என் மலர்

    சிறப்புக் கட்டுரைகள்

    ரஜினியின் ரகசிய ஆன்மீகம்- தோழியை காணாமல் ஏமாந்த சிவாஜிராவ்!
    X

    ரஜினியின் ரகசிய ஆன்மீகம்- தோழியை காணாமல் ஏமாந்த சிவாஜிராவ்!

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிரபாவதி கல்லூரிக்கு செல்லும்போது சிவாஜிராவ் பணிபுரியும் பஸ்சில் மட்டுமே ஏறுவார்.
    • சிவாஜிராவிடம் ஏற்பட்ட இந்த மாற்றம் அவரது நண்பர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது.

    சிவாஜிராவுக்கு இளம்வயதில் கிடைத்த தோழி பிரபாவதி. இவர் கல்லூரியில் படித்து வந்ததையும் இவர்தான் சென்னை திரைப்படக் கல்லூரியில் நடிப்புக்கான பயிற்சி வகுப்புகள் 1973-ம் ஆண்டு தொடங்க இருப்பதையும் சிவாஜிராவிடம் தெரிவித்தார் என்பதையும் ஏற்கனவே நாம் பார்த்து இருக்கிறோம்.

    தோழி பிரபாவதியுடன் சிவாஜிராவ் கொண்டிருந்த நட்பு மிக மிக ஆத்மார்த்தமானது. வெளியில் யாருக்குமே தெரியாதது. சிவாஜிராவுடன் பஸ்சில் எப்போதும் டிரைவராக பயணித்த ராஜ்பகதூருக்கு கூட அவர்களது நட்பின் ஆழம் தெரியாமலேயே இருந்தது.

    பிரபாவதி கல்லூரிக்கு செல்லும்போது சிவாஜிராவ் பணிபுரியும் பஸ்சில் மட்டுமே ஏறுவார். சிவாஜிராவ் செய்யும் ஸ்டைல்களை பார்த்துக் கொண்டே இருப்பார். சிவாஜிராவ் டிக்கெட் கிழித்துக் கொடுக்கும் வேகத்தை கண்டு ரசிப்பார். பஸ்சை நிறுத்தவும், பஸ்சை புறப்பட செய்யவும் சிவாஜிராவ் கொடுக்கும் விசில்களை கூட அவர் ரசித்தது உண்டு.

    அது மட்டுமல்ல பஸ் ஒரு நிறுத்தத்தில் நின்று விட்டு புறப்படும்போது சிவாஜிராவ் ஸ்டைலாக ஓடி வந்து ஏறும் காட்சிகளையும் பார்த்துக் கொண்டே இருப்பார். சில சமயங்களில் சிவாஜிராவ் ஸ்டைலாக புகை பிடிப்பதையும் பிரபாவதி கண்கொட்டாமல் பார்த்தது உண்டு. கல்லூரி மாணவியான பிரபாவதி மீது சிவாஜிராவ் இனம்புரியாத பாசத்துடன் பழகி வந்தார். சென்னையில் நடிப்பு பயிற்சி கல்லூரியில் சேர்ந்த பிறகு அடிக்கடி பிரபாவதியை நினைத்துப் பார்த்துக் கொள்வார். பெங்களூருக்கு திரும்பி வரும்போதெல்லாம் பிரபாவதியை மீண்டும் பார்த்து விடமாட்டோமா? என்று நினைப்பார். ஆனால் சூழ்நிலைகள் காரணமாக அவரால் பார்க்க முடியாமல் போனது.

    இந்த நிலையில்தான் முதல் ஆண்டு வகுப்பு முடிந்து நீண்டநாள் விடுமுறையுடன் பெங்களூருக்கு சிவாஜிராவ் வந்து இருந்தார். எனவே இந்த தடவை எப்படியாவது பிரபாவதியை பார்த்து விடவேண்டும் என்று அவர் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டார். நண்பரை ஏற்றி பின்னால் வைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் பிரபாவதியை தேடி சென்றார். பிரபாவதி வீட்டு முகவரியை கண்டுபிடித்து அங்கு சென்றார். ஆனால் பிரபாவதி குடும்பத்தினர் அந்த வீட்டை காலி செய்து விட்டு சென்று விட்டனர் என்ற தகவல் மட்டுமே அவருக்கு தெரிய வந்தது. பிரபாவதி எங்கே போனார்? என்ன ஆனார்? என்பது தெரியவில்லை.

    இதனால் சிவாஜிராவ் மிகவும் வேதனைப்பட்டார். தன்னை வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்திய தேவதையாக பிரபாவதியை நினைத்தார். அவரை பார்க்க முடியாமல் போனதை நீண்ட நாட்களுக்கு சிவாஜிராவால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. நாட்கள் செல்ல... செல்லதான் பிரபாவதியின் நினைவுகள் சிவாஜிராவ் மனதில் இருந்து குறைந்தன.

    1974-ம் ஆண்டு சிவாஜிராவ் மீண்டும் பெங்களூரில் இருந்து சென்னை வந்து திரைப்படக் கல்லூரியில் 2-ம் ஆண்டு வகுப்பை தொடங்கினார். இனி பணம் விஷயத்தில் யாருக்கும் பாரமாக இருக்கக் கூடாது என்ற திட்டத்துடன் அவர் படிப்பை தொடங்க ஆரம்பித்தார். அவரிடம் முன்பை விட தன் நடிப்பு மீதான தன்னம்பிக்கை அதிகரித்து இருந்தது.

    அவரது சிந்தனையெல்லாம் நாம் கருப்பாக இருக்கிறோமே எனவே நமக்கு கதாநாயகனாக நடிப்பதற்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்காது. எனவே வில்லன் வேடங்களை கேட்டு வாங்க வேண்டும் என்றே இருந்தது. அதை பிரதிபலிக்கும் வகையில் அவர் அடிக்கடி தன் நண்பர்களிடம் பேசும் போதெல்லாம் நான் வில்லனாக நடித்து புகழ் பெறுவேன் பாருங்கள் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.

    அதற்காகவே அவர் அருண் ஓட்டல் அறையிலும், கல்லூரி வளாகத்தில் இருந்த அறையிலும் கண்ணாடிகளில் தன்னைப் பார்க்கும் போதெல்லாம் விதவிதமாக ஸ்டைல் செய்து பார்த்துக் கொள்வார். வில்லனாக இருப்பவர்கள் எப்படி ஸ்டைலாக நடித்தால் நன்றாக இருக்கும் என்று ஒத்திகை பார்த்தார். இது அவருக்கு நடிப்பில் இருந்த தீராத ஆர்வத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது.

    ஆனால் அவரிடம் இருந்த ஒரே பலவீனம் நாம் கருப்பாக இருக்கிறோம் என்ற எண்ணம் மட்டும்தான். அவரது அந்த எண்ணத்தை சுக்கு நூறாக உடைத்து வீசி விட்டு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் திரைப்படக் கல்லூரிக்கு நடிப்பு பயிற்சி சொல்லி கொடுக்க ஆசிரியராக கோபாலி வந்தார். இவர்தான் திரைப்படக் கல்லூரியில் சிவாஜிராவின் வாழ்க்கையை அப்படியே மாற்றி அமைத்தார்.

    திரைப்படக் கல்லூரியில் இவர் துணைப் பேராசிரியராக பணியில் சேர்ந்து இருந்தார். நடிப்பு தொடர்பாக அதிக அனுபவம் இவருக்கு இருந்தது. நேஷனல் ஸ்கூல் ஆப் டிராமாவில் நடிப்பு கலை பற்றிய பயிற்சியை இவர் பெற்று இருந்தார். இதனால் நடிப்பின் நுணுக்கங்கள் இவருக்குள் நிறைந்து இருந்தது.

    எந்த சூழ்நிலையில் எப்படி நடிக்க வேண்டும் என்பதை சொல்லிக் கொடுப்பதில் இவருக்கு நிகர் இவர்தான் என்று சொல்லும் வகையில் இவரது பயிற்சிகள் இருந்தன. 1974-ம் ஆண்டு திரைப்படக் கல்லூரியில் படித்த 36 பேருக்கும் இவரது பயிற்சி வகுப்புகள் மிகவும் கை கொடுத்தன.

    குறிப்பாக சிவாஜிராவுக்கு பேராசிரியர் கோபாலியின் வகுப்புகள் நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்தன. இதனால் பேராசிரியர் கோபாலியை சிவாஜிராவ் மிகவும் மரியாதையுடன் பார்த்தார். பேராசிரியர் கோபாலிக்கும் சிவாஜிராவை மிகவும் பிடித்துப் போனது. அதற்கு காரணம் சிவாஜிராவிடம் இருந்த நடிப்பு ஆர்வம்தான்.

    ஒரு தடவை பேராசிரியர் கோபாலி நடிப்பு பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு ஒரு தேர்வு நடத்தினார். 36 மாணவர்களிடம் உள்ள திறமைகளை முழுமையாக தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற வகையில் அவர் அந்த தேர்வை வடிவமைத்து இருந்தார். அதன்படி 36 மாணவர்களும் விமானத்தில் செல்கிறீர்கள். திடீரென அந்த விமானம் விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து விடுகிறது. அதிர்ஷ்டவசமாக 36 பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்புகிறார்கள். இதை நீங்கள் எப்படி நடித்து காட்டுவீர்கள் என்று தேர்வை வைத்தார்.

    இந்த கருத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாணவரும் மேடைக்கு அழைக்கப்பட்டு நடித்து காட்டும்படி சொல்லப்பட்டனர். ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு விதமாக தங்களது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார்கள். விமானத்தில் பயணம் செய்வதை நடித்து காட்ட பல மாணவர்களும் திணறினார்கள்.

    சிவாஜிராவ் முறை வந்தது. அவரை விமானத்துக்குள் இருக்கும் பயணி போல நடித்துக் காட்டும்படி பேராசிரியர் கோபாலி உத்தரவிட்டார். அடுத்த நிமிடமே சிவாஜிராவ் விமான பயணியை கற்பனையாக மனதுக்குள் நினைத்துக் கொண்டு அதை அப்படியே நடித்துக் காண்பித்தார். அவரது நடிப்பு பேராசிரியர் கோபாலிக்கு மிகவும் பிடித்துப் போனது.

    அடுத்து விமானத்தை ஓட்டுபவராக நடித்து காட்டச் சொன்னார். சிவாஜிராவ் அதையும் நடித்துக் காட்டினார். அடுத்து விமானம் விபத்துக்குள்ளாகி உயிர் தப்பும் காட்சிகளையும் நடித்து காட்டச் சொன்னார்கள். சிவாஜிராவ் அதையும் துடிப்போடு நடித்து காட்டினார். அவரது யதார்த்தமான நடிப்பில் பேராசிரியர் கோபாலி மனதை பறிகொடுத்தார் என்றே சொல்ல வேண்டும்.

    அன்று முதல் சிவாஜிராவை பேராசிரியர் கோபாலிக்கும் பிடித்துப் போனது. மற்ற மாணவர்களை விட சிவாஜிராவிடம் கோபாலி அதிக அக்கறை எடுத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார். குறிப்பாக சிவாஜிராவின் நடிப்பு திறமையை மேம்படுத்தும் வகையில் அறிவுரைகளை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தார்.

    பேராசிரியர் கோபாலியை பொறுத்தவரை அவர் மாணவர்களை நடத்திய விதம் வித்தியாசமானது. தன்னை மெத்த படித்தவர் என்ற ரகத்தில் அவர் நடந்துக் கொண்டதே இல்லை. மாணவர்களிடம் நண்பனைப் போலவே பழகினார். மாணவர்களுக்கு அனைத்து விதமான சுதந்திரத்தையும் அவர் கொடுத்து இருந்தார். ஒரு போதும் தனக்கு இருந்த அதிகாரத்தை மாணவர்கள் மீது திணித்ததே இல்லை.

    இன்னும் சொல்லப்போனால் மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிடக்கூட அவர் தயங்கியது இல்லை. இது சிவாஜிராவுக்கு மிக மிக பிடித்துப் போனது. பெங்களூரில் கிடைக்காத புதுமையான ஒரு பாசம் சென்னை திரைப்படக் கல்லூரியில் தனக்கு கிடைத்து இருப்பதாக உணர்ந்தார். எனவே அவர் பேராசிரியர் கோபாலியிடம் மனம் விட்டு பேசத் தொடங்கினார்.

    இதனால் சிவாஜிராவை ஒவ்வொரு விஷயத்திலும் பேராசிரியர் கோபாலி திருத்தத் தொடங்கினார். முதலில் அவர் சிவாஜிராவின் உடல் அமைப்பை சுட்டிக்காட்டினார். மெல்லிய கால்கள் அதே சமயத்தில் திடகாத்திரமான உடல் அமைப்பை மேலும் மெருகு ஏற்ற வேண்டும் என்றார். குறிப்பாக அந்த இளம் வயதில் சிவாஜிராவிடம் காணப்பட்ட தொப்பையை பார்த்து கண்டித்தார்.

    குறிப்பிட்ட காலத்துக்குள் தொப்பை இல்லாமல் வாட்டசாட்டமான இளைஞராக மாற வேண்டும் என்று ஒரு தந்தையை போல சொல்லிக் கொடுத்தார். அதை ஏற்றுக் கொண்டு சிவாஜிராவ் பயிற்சிகள் செய்ய ஆரம்பித்தார். பேராசிரியர் கோபாலி நிர்ணயித்த நாளுக்கு முன்பே அவர் தொப்பையை முழுமையாக குறைத்து விட்டார். சிவாஜிராவின் உருவ அமைப்பே மாறி இருந்தது.

    சிவாஜிராவிடம் ஏற்பட்ட இந்த மாற்றம் அவரது நண்பர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது. இதைத் தொடர்ந்து பேராசிரியர் கோபாலி சிவாஜிராவின் பழக்க வழக்கங்களையும் மாற்றினார். மற்றவர்களிடம் பேசும்போது வேகமாக பேசாமல் பொறுமையாக, நிதானமாக பேச வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்.

    அந்தக் காலக்கட்டத்தில் சிவாஜிராவிடம் ஒரு பெரிய தாழ்வுமனப்பான்மை இருந்து கொண்டு இருந்தது. நாம் கறுப்பாக இருக்கிறோம். சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவார்களா? என்ற சந்தேகமும், தாழ்வுமனப்பான்மையும் சிவாஜிராவை வாட்டி வதைத்துக் கொண்டே இருந்தது. அதற்கும் பேராசிரியர் கோபாலி முற்றுப்புள்ளி வைத்தார்.

    "கறுப்பாக இருந்தால் கதாநாயகனாக நடிக்க முடியாது என்று சொன்னது யார்? கறுப்புதான் அழகு? கறுப்பு நிறம் என்பது புறக்கணிக்க வேண்டிய விஷயம் அல்ல. நீ தினமும் கண்ணாடி பார்க்கும்போது நம்முடைய கறுப்புதான் அழகு என்று சொல்லிப்பார். அந்த அழகான கறுப்பு நிறத்தில் இருக்கும் மகிமை உனக்கு தெரிய வரும்" என்று தொடங்கி நீண்ட அறிவுரையை சிவாஜிராவிடம் பேராசிரியர் கோபாலி சொன்னார். அவர் சொன்ன இந்த அறிவுரை சிவாஜிராவ் மனதில் ஆழமாக பதிந்தது.

    அடுத்து சிவாஜிராவுக்கு பேராசிரியர் கோபாலி சொன்ன ஒரு அறிவுரை மிகப்பெரிய மாற்றத்துக்கு வழிவகுத்தது. அதுபற்றி நாளை காணலாம்.

    Next Story
    ×