என் மலர்

    சிறப்புக் கட்டுரைகள்

    ரஜினியின் ரகசிய ஆன்மீகம்- லட்சுமி தியேட்டரில் பார்த்த படங்கள்!
    X

    ரஜினியின் ரகசிய ஆன்மீகம்- லட்சுமி தியேட்டரில் பார்த்த படங்கள்!

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிவாஜி ராவின் இந்த குணத்தை பார்த்து அவரது அறை நண்பர்கள் அடிக்கடி ஆச்சரியப்பட்டது உண்டு.
    • அமைந்தகரையில் இருந்து ஜெமினி பாலம் செல்ல 2 வழித்தடங்கள் உள்ளன

    அமைந்தகரை அருண் ஓட்டலில் 3-வது மாடியில் நண்பர்களுடன் தங்கி இருந்த சிவாஜி ராவ் கல்லூரிக்கு புறப்படும் ஸ்டைலே தனியாக இருக்கும். அதிகாலையிலேயே எழுந்து சிகரெட்டை புகைத்தப்படியே வராண்டாவில் வலம் வருவார். மற்ற நண்பர்கள் கண் விழிப்பதற்குள் இரண்டு, மூன்று சிகரெட்டுகளை ஊதித்தள்ளி விடுவார்.

    நண்பர்கள் எழுந்து கல்லூரிக்கு தயாராக வேண்டும் என்று குளியல் அறைக்கு செல்ல நினைத்தால் அவ்வளவு எளிதில் முடியாது. ஏனெனில் அதற்குள் குளியல் அறையை பூட்டிக்கொண்டு உள்ளே சிவாஜி ராவ் தம் அடித்துக் கொண்டு இருப்பார். அது மட்டு மல்ல குளியல் அறைக்குள் இருக்கும் கண்ணாடி முன்பு நின்றுக் கொண்டு விதவிதமாக நடித்தும் பார்ப்பார்.

    இது அவரது அறை நண்பர்களுக்கு மிகப்பெரிய இடையூறாக இருந்தது. ஒரு கட்டத்தில் சண்டைப் போட்டு நாங்கள் எல்லோரும் குளித்த பிறகுதான் நீ குளிக்க வேண்டும் என்று சிவாஜிராவுக்கு நண்பர்கள் உத்தரவிட்டனர். என்றாலும் சிவாஜிராவ் யாருக்காகவும் தனது சுதந்திரமான செயல்பாடுகளை மாற்றிக் கொள்ளவில்லை.

    இதனால் அறையில் அவருக்கும், ரவீந்திர நாத்துக்கும் இடையே அடிக்கடி முட்டிக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. இருவரும் ஜென்ம விரோதிகள் போல சண்டைப் போடுவார்கள். அப்போது சதீசும், அசோக்கும் இடையில் புகுந்து சண்டையை தீர்த்து வைப்பார்கள்.

    ஆனால் அடுத்த சில நிமிடங்களில் எதுவுமே நடக்காதது மாதிரி சிவாஜி ராவும், ரவீந்திரநாத்தும் கொஞ்சி குலாவியபடி பேசிக் கொள்வார்கள். சிவாஜி ராவின் இந்த குணத்தை பார்த்து அவரது அறை நண்பர்கள் அடிக்கடி ஆச்சரியப்பட்டது உண்டு.

    அமைந்தகரையில் இருந்து திரைப்படக் கல்லூரி அமைந்து இருந்த ஜெமினி பாலம் வரை ஏராளமான டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன. சிவாஜிராவும் அவரது நண்பர்கள் வேணுகோபால், சதீஷ், அசோக் மற்றும் சிலர் தினமும் ஒரே பஸ்சில்தான் பயணம் செய்வார்கள்.

    அமைந்தகரையில் இருந்து ஜெமினி பாலம் செல்ல 2 வழித்தடங்கள் உள்ளன. மேத்தா நகர் வழியாக ஒரு வழித்தடம் உள்ளது. அமைந்தகரை சேத்துப்பட்டு வழியாக மற்றொரு வழித் தடம் உள்ளது. இதில் 1973-ல் அமைந்தகரையில் இருந்து மேத்தா நகர் வழியாக ஜெமினி பாலம் செல்ல 25 காசுகள் கட்டணம் கொடுக்க வேண்டும்.

    அமைந்தகரை சேத்துப்பட்டு வழியாக செல்லும் பஸ்களுக்கு 30 காசுகள் கட்டணம். சிவாஜி ராவும், அவரது நண்பர்களும் தினமும் அந்த 5 பைசாவை மிச்சப்படுத்துவதற்காக மேத்தா நகர் வழியாக செல்லும் பஸ்சில்தான் ஏறுவார்கள்.

    அந்த பஸ் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையம் அருகே வரும்போது பெரும்பாலான நாட்கள் ரெயில்வே கேட்டில் நிற்க வேண்டியது ஆகி விடும். 1973-ல் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையம் அருகே சாலையில் சுரங்கப்பாதை அமைக்கப்படவில்லை. எனவே அந்த சாலையில் வரும் வாகனங்கள் அனைத்தும் ரெயில்வே கேட் திறக்கும்வரை அங்கேயே நீண்ட வரிசையில் காத்து கொண்டு இருக்கும்.

    அப்படி சிவாஜி ராவ் வரும் பஸ்களும் ரெயில்வே கேட்டில் சிக்கி விடுவது உண்டு. ஒரு தடவை நுங்கம்பாக்கம் ரெயில்வே கேட் மூடப்பட்டு விட்டால் மீண்டும் திறப்பதற்கு சுமார் 30 நிமிடங்களாவது ஆகிவிடும். இதனால் சிவாஜி ராவும், அவரது நண்பர்களும் பல நாட்கள் திரைப்படக் கல்லூரி வகுப்புக்கு தாமதமாக சென்று ஆசிரியர்களிடம் திட்டு வாங்கி இருக்கிறார்கள்.

    ரெயில்வே கேட் மூடப்படும் நாட்களில் சிவாஜிராவும் நண்பர்களும் பஸ்சில் அடிக்கும் லூட்டிகள் பயங்கரமாக இருக்கும். அந்த சமயங்களில் சிவாஜி ராவை வெறுப்பு ஏற்ற வேண்டும் என்பதற்காகவே சில சமயங்களில் "ஏய் கருப்பா?" என்று நண்பர்கள் அழைப்பார்கள். அப்போது எல்லாம் சிவாஜி ராவுக்கு கடும் கோபம் வந்து விடும்.

    ஒரு தடவை சிவாஜி ராவை பார்த்து பஸ்சில் வைத்து சதீஷ் "டேய் நீ ஏன்டா இவ்வளவு கருப்பாய் இருக்கிறாய்? உனக்கு எப்படி கதாநாயகன் வாய்ப்பு கிடைக்கும்?" என்று கிண்டல் செய்தார். இதைக் கேட்டதும் சிவாஜிராவுக்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை. "டேய் கேலி செய்யாதே? எனக்கு கோபம் வந்தால் சும்மா இருக்க மாட்டேன்? என் கையில் கிடைப்பதை தூக்கி அடித்து விடுவேன்" என்று எச்சரித்தார்.

    என்றாலும் சதீஷ் தொடர்ந்து சிவாஜி ராவை பார்த்து கருப்பா.... கருப்பா... என்றே சொல்லி வெறுப்பு ஏற்றினார். பஸ்சில் பல பயணிகள் முன்னிலையில் சதீஷ் செய்த கிண்டல் சிவாஜி ராவுக்குள் குமுறலை ஏற்படுத்தியது. "டேய் விளையாடாதே? என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது" என்று முறைத்தார்.

    அப்போது ஜெமினி பாலம் பஸ் ஸ்டாப் வந்து இருந்தது. நண்பர்கள் அனைவரும் இறங்கினர்கள். அப்போதும் சதீஷ் சிவாஜி ராவை பார்த்து, "கருப்பா வேகமா வாடா?" என்றார். அடுத்த நிமிடம் சிவாஜி ராவ் பாய்ந்து சென்று சதீசை சட்டையை பிடித்து ஒரு உலுக்கு உலுக்கினார்.

    "நீ என்ன பெரிய மன்மதனா? எப்போது பார்த்தாலும் என்னை கருப்பா என்கிறாய்? உன் மனதில் என்னடா நினைத்துக் கொண்டிருக்கிறாய்?" என்று எச்சரித்தார். சிவாஜி ராவுக்கு வந்த கோபத்தை பார்த்து சதீஷ் ஒரு நிமிடம் மிரண்டு போய் விட்டார். அதன் பிறகு அவர் சிவாஜி ராவிடம் நிறம் பற்றி கிண்டல் செய்து பேசியதே இல்லை.

    சிவாஜி ராவ் கோபப்பட்டாலும் சிறிது நேரத்தில் அதை மறந்து நண்பர்களுடன் கலகலப்பாக பேச ஆரம்பித்து விடுவார். இதனால் கல்லூரியிலும், அருண் ஓட்டலிலும் எப்போதும் நண்பர்கள் அவருடன் இருந்தனர். அந்த நண்பர்களுடன் சேர்ந்து பொழுதை போக்குவதுதான் அவரது இரவு நேர பழக்கமாக இருந்தது.

    சிவாஜி ராவிடம் இருந்த சிகரெட் புகை பிடிக்கும் பழக்கம் தவிர மற்ற அனைத்து பழக்கங்களையும் அவரது நண்பர்கள் ரசித்தனர். குறிப்பாக சினிமா மீது சிவாஜி ராவுக்கு இருந்த வெறியை நினைத்து பிரமிப்பார்கள். எப்போதும் சினிமா நினைப்பிலேயே இருந்த சிவாஜி ராவ் அடிக்கடி அமைந்தகரை லட்சுமி டாக்கீசுக்கு படம் பார்க்க சென்று விடுவார்.

    தமிழில் புதுப்படம் ரிலீஸ் ஆகி இருந்தால் சிவாஜிராவ் தவற விட மாட்டார். அன்று முதல் ஆளாக லட்சுமி டாக்கீசில் ஆஜராகி விடுவார். நண்பர்கள் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி லட்சுமி டாக்கீசுக்கு சென்று படம் பார்ப்பது அவருக்கு ஒரு பழக்கமாக மாறிப் போனது.

    அமைந்தகரை லட்சுமி டாக்கீஸ் தியேட்டரில் புதுப்படங்கள் ரீலிஸ் ஆகாத நாட்களில் இடையிடையே பழைய படங்களையும் போடுவார்கள். அந்த படங்களையும் சிவாஜிராவ் விட்டு வைப்பது இல்லை. முதல் காட்சிக்கு முதல் ஆளாக போய் நிற்பார்.

    தங்கை, தங்கசுரங்கம், என் தம்பி, திருடன், ராஜா, எங்கள் தங்க ராஜா உள்பட சிவாஜி கணேசன் படங்களில் பெரும்பாலானவற்றை சிவாஜிராவ் லட்சுமி தியேட்டரில்தான் கண்டுகளித்தார். அதுபோல எம்.ஜி.ஆர். நடித்த படங்களையும் அவர் விடாமல் பார்த்தார். எம்.ஜி.ஆர்.- சிவாஜி என்ற இரண்டு இமயங்களும் தமிழ் திரையுலகை ஆக்கிரமித்து இருந்ததை அவர் படம் பார்த்து விட்டு நண்பர்களுடன் ஆர்வமாக விவாதிப்பார்.

    குறிப்பாக சிவாஜிகணேசனின் நடிப்பை புகழ்ந்து பேசிக் கொண்டே இருப்பார். ஏற்கனவே பணக்கஷ்டத்தில் இருந்த சிவாஜி ராவுக்கு அடிக்கடி படம் பார்ப்பதால் கூடுதல் செலவு ஆனது. என்றாலும் சிவாஜிராவ் சாப்பாட்டை தியாகம் செய்து விட்டு கூட லட்சுமி தியேட்டருக்கு சென்று படம் பார்த்தது உண்டு.

    சில சமயங்களில் சிவாஜி ராவிடம் போதுமான அளவுக்கு கையில் காசு இருக்காது. அதே சமயத்தில் லட்சுமி தியேட்டரில் புதிய படம் வெளியாகி இருக்கும். என்றாலும் படம் பார்க்க வேண்டும் என்ற வெறியுடன் சிவாஜிராவ் லட்சுமி தியேட்டருக்கு சென்று சாதாரண வகுப்பில் டிக்கெட் எடுத்து படம் பார்ப்பது உண்டு.

    ஒரு தடவை லட்சுமி தியேட்டரில் அவர் தரையில் உட்கார்ந்து சிவாஜி படத்தை பார்த்து விட்டு வந்தார். அந்த அளவுக்கு சிவாஜி நடிப்பில் அவர் மனதை பறிக் கொடுத்து இருந்தார்.

    லட்சுமி தியேட்டரில் மட்டுமின்றி திரைப்படக் கல்லூரியிலும் சிவாஜி ராவுக்கும், அவரது நண்பர்களுக்கும் அடிக்கடி படங்கள் போட்டு காட்டப்படுவது உண்டு. பெரும்பாலும் திரைப்படக் கல்லூரியில் காட்டப்படும் படங்கள் ஆங்கிலப் படங்களாக இருக்கும். ஆலிவுட் நடிகர்கள் சார்லஸ் லாப்டன், கிளார்க் கேபிள், கிரிகிரிபெக், ஆண்டனிகுயின், மார்லன்பிராண்டோ ஆகியோரது படங்களை அடிக்கடி காண்பித்து பயிற்சி கொடுப்பார்கள்.

    அந்த நடிகர்களின் உடல் மொழி, முகப்பாவனைகள் அனைத்தையும் சிவாஜி ராவ் மனதுக்குள் உள்வாங்கிக் கொண்டார். அதுபோலவே எம்.ஜி.ஆர்., சிவாஜி, என்.டி.ராமாராவ், ராஜ்குமார், திலீப்குமார், ராஜ்கபூர், சத்யன், நாகேஸ்வரராவ் ஆகியோரது படங்களையும் பார்த்து அவர்களிடம் இருந்த தனித்துவத்தை புரிந்து உணர்ந்துக் கொண்டார்.

    சினிமா படங்களை பார்க்க... பார்க்க... அவருக்குள் நடிப்பின் மீதான வெறி விஸ்வரூபமாக மாறியது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் மற்ற தியேட்டர்களுக்கும் சென்று படங்கள் பார்த்தார். இதன் மூலம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம் மொழிகளின் படங்களும், நடிகர்களின் நடிப்பும் அவரது மனதுக்குள் ஆழமாக பதிந்தன.

    இந்த நிலையில்தான் அமைந்தகரையில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தை வேடிக்கை பார்க்க சென்ற சிவாஜி ராவை போலீசார் சுற்றி வளைத்து அடி பின்னி எடுத்து விட்டனர்.

    அந்த பயங்கர சம்பவம் பற்றி திங்கட்கிழமை (22-ந்தேதி) பார்க்கலாம்.

    Next Story
    ×