சிறப்புக் கட்டுரைகள்

ரஜினியின் ரகசிய ஆன்மீகம்- பயணிகளை ஏமாற்றிய சிவாஜிராவ்!
- சிவாஜி ராவும், அவரது நண்பர்களும் பெரும்பாலும் 47-ம் நம்பர் பஸ்சில் வாசலில் தொங்கியபடிதான் பயணம் செய்தனர்.
- திரைப்படக் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் முடியும் நேரத்தில் நாடகங்கள் நடத்த ஆரம்பித்தனர்.
ஒரு பாட்டில் வெனிகர் குடித்தால் ஒரு பாட்டில் பிராந்தி கிடைக்கும் என்று சொன்னதும் சிவாஜிராவால் ஆசையை அடக்க முடியவில்லை. தன் முன் சதீஷ் கொண்டு வந்து வைத்த வெனிகர் பாட்டிலை எடுத்தார். ஒரே மூச்சில் மடக்... மடக்... என்று குடித்து முடித்து விட்டார்.
இதைக் கண்ட அவரது நண்பர்களுக்கு கடும் அதிர்ச்சியாகி விட்டது. சிவாஜி ராவுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று பயப்பட்டனர். ஆனால் சிவாஜிராவ் ஸ்டைலாக தனது கையை வானத்தை நோக்கி உயர்த்தி காட்டினார். "கடவுள் என் பக்கம் இருக்கும் வரை எனக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது" என்றார். அவர் குரலில் ஒருவித உறுதி தெரிந்தது.
அதே ஸ்டைலில் இருக்கையில் இருந்து வேக, வேகமாக எழுந்த சிவாஜி ராவ் குளியல் அறைக்குள் சென்று வாந்தி எடுத்தார். தான் குடித்த ஒரு பாட்டில் வெனிகரையும் வாந்தி எடுத்து வெளியில் கொண்டு வந்து விட்டார். சில நிமிடங்களில் மிக சகஜமாக மாறி நண்பர்கள் அருகில் வந்தார். சதீசை பார்த்தபடி, "டேய் போய் ஒரு பெரிய பாட்டில் பிராந்தி வாங்கிட்டு வாடா...?" என்றார்.
வேறு வழி தெரியாத சதீஷ் ஒரு பாட்டில் பிராந்தி வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார். அந்த முழுப் பாட்டில் பிராந்தியையும் சிவாஜி ராவ் ஒரே ஆளாக குடித்து முடித்தார். இந்த சம்பவத்துக்குப் பிறகு சிவாஜி ராவிடம் நண்பர்கள் சவால் விடவோ, பந்தயம் கட்டவோ பயப்பட்டனர்.
அந்த சமயத்தில் பருவ மழை காரணமாக சென்னையில் வைரஸ் காய்ச்சல் பரவி இருந்தது. அசோக் அந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடுமையாக அவதிப்பட்டார்.
ஒரு வாரம் திரைப்படக் கல்லூரிக்கு வராமல் அறையிலேயே தங்கி ஓய்வெடுத்தார்.
தனியாக இருந்ததால் அவருக்கு மிகவும் போர் அடித்தது. எனவே காய்ச்சல் சற்று குறைந்ததும் அவர் கல்லூரிக்கு புறப்பட்டார். அவரை ஓய்வெடுக்கும்படி சிவாஜி ராவ் எவ்வளவோ வலியுறுத்திக் கூறினார். ஆனால் அசோக் கேட்கவில்லை. நானும் உங்களுடன் பஸ்சில் வந்து விடுகிறேன் என்று சொல்லியபடி கல்லூரிக்குப் புறப்பட்டு விட்டார்.
அமைந்தகரையில் இருந்து ஜெமினி பாலத்துக்கு அந்த காலத்தில் சென்னை அரசு போக்குவரத்து கழகம் 47-ம் எண் கொண்ட பஸ் சேவையை நடத்தி வந்தது. இந்த வழித் தடத்தில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும் என்பதால் அதிக பஸ்களை விட்டு இருந்தனர். என்றாலும் சிவாஜி ராவும், அவரது நண்பர்களும் பெரும்பாலும் 47-ம் நம்பர் பஸ்சில் வாசலில் தொங்கியபடிதான் பயணம் செய்தனர்.
அத்தகைய கூட்டத்தை மனதில் வைத்துதான் அசோக்கிடம் கல்லூரிக்கு வரவேண்டாம் என்று சிவாஜி ராவ் கூறியிருந்தார். ஆனால் அசோக் கேட்காததால் அவரை சிவாஜி ராவ் தன்னுடன் அழைத்துக் கொண்டு வந்திருந்தார். வழக்கம் போல 47-ம் நம்பர் பஸ்சில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
சிவாஜிராவ், அசோக் மற்றும் நண்பர்கள் பஸ் படிக்கட்டில் தொங்கியபடியே வந்தனர். உள்ளே சென்று இருக்கையில் அமர்ந்து விடலாம் என்று பல தடவை அவர்கள் முயற்சி செய்தபோதும் இடம் கிடைக்கவில்லை. இதனால் அசோக் மிகவும் தளர்ச்சி அடைந்தார்.
நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தை பஸ் தாண்டிக் கொண்டிருந்தபோது அசோக்குக்கு திடீரென தலைசுற்றல் ஏற்பட்டது. பஸ் படிக்கட்டில் தொங்கிக் கொண்டிருந்த அவர் மயங்கி விழப்போவதை அதிர்ஷ்டவசமாக சிவாஜி ராவ் கவனித்து விட்டார். அடுத்த வினாடியே அசோக்கை அரவணைத்துப் பிடித்துக் கொண்டார்.
உள்ளே ஏறுங்கள்... உள்ளே ஏறுங்கள்... என்று சிவாஜிராவ் அலறினார். இதனால் பயணிகள் பரபரப்பானார்கள். நிலைமையை புரிந்துக்கொண்ட கண்டக்டரும் உதவி செய்தார். ஒரு இருக்கையில் இருந்த பயணிகள் எழுந்து இடம் கொடுத்தனர்.
அசோக்கை பஸ்சுக்குள் அழைத்து வந்த சிவாஜிராவ் ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டு தன் மடி மீது அசோக்கை தலைசாய்த்து படுக்க வைத்துக் கொண்டார். ஜெமினி பாலம் வரை அவர்கள் நிம்மதியாக வந்தனர். இதனால் பஸ்சில் இருந்து இறங்கியதும் தெம்பாக கல்லூரிக்கு சென்றனர்.
இந்த சம்பவத்துக்கு பிறகு சிவாஜி ராவும், அவரது நண்பர்களும் பஸ்சுக்குள் சென்று உட்கார வேண்டும் என்று நினைத்து விட்டால் யாராவது ஒருவர் மயங்கி விழுவது போல் நடித்து காரியத்தை சாதித்துக் கொண்டனர். அடிக்கடி அவர்கள் இப்படி நாடகம் நடத்தி மற்ற பயணிகளை ஏமாற்றி பயணம் செய்தது உண்டு.
திரைப்படக் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் முடியும் நேரத்தில் நாடகங்கள் நடத்த ஆரம்பித்தனர். அதில் சிவாஜி ராவும், அவரது நண்பர்களும் கலந்து கொண்டு நடித்தனர். அதுபோல சென்னையில் உள்ள கர்நாடகா என்ஜினீயர்கள் சங்கம் நடத்திய கன்னட நாடகங்களிலும் சிவாஜி ராவ், அசோக், சதீஷ், ரவீந்திரநாத் நால்வரும் நடித்தார்கள்.
நாடகங்களின் ஒத்திகைகள் பெரும்பாலும் திரைப்படக் கல்லூரி வளாகத்திலேயே நடத்தப்பட்டது. திரைப்படக் கல்லூரியில் கன்னட பிரிவு மாணவர்களுக்கு வகுப்பு எடுத்த ஆசிரியை உஷா இந்த நாடக ஒத்திகைகளை முன்னின்று நடத்தினார். ஏற்கனவே பெங்களூரில் ஏராளமான நாடகங்களில் சிவாஜி ராவ் நடித்திருந்ததால் திரைப்படக் கல்லூரியில் நடந்த நாடக ஒத்திகை அவருக்கு சர்வ சாதாரணமாக இருந்தது.
ஒரு நாடகத்தில் சிவாஜிராவ் சி.பி.ஐ. அதிகாரியாகவும், மற்றொரு நாடகத்தில் வெட்டியானாகவும் நடித்தார். அவரது நாடக நடிப்புத் திறமையைப் பார்த்து ஆசிரியை உஷா மிகவும் ஆச்சரியப்பட்டார். இவ்வளவு திறமை உள்ள உங்களுக்கு நிச்சயம் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று மனம் திறந்து பாராட்டினார்.
நாடகத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிவாஜி ராவ் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. நாடகத்தில் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதில் அசோக் முதல் மாணவனாக தேர்வானார். என்றாலும் கன்னட பிரிவு மாணவர்களுக்கு ஒரு மனக்குறை இருந்து கொண்டே இருந்தது. அதாவது திரைப்படக் கல்லூரியில் தெலுங்கு மொழி மாணவர்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் போல கன்னட மொழி மாணவர்களுக்கு முன்னுரிமையும், முக்கியத்துவமும் வழங்கப்படவில்லை என்று நினைத்தனர்.
திரைப்படக் கல்லூரியில் படித்த 36 மாணவர்களில் தெலுங்கு மாணவர்கள் 20 பேர் இருந்தனர். இதன் காரணமாக பயிற்சி தொடர்பான அனைத்து செயல்பாடுகளும் தெலுங்கு மொழியில் அதிகம் மேற்கொள்ளப் பட்டது. பயிற்சிக்கான நாடகம் நடத்தப்பட்டா லும் தெலுங்கு மொழி நாடகம்தான் அதிகம் நடத்தப்பட்டது. அதுபோல நடிப்பை கற்றுக் கொள்வதற்கான திரைப்படங்கள் காண் பிக்கப்பட்ட விஷயத்திலும் தெலுங்கு படங்களே அதிகம் இருந்தன.
இதற்கு கன்னட வகுப்பில் சிவாஜி ராவுடன் படித்த மாணவர் அசோக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவரால் திரைப்படக் கல்லூரியில் சர்ச்சை உருவாகியது. இதையடுத்து கல்லூரி முதல்வர் ராஜாராம் அவரை அழைத்து விசாரணை நடத்தினார். மொழி ரீதியாக பிரச்சினை ஏற்படுத்தியதாக கூறி அசோக்கை ஒரு வாரம் சஸ்பெண்டு செய்து கல்லூரி முதல்வர் உத்தரவிட்டார்.
இந்த நடவடிக்கை சிவாஜி ராவுக்கு கடும் அதிர்ச்சியாக இருந்தது. இது தொடர்பாக அவருக்கும் தெலுங்கு மொழி பாடப் பிரிவில் படிக்கும் மாணவர் அனந்தராமனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிறுவயதிலேயே யாராவது தன் கண் பார்த்து கோபத்துடன் பேசினால் அது சிவாஜி ராவுக்கு பிடிக்கவே பிடிக்காது.
தன்னை முறைத்து பார்ப்பவர்களை துவம்சம் செய்து விடுவார். குறிப்பாக தனது கழுத்தில் அணிந்திருந்த சைக்கிள் செயினை கழற்றி அடிப்பதை சிவாஜி ராவ் வழக்கத்தில் வைத்திருந்தார். சென்னைக்கு மாணவராக வந்து பக்குவப்பட்டு கொண்டிருந்த நிலையில் தெலுங்கு மாணவருடனான மோதல் அவருக்கு மீண்டும் அந்த பழைய குணத்தை எட்டிப் பார்க்க வைத்தது.
தெலுங்கு மாணவர் அனந்தராமனை அடி பின்னி எடுத்து விட்டார். திரைப்படக் கல்லூரி முழுவதும் இது பரபரப்பாக பேசப்பட்டது. என்றாலும் அதிர்ஷ்டவசமாக சிவாஜி ராவ் மீது கல்லூரி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவிட்டது. இதனால் சிவாஜி ராவ் நிம்மதி பெருமூச்சு விட்டார்.
எப்படியோ திரைப்படக் கல்லூரி வாழ்க்கையில் முதலாம் ஆண்டு படிப்பு நிறைவு பெற்றது. எல்லா மாணவர்களும் விடுமுறைக்காக தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டு சென்று இருந்தனர். சிவாஜி ராவும் பெங்களூருக்கு திரும்பினார்.
அங்கு அடுத்த கல்வி ஆண்டுக்கான கட்டணத்தை தயார் செய்யும் வகையில் கிடைத்த வேலைகளை எல்லாம் செய்யத் தொடங்கினார். அதிகாரிகளிடம் அனுமதி பெற்று கண்டக்டர் வேலை பார்த்து சம்பாதித்தார். அந்த பணத்தை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக குருவி சேர்ப்பது போல சேமித்தார்.
அப்படி ஒரு நாள் அவர் பஸ்சில் கண்டக்டர் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது கல்லூரி நண்பர் சதீஷ் அதே பஸ்சில் பயணம் செய்ய நேரிட்டது. அவருக்கு சிவாஜி ராவை கண்டக்டர் கோலத்தில் பார்த்ததும் மிகவும் ஆச்சரியமாகி விட்டது. ஆங்கிலவார்த்தை கலக்காமல் சிவாஜி ராவ் ஒவ்வொரு பஸ் நிறுத்தத்தின் பெயரையும் அழகான கன்னடத்தில் உச்சரித்தது அவரை கவர்ந்தது.
சதீசை கண்டதும் சிவாஜி ராவும் மகிழ்ச்சி அடைந்தார். இன்று என்னோடுதான் நீ சாப்பிட வேண்டும் என்று உரிமையோடு அழைத்து சென்று ஓட்டலில் சாப்பிட வைத்தார். இப்படி விடுமுறைைய கழித்த சிவாஜி ராவுக்கு தன் மனம் கவர்ந்த பஸ் தோழியை பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. அவரால் அந்த தோழியை பார்க்க முடிந்ததா? என்பதை நாளை பார்க்கலாம்.