கிரிக்கெட் (Cricket)

காஷ்மீரில் 8 லட்சம் ராணுவ வீரர்கள் இருந்தும் தாக்குதல் நடந்துள்ளது- இந்தியாவை விமர்சித்த அப்ரிடி
- இந்தியா தனது சொந்த மக்களை கொன்று பழியை எங்கள் மீது போடுகிறது.
- தாக்குதல் நடந்த ஒரு மணி நேரத்தில் ஒரு ராணுவ வீரர் கூட சம்பவ இடத்திற்கு வரவில்லை.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த 22-ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து அதற்கு காரணமான பாகிஸ்தான் மீது இந்திய அரசாங்கம் அதிரடியான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் அங்கே ஒரு பட்டாசு வெடித்தாலும், அதற்கு பாகிஸ்தான் மீது பழி சுமத்துவதா என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
அங்கே ஒரு பட்டாசு வெடித்தாலும், அவர்கள் அதற்கு பாகிஸ்தான் மீது பழி சுமத்துவார்கள். பஹல்காமில் சுமார் ஒரு மணி நேரம் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அங்கு எந்த ராணுவ வீரரும் வரவில்லை. இஸ்லாம் அமைதியை போதிக்கும் மதம். நாங்கள் பயங்கரவாதத்தை ஆதரிப்பதில்லை. பாகிஸ்தான் எப்போதும் அமைதியைதான் விரும்புகிறது. நாங்கள் இந்தியாவுடன் நல்லுறவை மேம்படுத்தவே முயற்சிக்கிறோம்.
ஆனால் இந்தியா தனது சொந்த மக்களை கொன்று பழியை எங்கள் மீது போடுகிறது. 8 லட்சம் இந்திய ராணுவத்தினர் இருப்பதாக கூறப்படுகிற நிலையில், தாக்குதல் நடந்த ஒரு மணி நேரத்தில் ஒருவர் கூட சம்பவ இடத்திற்கு வரவில்லை. ஆனால் பாகிஸ்தானை குற்றம்சாட்டுகிறார்கள்.
தாக்குதல் நடந்த ஒரு மணி நேரத்திற்குள், அவர்களின் ஊடகங்கள் பாலிவுட் சினிமா போல் மாறியது ஆச்சரியமாக இருக்கிறது. கடவுளின் பொருட்டு, எல்லாவற்றையும் சினிமா ஆக்காதீர்கள். நான் ஆச்சரியப்பட்டேன். உண்மையை சொல்ல வேண்டுமெனில் அவர்கள் பேசும் விதத்தை நான் ரசித்தேன். தங்களைத் தாங்களே படித்தவர்கள் என்று சொல்லும் இந்தியர்கள் தங்களது சிந்தனைகளை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இதில் இந்தியாவுக்காக கிரிக்கெட் விளையாடிய 2 வீரர்கள் உள்ளனர். அவர்கள் தூதர்களாகவும் சிறந்த கிரிக்கெட் வீரர்களாகவும் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் நேரடியாக பாகிஸ்தானைக் குறை கூறுகிறார்கள்.
என்று அப்ரிடி கூறினார்.