ஐ.பி.எல்.(IPL)

சர்ரே அணியின் சாதனை முறியடிப்பு.. சேசிங்கில் சாதனைகளை குவித்த ராஜஸ்தான் ராயல்ஸ்
- குஜராத் அணியின் 209 இலக்கை 15.5 ஓவர்களில் ராஜஸ்தான் எட்டியது.
- ஐபிஎல் தொடர் வரலாற்றில் 4 முறை 210+ ரன்களைச் சேசிங் செய்த முதல் அணி எனும் சாதனையையும் படைத்துள்ளது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவரில் 209 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 15.5 ஓவரில் 212 ரன்கள் குவித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உலக சாதனை படைத்துள்ளது. அதன்படி டி20 கிரிக்கெட் வரலாற்றில் 200-க்கும் மேற்பட்ட ஸ்கோரை வேகமாக துரத்திய அணியாக ராஜஸ்தான் சாதனை படைத்துள்ளது.
முன்னதாக 2018-ம் ஆண்டு, மிடில்செக்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சர்ரே அணி 16 ஓவர்களில் 200-க்கும் மேற்பட்ட ரன்களை துரத்தியதே சாதனையாக இருந்த நிலையில், ராயல்ஸ் அணி 15.5 ஓவர்களில் இலக்கை எட்டி புதிய சாதனையைப் படைத்துள்ளது.
டி20 வரலாற்றில் அதிவேகமாக 200+ ரன்களைச் சேசிங் செய்த அணிகள்
15.5 ஓவர்கள் - ராஜஸ்தான் ராயல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ், 2025*
16.0 ஓவர்கள் - சர்ரே vs மிடில்செக்ஸ், 2018.
16.0 ஓவர்கள் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் டைட்டன்ஸ், 2024
16.0 ஓவர்கள் - பாகிஸ்தான் vs நியூசிலாந்து, 2025
16.3 ஓவர்கள் - மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, 2023
இது தவிர, இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 210 ரன்கள் என்ற இலக்கை எட்டியதன் மூலம், ஐபிஎல் தொடர் வரலாற்றில் 4 முறை 210+ ரன்களைச் சேசிங் செய்த முதல் அணி எனும் சாதனையையும் படைத்துள்ளது.
முன்னதாக மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் தலா மூன்று முறை இதனைச் செய்துள்ளது. அதேசமயம் உலகளில் மிடில்செக்ஸ் அணி மட்டுமே 4 முறை இந்த மைல்கல்லை எட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.