கிரிக்கெட் (Cricket)

ICC இரண்டு அடுக்கு டெஸ்ட் கிரிக்கெட் சிஸ்டம்: எதிர்க்க தயாராகும் பாகிஸ்தான்..!
- முன்னணி 6 அணிகள் ஒரு பிரிவாக பிரிக்கப்படும்.
- மற்ற 6 அணிகள் மற்றொரு பிரிவாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படும்.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை நடத்தி வருகிறது. இதில் 9 அணிகள் புள்ளிகள் பட்டியலில் இடம்பெறும். 2025 முதல் 2027 வரை நடத்தப்படும் போட்டிகளில் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதும்.
இனிமேல் தலா 6 அணிகளா இரண்டு பிரிவுகளாக பிரித்து டெஸ்ட் தொடரை நடத்த ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இதற்கான யதார்த்தம் குறித்து விரிவாக ஆலோசனை நடத்த சிறப்பு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
ஐசிசி தரவரிசையில் முதல் 6 இடங்களை பிடித்துள்ள அணிகள் ஒரு பிரிவாகவும், மீதமுள்ள 3 அணிகளுடன் மேலும் 3 அணிகள் சேர்க்கப்பட்டு 2ஆவது பிரிவாகவும் பிரிக்கப்படும்.
முதல் பிரிவில் கடைசி இடம் பிடிக்கும் அணி, அடுத்த முறை 2ஆவது பிரிவுக்கு தள்ளப்படும். 2ஆவது பிரிவில் முதல் இடம் பிடிக்கும் அணி முதல் பிரிவுக்கு முன்னேறும். இதனால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும். முன்னணி அணிகள் அடிக்கடி மோதிக்கொள்ளும். இதனால் வருவாய் அதிக அளவில் ஈட்டலாம் என்பது ஐசிசி-யின் திட்டம்.
தற்போதைய நிலையில் பாகிஸ்தான் 7ஆவது இடத்தில் உள்ளது. இதை வைத்து பார்க்கும்போது பாகிஸ்தான் 2ஆவது பிரிவுக்கு தள்ளப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் போன்ற அணிகளுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும். அவர்கள் முன்னணி அணிகளுடன் விளையாடாத நிலை ஏற்படும்.
இந்த நிலையில் இந்த திட்டத்தை எதிர்க்க பாகிஸ்தான் தயாராகி வருகிறது. இந்த முறை அமல்படுத்தப்பட வேண்டும் என்றால் முழு உறுப்பினர் நாடுகளான 12 பேரில், 3-ல் 2 பங்கு உறுப்பினர் நாடுகள் ஆதரவு தேவை.
"கிரிக்கெட் அதிக்கம் செலுத்தும் சில நாடுகளின் சொத்து அல்ல. சிறிய அணிகளுக்கு டாப் லெவல் போட்டிகளில் விளையாட தொடர்ந்த வாய்ப்பு அளிக்கப்பட்டால் மட்டுமே அவர்களால் முன்னேற முடியும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.