கிரிக்கெட் (Cricket)

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: 9 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி..!
- ஜிம்பாப்வே இரண்டு இன்னிங்சிலும் முறையே 149 ரன்களும், 165 ரன்கள் எடுத்தது.
- நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 307 ரன்கள் குவித்தது.
ஜிம்பாப்வே- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் புலவாயோவில் தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 149 ரன்னில் சுருண்டது. நியூசிலாந்து வீரர் மாட் ஹென்ரி 6 விக்கெட் வீழ்த்தினார். நாதன் ஸ்மித் 3 விக்கெட் கைப்பற்றினார்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 307 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. டேவன் கான்வே 88 ரன்களும், டேரில் மிட்செல் 80 ரன்களும் அடித்தனர். 158 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஜிம்பாப்வே 2ஆவது இன்னிங்சை தொடங்கியது.
நேற்றைய 2ஆவது நாள் ஆட்ட முடிவில் ஜிம்பாப்வே 2 விக்கெட் இழப்பிற்கு 31 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 3ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய ஜிம்பாப்வே 165 ரன்னில் ஆல்அவுட் ஆனது. மிட்செல் சான்ட்னெர் 4 விக்கெட்டும் மாட் ஹென்ரி மற்றும் ஓ'ரூர்கே ஆகியோர் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஜிம்பாப்வே 165 ரன்களில் சுருண்டதால், ஒட்டுமொத்தமாக 7 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றது. இதனால் 8 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து 2ஆவது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. 1 விக்கெட் இழப்பிற்கு 8 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.