜி ராவுக்கு திரைப்படக் கல்லூரி வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக பழகி விட்டது. அதுபோல அமைந்தகரை அருண் ஓட்டலில் நண்பர்களுடன் தங்கி இருந்து கல்லூரிக்கு வந்து செல்வதும் பழக்கத்துக்கு வந்து இருந்தது. நடிப்பு விஷயமாக சொல்லிக் கொடுக்கப்பட்ட ஒவ்வொன்றையும் சிவாஜி ராவ் கூர்மையாக கவனித்து மனதுக்குள் உள்வாங்கிக் கொண்டார்.
நடிப்பு பயிற்சி மற்றும் நடன பயிற்சி வகுப்புகளிலும் தவறாமல் பங்கேற்றார். நடிப்பு மீது அவருக்கு இருந்த ஆர்வம் திரைப்படக் கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்களிடம் அவர் மீது நல்ல மதிப்பை உருவாக்கி இருந்தது. எல்லாம் சரியாக சென்று கொண்டிருந்த போதிலும் பணக்கஷ்டம் மட்டும்தான் சிவாஜிராவை படாதபாடுப் படுத்தியது.
சிவாஜி ராவ் அவ்வளவு கஷ்டத்திலும் பிரிஸ்டல் ரக சிகரெட்டுகளை புகைப்பதை பழக்கத்தில் வைத்து இருந்தார். கல்லூரி நண்பர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் சிகரெட் புகைப்பதை அவரால் விடவே முடியவில்லை. இதனால் ஒவ்வொரு மாதமும் அவருக்கு பணத்தேவை இருந்துக் கொண்டே இருந்தது.
அந்த பணத்தேவையை பூர்த்தி செய்ய அவர் அடிக்கடி பெங்களூருக்கு சென்று பணியாற்றி வருவதை வழக்கமாக மாற்றி இருந்தார். ஒரு தடவை அப்படி அவர் பெங்களூருக்கு சென்று இருந்த போது நண்பர் ராஜ் பகதூரை சந்தித்து பேசிக் கொண்டு இருந்தார்.
சிவாஜி ராவுக்கு அதிகளவு பணம் தேவைப்படுவதை உணர்ந்த ராஜ்பகதூர் தனது கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை கழற்றி சிவாஜி ராவ் கழுத்தில் போட்டு விட்டார். இதை வைத்துக்கொள். முக்கியமான நேரங்களில் உனக்கு இது கை கொடுக்கும் என்று கூறினார்.
ராஜ் பகதூரின் தன்னலமற்ற உதவியை கண்கூடாக அனுபவித்த சிவாஜி ராவுக்கு கண்ணீரை அடக்க முடியவில்லை. அப்போது ராஜ்பகதூர் ஒரே ஒரு அறிவுரையை கூறினார். சிகரெட் பிடிப்பதை குறைத்துக் கொள். நிறைய பணம் மிச்சம் ஆகும் என்றார். மேலும் சுத்தமாக பணம் கையில் இல்லாவிட்டால் இந்த தங்க சங்கிலியை அடகு வைத்து விடு. பிறகு மீட்டுக் கொள்ளலாம் என்றார்.
ராஜ் பகதூரின் வார்த்தைகள் சிவாஜி ராவ் மனதில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இனி பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டு சென்னைக்கு திரும்பி வந்தார். ஆனால் வழக்கம் போல சென்னையில் சிவாஜி ராவுக்கு பணக்கஷ்டம் தொடர் கதையாகவே இருந்து கொண்டு இருந்தது.
இதன் காரணமாக அருண் ஓட்டலில் தங்கி இருந்த நண்பர்களுடன் அவர் பல தடவை சண்டைப் போட்டு இருக்கிறார். குறிப்பாக ரவீந்திரநாத்துக்கும், அவருக்கும் அடிக்கடி சண்டை வரும். ஆனால் சிவாஜி ராவ் அதை கண்டு கொள்ளமாட்டார். அவரது விருப்பப்படி செயல்பட்டு கொண்டே இருந்தார்.
அருண் ஓட்டலில் ஒரு அறையில் 3 பேர்தான் தங்க வேண்டும் என்று விதிமுறை வகுக்கப்பட்டு இருந்தது. ஆனால் வேணுகோபால் அறையில் சிவாஜிராவ் 4-வது நபராக இருந்தார். ஓட்டல் முதலாளி வரும் போது அவரது கண்களில் படாமல் சிவாஜி ராவ் ஒளிந்துக் கொண்ட நிகழ்ச்சிகள் எல்லாம் நடந்தன.
நாளடைவில் அருண் ஓட்டல் சிவாஜி ராவ் வீடு போலவே மாறிப் போனது. ஆனால் அவரிடம் இருந்த மூன்றே மூன்று உடைகளை மட்டுமே அவர் மாற்றி மாற்றி உடுத்த வேண்டி இருந்தது. இது ரவீந்திரநாத்துக்கு பிடிக்கவில்லை.
"டேய் என்னடா ஒரே டிரஸ்சை போட்டுக் கொண்டே இருக்கிறாய்" என்று ரவீந்திரநாத் கிண்டல் செய்வார். இதனால் சிவாஜி ராவ் தனது கண்ணில் யார் உடை தென்படுகிறதோ அந்த உடையை எடுத்து அணிந்துக் கொண்டு சென்று விடுவார். இதனால் ரவீந்திரநாத்துக்கும், அவருக்கும் மோதல் அதிகரித்தது.
ஒரு தடவை ரவீந்திரநாத் இதுபற்றி வேணுகோபாலிடம் புலம்பித் தள்ளினார். "சிவாஜி ராவ் உடைகளை சரியாக துவைப்பது இல்லை. ஒழுங்காக பல் துலக்குவது இல்லை. இவனை வைத்துக் கொண்டு இன்னும் என்ன கஷ்டம் எல்லாம் அனுபவிக்க போகிறோமோ. அவன் உள்ளாடைகளை கூட துவைப்பது கிடையாதாம்" என்றார்.
அவரை வேணுகோபால் சமரசம் செய்தார். "விடு பார்த்துக் கொள்ளலாம்" என்பார். சிவாஜி ராவ் மீது இருந்த பாசம் மற்றும் இரக்கம் காரணமாக வேணுகோபால் எதையும் கண்டு கொள்வது இல்லை.
ஒருநாள் சிவாஜி ராவ் புறப்பட்டு சென்றதும் வேணுகோபாலிடம் சென்ற ரவீந்திரநாத் இனியும் பொறுக்க முடியாது என்று கொந்தளித்தார். ஏன் என்ன நடந்தது என்று வேணுகோபால் கேட்டபோது, "இன்று நமது அறையில் நடந்ததை நீ அறிந்தால் உனக்கே கோபம் வந்து விடும்.
உனது டூத்பிரசை பயன்படுத்திதான் இன்று சிவாஜி ராவ் பல் துலக்கினான். உனக்கு தெரியுமா?" என்று ரவீந்திரநாத் கூறினார். இதை கேட்ட பிறகு வேணுகோபாலுக்கு என்னவோ போல் இருந்தது. அன்று இரவு அவர் சிவாஜி ராவை அழைத்தார். நான் சொல்வதை பதில் சொல்லாமல் பொறுமையாக கேட்க வேண்டும் என்று கூறி அறிவுரைகள் சொல்லத் தொடங்கினார்.
ஒரு அறையில் நாம் நான்கு பேர் இருக்கிறோம். எனவே சுத்தமாக இருக்க வேண்டும். மற்றவர்கள் பயன்படுத்தும் பொருட்களை எடுக்கக் கூடாது. அதுதான் நாகரீகம். உனக்கு நடிப்புப் பயிற்சிப் பெறுவதில் நிறைய ஆர்வம் இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியும். ஆனால் உடைகள் விஷயத்திலும், பழகும் விஷயத்திலும் நீ மாற்றங்கள் செய்தே ஆக வேண்டும்" என்றார்.
அதோடு வேணுகோபால் விடவில்லை. தொடர்ந்து மேலும் சில அறிவுரைகளை சொன்னார். அதை கேட்க...கேட்க... சிவாஜி ராவுக்கு மிகவும் அவமானமாக போய் விட்டது. தெரியாமல் செய்து விட்டேன். இனி இதுபோல் நடக்காது என்று மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
அன்று முதல் சிவாஜி ராவின் நடவடிக்கைகளில் நிறைய மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. மற்றவர்கள் பொருளை தொடுவதை குறைத்துக் கொண்டார். குறிப்பாக மற்றவர்கள் உடைகளை அணிவதை முற்றிலுமாக தவிர்த்தார்.
மற்றவர்களை போல நாமும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தனது பழக்க வழக்கங்களிலும் மாற்றங்களை செய்ய தொடங்கினார். சிவாஜி ராவிடம் ஏற்பட்ட இந்த மாற்றம் அவருடன் படித்த திரைப்படக் கல்லூரி மாணவர்களிடம் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
என்றாலும் அவரது பிடிவாதமும், முரட்டு குணம் மட்டும் மாறவில்லை. சில விஷயங்களில் என்ன நினைக்கிறாரோ அதை மட்டுமே செய்ய வேண்டும் என்பதில் விடா பிடியாக இருந்தார். அதிலும் கண்டக்டராக பணிபுரிந்த போது செய்த ஸ்டைல்கள் அனைத்தும் அப்படியே அவரிடம் தொடர்ந்தன.
தங்கி இருந்த அறையில், பஸ்சில், திரைப்படக் கல்லூரியில், சாப்பிடப் போகும் இடங்களில் எங்கு கண்ணாடி இருந்தாலும் அதன் முன்பு நின்று தலைமுடியை ஸ்டைலாக கோதி விட்டுக் கொள்வார். அந்த ஸ்டைலில் உடலை அப்படியும், இப்படியுமாக அசைத்து பார்த்து தன்னைத் தானே பாராட்டிக் கொள்வார். இந்த பழக்கத்தை மட்டும் அவர் எத்தனையோ பேர் கேலி-கிண்டல் செய்தாலும் விடவே இல்லை.
ஒருநாள் திரைப்படக் கல்லூரியில் நடனப் பயிற்சி கொடுக்கும் ஆசிரியர் புதிய நடனத்தை சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்தார். அந்த பயிற்சி வகுப்பு முடிந்ததும் அவர் இந்த நடனத்தில் கால் அசைவு முக்கியமானது. நாளை நான் உங்கள் அனைவரின் கால் அசைவுகளை பார்க்க வேண்டும். எனவே நாளை நீங்கள் வகுப்புக்கு வரும்போது கால்சட்டை மட்டுமே அணிந்து வரவேண்டும் என்றார்.
சில மாணவர்கள் அதைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்தனர். எங்களிடம் கால் சட்டை இல்லை என்றனர். ஆனால் நடனப் பயிற்சி ஆசிரியர் கேட்கவில்லை. கால்சட்டை அணிந்து வராவிட்டால் வகுப்பில் இருந்து வெளியேற்றி விடுவேன் என்று எச்சரித்தார். இதை கேட்டதும் சிவாஜி ராவுக்கு மிகுந்த பயமாகி விட்டது.
அவரிடம் கால்சட்டை எதுவும் கிடையாது. மாத கடைசியில் கையில் பணம் இல்லை. கால்சட்டை எப்படி முடியும் என்று யோசித்தார். யாரிடமும் கேட்கவும் அவருக்கு மனம் வர வில்லை.
நடப்பது நடக்கட்டும் என்று மறுநாள் சிவாஜிராவ் பேண்ட் அணிந்துக் கொண்டு நடனப் பயிற்சி வகுப்புக்கு சென்றார். அதை கண்டதும் நடனப்பயிற்சி ஆசிரியருக்கு கோபம் வந்தது. சிவாஜி ராவை பார்த்து, "நீ வெளியே போ. கால்சட்டை இருந்தால் உள்ளே வா..." என்றார். சிவாஜி ராவ் கொஞ்சமும் யோசிக்கவில்லை. தனது பேண்ட்டை கழற்றினார். உள்ளாடையுடன் வகுப்பறையில் நின்றார்.
அவர் அணிந்து இருந்த அண்டர்வேர் நீளமான டிராயர் போல இருந்தது. அதை கண்டதும் எல்லோரும் சிரித்தனர். ஆனால் சிவாஜி ராவ் கண்டுகொள்ளவில்லை. அந்த உள்ளாடையுடன் நடனம் ஆடி அன்றைய பயிற்சி வகுப்பை சமாளித்தார். சிவாஜி ராவின் இந்த செயலை அவரது நண்பர்கள் நீண்ட நாட்களுக்கு சொல்லி... சொல்லி சிரிப்பது உண்டு.
இந்த நிலையில் சிவாஜி ராவின் திரைப்படக் கல்லூரி வாழ்க்கை அவருக்கு பல மறக்க முடியாத அனுபவங்களை கொடுப்பதாக அமைந்தது. ஒவ்வொரு நாளும் திரைப்படக் கல்லூரியில் நடிப்புக்கு பெற்ற பயிற்சியோடு வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களிலும் பயிற்சி பெறும் களமாக சென்னை வாழ்க்கை அமைந்தது. அவருக்கு இருந்த ஒரே பிரச்சினை பணப்பிரச்சினைதான்.
ஒரு தடவை திரைப்படக் கல்லூரியில் தொடர்ந்து படிப்பதற்கு கட்டணம் செலுத்த முடியாத மிகுந்த அவல நிலைக்கு சிவாஜிராவ் தள்ளப்பட்டார். அனைவரும் கல்லூரிக் கட்டணம் செலுத்தி விட்ட நிலையில் சிவாஜி ராவ் மட்டும் இனி படிக்க முடியுமா? என்ற பரிதாப நிலையில் தவித்தார்.
என்ன செய்வது என்று மனக்குழப்பத்துடன் கல்லூரிக்குள் காலடி எடுத்து வைத்தார். அங்கு அவருக்கு ஒரு ஆச்சரியம் காத்து இருந்தது.
அது என்ன ஆச்சரியம் என்பதை நாளை காணலாம்.