சிறப்புக் கட்டுரைகள்

திருச்செந்தூர் கோவில் ராஜகோபுரம் கட்டிய சுவாமிகள் ஜீவசமாதி
- திருச்செந்தூர் - திருநெல்வேலி வழியில், திருச்செந்தூரில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் ஆழ்வார்திரு நகரி என்ற ஊர் உள்ளது.
- திருச்செந்தூரிலோ சுவாமிகளைக் காணாமல் பக்தர்களும் மக்களும் தவித்தனர்.
திருச்செந்தூர் முருகன் ஆலயத்தை சீரமைத்து புதுப்பித்து கட்டியதில் தேசிக சுவாமிகள், மவுன சுவாமிகள், காசி சுவாமிகள், ஆறுமுக சுவாமிகள், வள்ளி நாயக சுவாமிகள் ஆகிய 5 பேரும் முக்கிய பங்கு வகித்தனர் என்பதை கடந்த வாரம் பார்த்தோம்.
இந்த ஐவரின் ஜீவசமாதிகளும் திருசெந்தூர் மற்றும் அதன் அருகிலேயே அமைந்து உள்ளது. இவை அனைத்தையும் ஒரே நாளில் தரிசிக்கலாம். முதலில் திருச்செந்தூர் ஆலய ராஜகோபுரத்தை கட்டிய தேசிக மூர்த்தி சுவாமிகளின் ஜீவ சமாதி அமைந்து இருக்கும் பகுதியை பார்க்கலாம்.
திருச்செந்தூர் - திருநெல்வேலி வழியில், திருச்செந்தூரில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் ஆழ்வார்திரு நகரி என்ற ஊர் உள்ளது. இந்த ஊருக்கு அருகில் உள்ள ஆழ்வார்தோப்பு கிராமத்தில் வீற்றிருக்கும் காந்தீஸ்வரம் கோவிலின் நந்தவனம் பகுதியில் தேசிக மூர்த்தி சுவாமிகளின் ஜீவ சமாதி திருக்கோவில் அமைந்திருக்கிறது.
தேசிக மூர்த்தி சுவாமிகள் திருச்செந்தூர் ராஜகோபுரத்தை கட்டி முடித்ததும் அவர் தலைமையில் கும்பாபிஷேகம் நடக்கும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் முருகப்பெருமானின் விருப்பம் வேறுவிதமாக இருந்தது. சுவாமிகளின் கனவில் முருகப் பெருமான் தோன்றி, "தேசிக மூர்த்தியாரே தாங்கள் இங்கிருந்து கும்பாபிஷேகத்தைக் காண வேண்டாம். எங்கிருந்து வந்தீரோ, அந்த இடத்துக்குச் சென்று மனக்கண்களால் கும்பாபிஷேகத்தைக் கண்டு மகிழும்" என்றார்.
அதை ஏற்று தேசிகமூர்த்தி சுவாமிகள் முன்பு தங்கியிருந்த ஆழ்வார்தோப்பு காந்தீஸ்வரம் சிவாலயம் அருகில் உள்ள மடத்திலேயே தங்கினார். அங்கிருந்தபடி மனக்கண்களால் கும்பாபிஷேக வைபவத்தை தரிசித்து மகிழ்ந்தார்.
திருச்செந்தூரிலோ சுவாமிகளைக் காணாமல் பக்தர்களும் மக்களும் தவித்தனர். அதேநேரம் அவர்களின் கண்களுக்கு, ராஜகோபுரத்தில் சுவாமிகள் காட்சி தந்து மறைவது போல் தெரிந்தது. எல்லோரும் சிலிர்த்துப்போனார்கள். இன்றைக்கும் திருச்செந்தூர் முருகன் கோவில் வள்ளியம்மை சந்நிதித் தூண் ஒன்றில் சிற்பவடிவில் சுவாமிகளின் திருவுருவைக் காணலாம். சுவாமிகளை ஞானதேசிக மூர்த்தி சுவாமிகள் என்று பக்தர்களும் மக்களும் போற்றுகிறார்கள்.
பிற்காலத்தில் சுவாமிகள் சமாதி அடைந்ததும் காந்தீஸ்வரத்திலேயே அவருக்கு ஜீவ சமாதி அமைக்கப்பட்டது. திருச்செந்தூர்- திருநெல்வேலி மார்க்கத்தில் உள்ள ஆழ்வார் திருநகரிக்கு வரும் பக்தர்கள், அங்கே சங்கு மண்டப நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ளலாம். அங்கிருந்து ஒரு பர்லாங் தூரத்தில் ஆற்றுப்பாலம் உள்ளது. அதன் வழியே பயணித்து ஆற்றுக்கு எதிர்க்கரையில் இருக்கும் காந்தீஸ்வரத்தை அடையலாம்.
இங்கே சுவாமிகள் தங்கியிருந்த மடம், ஈஸ்வரன் திருக்கோவில் ஆகியவற்றையும் தரிசிக்கலாம். அருகிலேயே சுவாமிகளின் சமாதிக் கோவிலும் அமைந்து உள்ளது. இன்றைக்கும் பக்தர்கள் விரும்பிய வரங்களைத் தரும் அருள் அலைகள் கொண்ட ஆலயமாகத் திகழ்கிறது சுவாமிகளின் சமாதித் திருக்கோவில்.
சித்தர்கள் ஜீவ சமாதி அடைந்தால், அதன் மேல் லிங்கம் வைத்து கோவில் கட்டுவது வழக்கம். ஆனால் இங்கே மூலஸ்தானத்தில் கல்லினால் ஆன திருவாசியுடன் கூடிய வேல் போன்ற அமைப்பில் உள்ளது. இது வேறெங்கும் காண்பதற்கரிய அமைப்பாக உள்ளதால், இங்கு வந்து வழிபடுவதால் விசேஷ பலன்கள் கைகூடும் என்கிறார்கள் பக்தர்கள்.
சுவாமிகளின் சமாதித் திருக்கோவிலில் மார்கழி மாதம் கார்த்திகை நட்சத்திர நாளில் குருபூஜை சிறப்புற நடைபெறுகிறது. இங்கு வந்து இந்த சுவாமிகளை வணங்கினால் நினைத்த காரியம் கைகூடும், புதிய வீடு கட்டும் வாய்ப்பு கிடைக்கும், வீடு கட்டுவதில் இருக்கும் தடைகள் நீங்கும். திருமணம் முதலான சுபகாரியங்கள் தடையின்றி இனிதே நடந்தேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
காந்தை முனிவர், கருவூரார் என சித்தர்கள் பலரின் அருள் அலைகள் நிரம்பி இருக்கும் தலம் ஆதலால், இங்கு வந்து வழிபடுவோருக்கு முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.
தேசிகமூர்த்தி சுவாமிகள் ஜீவ சமாதியை தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் எளிதில் வந்து செல்ல வசதிகள் உள்ளன. திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில் வாகனங்களில் வருபவர்கள் ஆழ்வார்திருநகரில் உள்ள தாமிரபரணி ஆற்று பாலத்தை கடந்து இடது புறம் திரும்பினால் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திலேயே தேசிகமூர்த்தி சுவாமிகள் ஜீவசமாதியை அடைந்து விடலாம். இதேபோல் பஸ்களில் வருபவர்கள் ஆழ்வார் திருநகரி பஸ்நிறுத்தத்தில் இறங்கியும் எளிதாக தாமிரபரணி ஆற்றின்வழியாக நடந்து கோவிலை அடையலாம். தற்போது காந்தீஸ்வரம் கோவில் நந்தவனத்தில் யானைகள் பராமரிப்பு மையமும் செயல்படுகிறது. கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் இங்குள்ள யானை களையும் வெளியில் நின்றபடி பார்த்து ரசிக்கலாம்.
வேல் மூலம் நிதி திரட்டினார்
திருச்செந்தூர் கோவில் ராஜகோபுரம் கட்டிய தேசிகமூர்த்தி சுவாமிகள் சுமார் 4 அடி உயரம் உள்ள செம்பினால் ஆன ஒரு வேலில் திருச்செந்தூர் கோவில் திருப்பணி செய்து முடிக்க யாசகம் பெறுவதை கையாண்டார். கோவில் திருப்பணிக்கு ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற நிதியை தருமாறு முருகப்பெருமானே கேட்பதாக வாசகங்களை அந்த வேலில் பொறித்தார். அதை வீரபாகு என்பவரிடம் கொடுத்து திருப்பணிக்குப் பொருள் யாசகம் பெற்று வரும்படி அனுப்பி வைத்தார்.
வீரபாகுவும் அந்த வேலாயுதத்துடன் சென்று பக்தகோடிகளிடம் திருப்பணிக்குப் பொருள் பெற்று வந்தார். திருப்பணியும் விரைவில் நிறைவேறியது. மிகப்பழமை வாய்ந்த அந்த வேலாயுதம், இன்றைக்கும் திருச்செந்தூர் கீழரத வீதியில் உள்ள திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை திருஆதீன மடத்தில் பாதுகாக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீ செந்திலாண்ட வரைத் தரிசிக்க திருச்செந்தூர் செல்லும் அன்பர்கள், அப்படியே மடத்துக்கும் சென்று அற்புதமான அந்த வேலாயுதத்தையும் தரிசித்து வரலாம்.
அடுத்த வாரம் திருச்செந்தூர் ஆலயத்தை சீரமைத்த 4 சுவாமிகள் பற்றியும் திருச்செந்தூர் முருகன் புகழ் பாடிய நொண்டி நாடகம் பற்றியும் பார்க்கலாம்.