சிறப்புக் கட்டுரைகள்

திருவண்ணாமலையும் ரமணரும்!
- ரெயில் நிலையத்திற்கு இரவு நேரத்தில் வந்து சேர்ந்தாள் ஒரு பெண்மணி.
- திருவண்ணாமலை குறித்து இன்னொரு சம்பவம் வரலாற்றில் பதிவாகியுள்ளது.
திருவண்ணாமலையைத் தேடி வந்தவர். அங்கு தங்கி அங்கேயே தவம் செய்து வாழ்ந்தவர். அங்கேயே தம் உடலை உகுத்து இறைவனுடன் கலந்தார்.
திருவண்ணாமலை என்னும் புனிதத் திருத்தலத்தின் மகிமையை ஸ்ரீரமணர் முழுமையாக உணர்ந்திருந்தார். திருவண்ணாமலையிலேயே அவர் தங்க அதுதான் காரணம். அந்தத் தலத்தின் அற்புதங்கள் பற்றிப் பல அன்பர்களிடம் அவர் சொன்னதுண்டு.
ஸ்ரீரமணரின் அடியவர்களில் ஒருவர் தேவராஜ முதலியார். திருவண்ணாமலையின் மகிமை குறித்து ஸ்ரீரமணர் தம்மிடம் தெரிவித்த செய்தியொன்றை தேவராஜ முதலியார் பதிவு செய்திருக்கிறார். அந்தச் செய்தி இதுதான்:
திருவண்ணாமலை ரெயில் நிலையத்திற்கு இரவு நேரத்தில் வந்து சேர்ந்தாள் ஒரு பெண்மணி. திருவண்ணாமலை ஆலயத்தில் அண்ணாமலையானை தரிசிக்க வேண்டும் என்பதே அவள் வருகையின் நோக்கம். அவள் ஒரு சிவ பக்தை.
கையில் கொஞ்சம் பணம் வைத்திருந்தாள். நகை நட்டுக்கள் வேறு அவள் உடலை அலங்கரித்தன.
ஏதேனும் ஒரு நல்ல உணவு விடுதிக்குப் போய் அன்றிரவு அறை எடுத்துத் தங்க வேண்டும். பிறகு மறுநாள் காலை ஆலயத்திற்குச் சென்று அண்ணாமலையானைக் கண்ணார தரிசிக்க வேண்டும். இதுவே அவள் திட்டம். அவளுடைய நெடுங்காலக் கனவு இது.
உணவு விடுதிக்குச் செல்வதற்குக் குதிரை வண்டி ஏதேனும் கிடைக்குமா என அவள் கண்கள் தேடிக் கொண்டிருந்தபோது, ஒரு ஜட்கா அவள் அருகில் வந்து நின்றது. எங்கே போக வேண்டும் எனக் கேட்டார் அந்தக் குதிரை வண்டி ஓட்டுநர்.
அவள் பக்கத்தில் உள்ள ஏதேனும் ஒரு நல்ல உணவு விடுதியில் தன்னைக் கொண்டு விடுமாறு சொல்லி எவ்வளவு கட்டணம் என்பதையும் கேட்டுக் கொண்டு ஜட்காவில் ஏறினாள்.
சிறிதுதூரம் சென்றதும் ஜட்கா யாருமில்லாத ஓர் ஒதுக்குப் புறமான இடத்தில் திடீரென நின்றது. ஜட்காவிலிருந்து குதித்துக் கீழே இறங்கினான் ஜட்காவை ஓட்டியவன்.
அவள் முன் வந்துநின்ற அவன் அவளிடமுள்ள பணம், நகை போன்றவற்றைக் கொடுத்துவிடுமாறு கத்தியைக் காட்டி மிரட்டத் தொடங்கினான்.
எங்கும் இருள். சுற்றிலும் யாருமில்லை. இப்போது என்ன செய்து எப்படித் தப்பிப்பது?
அவள் கடும் பீதி அடைந்தாள். `அண்ணாமலையானே, என்னைக் கைவிட்டு விடாதே! உன்னை தரிசிக்கத் தானே ஓடோடி வந்தேன்? நடுவழியில் இப்படியொரு திருடன் வந்து என்னை மிரட்டுகிறானே? இந்த அநியாயத்தைக் கேட்க ஆளில்லையா? இந்தப் புனித பூமியில் இப்படி நடக்கலாமா?` என அச்சத்தில் கண்ணீர் விட்டுக் கதறி அழத் தொடங்கினாள்.
மறுகணம் நடந்தது அந்த அற்புதம். அவள் குரலைக் கேட்டுத்தானோ என்னவோ டக் டக் என யாரோ நடந்துவரும் ஒலி கேட்டது. எங்கிருந்தோ இரு காவலர்கள் அங்கு வந்துசேர்ந்தார்கள்.
அவர்கள் வண்டி ஓட்டியவனை அதட்டினார்கள். நாங்களும் வண்டியில் வருகிறோம், எங்களையும் சேர்த்து உணவு விடுதிக்கு அழைத்துச் செல் என உத்தரவிட்டார்கள்.
காவலர்களைப் பார்த்ததும் அவளிடம் திருட நினைத்த வண்டியோட்டி பயந்துவிட்டான். மறுபேச்சுப் பேசாமல் தான் வண்டியில் ஏறி அவளையும் அந்தக் காவலர்களையும் வண்டியில் ஏற்றிக் கொண்டான். அவர்களை உணவு விடுதியில் இறக்கி விட்டான். எதுவும் பேசாமல் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டான். அந்தக் காவலர்கள் இருவருக்கும் சமயத்தில் அவர்கள் செய்த உதவிக்கு நன்றி கூறினாள் அந்தப் பெண்மணி. அவள் படபடப்பு அப்போதுதான் கொஞ்சம் தணிந்திருந்தது.
தன்னைச் சரியான தருணத்தில் வந்து காப்பாற்றிய அவர்களின் பெயர்களைக் கேட்டுக் குறித்துக் கொண்டாள். அவர்கள் அவளை ஜாக்கிரதையாக இருக்குமாறு அறிவுறுத்தி விட்டு இருளில் நடந்து மறைந்தார்கள்...
திருப்பூர் கிருஷ்ணன்
உணவு விடுதியில் அறை எடுத்துத் தங்கிய அவள், தகுந்த நேரத்தில் தன்னைக் காப்பாற்ற ஆள் அனுப்பிய அண்ணாமலையானை மனதில் வணங்கியவாறு, அந்த இரு காவலர்களை நெகிழ்ச்சியோடு நினைத்த படியே உறங்கினாள். மறுநாள் காலை எழுந்ததும் அவளுக்கு ஓர் எண்ணம் தோன்றிற்று. அந்தக் காவலர்களின் பெயர்களைத்தான் அவள் குறித்து வைத்திருக்கிறாளே? திருவண்ணாமலை காவல் நிலையத்திற்குப் போய் அவர்களுக்கு ஒரு சிறிய அன்பளிப்புத் தொகையைக் கொடுத்துவிட்டு அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு வந்தால் என்ன?
இந்த எண்ணத்தோடு அவர்களைத் தேடிச் சென்றாள் அவள். அவள் அணிந்திருந்த தங்க நகைகளையெல்லாம் காப்பாற்றியவர்கள் அவர்களல்லவா?
ஆனால் காவல் நிலையத்தில் விசாரித்தபோது அவள் தெரிந்துகொண்ட விவரம் அவளைத் திகைப்பில் ஆழ்த்தியது. அப்படிப்பட்ட பெயர்களிலோ அவள் சொன்ன ஜாடையிலோ அங்கே எந்தக் காவலரும் பணியாற்றவில்லை!
இது என்ன வியப்பு! அப்படியானால் நேற்றிரவு தக்க தருணத்தில் வந்து தன்னைக் காப்பாற்றியவர்கள் யார்?
அண்ணாமலை கோபுரத்தை நோக்கி அவள் கைகள் தானாய்க் குவிந்தன. திருவண்ணாமலைக்கு பக்தியோடு வருவோரின் பாதுகாப்பை அண்ணாமலையான் பார்த்துக் கொள்வான் என்பதைப் புரிந்துகொண்டாள் அவள்.
இந்த சம்பவம் உண்மையாக நடந்ததுதான் என்றும் கற்பனைக் கலப்பில்லாதது என்றும் இந்த நிகழ்ச்சி பற்றி ஸ்ரீரமணரே தம்மிடம் விவரித்துச் சொன்னதாகவும் தேவராஜ முதலியார் பதிவு செய்துள்ளார்.
திருவண்ணாமலை குறித்து இன்னொரு சம்பவம் வரலாற்றில் பதிவாகியுள்ளது. சுந்தரேச ஐயர் தொடர்பான சம்பவம் அது.
ஸ்ரீரமணரின் தத்துவங்களில் சரணடைந்து வாழ்ந்த ஒரு தீவிர ரமண பக்தர் சுந்தரேச ஐயர். அடிக்கடி ஸ்ரீரமணரைப் போய்ப் பார்ப்பதும் திருவண்ணாமலை ஆலயத்திற்குச் சென்று இறைவனை தரிசிப்பதும் அவரின் வழக்கம்.
அவரது உறவினர் ஒருவருக்கு திடீரென்று காலில் அடிபட்டுக் கால் ஊனப்பட்டுவிட்டது. எவ்வளவோ சிகிச்சை செய்து பார்த்தும் பூரண குணம் கிட்டவில்லை.
கையில் ஒரு கம்பு வைத்து ஊன்றிக் கொண்டுதான் அவரால் நடக்க முடியும். கம்பில்லாமல் ஓர் அடி கூட எடுத்துவைக்க இயலாது என்கிற நிலைமை.
இப்படியாகி விட்டதே, இனி வாழ்நாள் முழுதும் தான் இப்படித்தான் வாழ வேண்டுமா என்று அவர் பெரிதும் மனம் புழுங்கினார். ஊன்று கோல் இல்லாமல் முன்போல் தன்னால் எப்போது இயல்பாக நடக்க முடியும் எனக் கவலையில் ஆழ்ந்தார்.
திருவண்ணாமலையில் வாழும் பகவான் ரமணர் பற்றி அவர் கேள்விப் பட்டிருந்தார். உறவினர் சுந்தரேச ஐயர் அடிக்கடி ஸ்ரீரமணரின் பெருமைகள் பற்றி அவரிடம் சொல்வதுண்டு. அதனால் அவருக்கு பகவான் ஸ்ரீரமணரிடம் மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டது.
திருவண்ணாமலையை வலம் வரலாம், பகவான் ரமணரைச் சரணடைந்து வாழலாம், காலப்போக்கில் கம்பில்லாமலே இயல்பாக நடக்கக் கூடிய நிலையை ஸ்ரீரமணர் கட்டாயம் அருள்வார் என அவர் மனதில் திடமான உறுதி ஏற்படுத்திக் கொண்டார்.
தம் இருப்பிடத்தையே திருவண்ணாமலைக்கு மாற்றிக் கொண்டார் அவர். திருவண்ணாமலையிலேயே தொடர்ந்து வசிக்கலானார்.
நாள்தோறும் கம்பை ஊன்றிக் கொண்டு கால் வலிக்க வலிக்க கிரிவலம் வந்தார். மகரிஷி ரமணரின் பாதாரவிந்தங்களை பக்தியோடு நாள்தோறும் நமஸ்கரித்தார். கம்பில்லாமல் நடக்க வேண்டும் கடவுளே என ஓயாமல் பிரார்த்தனை செய்தவாறிருந்தார்.
இப்படியாகச் சிறிது காலம் சென்றது. ஆனால் நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லை. நாட்கள் சென்றனவே தவிர, ஊன்றுகோலை எடுத்துவிட்டு இயல்பாக நடப்பதென்பது அவரால் இயலாததாகவே இருந்தது.
நடக்க முடியும் என்று தான் நினைத்தது நடக்காததால், மெல்ல மெல்ல அவருக்குத் தம் திருவண்ணாமலை வாழ்வில் சலிப்பு ஏற்பட்டது. ஆனால் ஸ்ரீரமணரோ அவர் திருவண்ணாமலையில் வசிப்பதையும் நாள்தோறும் கிரிவலம் வருவதையும் ஊக்குவித்துக் கொண்டிருந்தார்.
`இவ்வளவு நாள் ஆகிவிட்டது, இனி மேலும் திருவண்ணாமலையில் இருந்து என்ன பயன்?` என எண்ணத் தொடங்கினார் அவர். ஒருநாள் மனம் வெறுத்துப் போய் விரக்தியுடன் திருவண்ணாமலையை விட்டுப் புறப்பட்டார்.
தளர்ந்த உடலோடும் தளர்ந்த மனத்தோடும் கம்பை ஊன்றிக் கொண்டு, ரமணாஸ்ரமத்திலிருந்து விடைபெற்று, மெல்ல திருவண்ணாமலையை விட்டு விலகிச் செல்லலானார். அப்போதுதான் அந்த விந்தையான சம்பவம் நடந்தது. அவர் முன்பின் பார்த்திராத, அவருக்கு அறிமுகமே இல்லாத யாரோ ஒருவர் திடீரென அங்கே வந்தார். சற்று நில் என அவரை கம்பீரமாக அதட்டினார். கட்டளைக்குக் கட்டுப்பட்டாற்போல் நின்றார் அவர். அவர் கம்பை ஊன்றிக் கொண்டு நடக்க முடியாமல் நடப்பதையே சற்றுநேரம் உற்றுப் பார்த்தார் வந்த புதியவர். பின் `அடேய்! இனி உனக்குக் கம்பு தேவையில்லை!` எனக் கூறி, கம்பை அவர் கையிலிருந்து சடாரென்று பிடுங்கி இரண்டாய் முறித்து வீசிவிட்டு விறுவிறுவென்று நடந்து போய்விட்டார். அவர் எங்கு போனார் என்றே தெரியவில்லை.
இருந்த கம்பும் போயிற்றா, இனி என்ன செய்வது என்று எண்ணியவாறே கம்பில்லாமல் நடக்கத் தொடங்கினார் அந்த அன்பர். என்ன ஆச்சரியம்! கம்பில்லாமலேயே அவரால் முன்புபோல் இயல்பாக நடக்க முடிந்தது!
அதை உணர்ந்ததும் அவர் மனத்தில் வியப்பும் பரவசமும் எழுந்தன. `அண்ணாமலை யாரைப் பிரார்த்தித்தால் ஆழ்மனம் வலிமை பெறுகிறது, நடக்காது என்று நாம் நினைத்ததையெல்லாம் வலிமை பெற்ற ஆழ்மனம் நடக்கச் செய்துவிடுகிறது!` என்னும் சூட்சுமத்தைப் புரிந்துகொண்ட அந்த அன்பரின் விழிகளில் கரகரவெனக் கண்ணீர் பெருகியது. அண்ணாமலை ஆலயத்தை நோக்கியும் ரமணாஸ்ரமம் இருந்த திசைநோக்கியும் அவரது இரு கரங்களும் குவிந்தன. திருவண்ணாமலை மேலும் ஸ்ரீரமணர்மேலும் வைக்கும் திடமான நம்பிக்கை அற்புதங்களை நிகழ்த்தக் கூடியது என்பதை அவர் மனம் உணர்ந்துகொண்டது.
தொடர்புக்கு: thiruppurkrishnan@gmail.com