விளையாட்டு

மீண்டும் வைரலாகும் வீடியோ: தரம் தாழ்ந்த செயல் என ஸ்ரீசாந்தின் மனைவி ஆவேசம்
- 17 ஆண்டுக்கு பிறகு ஸ்ரீசாந்தை, ஹர்பஜன்சிங் கன்னத்தில் அறைந்த அந்த சர்ச்சைக்குரிய வீடியோ காட்சி இப்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
- லலித் மோடி, மைக்கேல் க்ளார்க் உங்கள் இருவரையும் பார்க்க வெட்கமாக இருக்கிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. முதலாவது சீசனில் மொகாலியில் நடந்த ஆட்டத்தில் மும்பை அணி தோற்ற பிறகு திடீரென மும்பை இந்தியன்ஸ் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங், பஞ்சாப் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்தை கன்னத்தில் 'பளார்' விட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னத்தில் கைவைத்தபடி ஸ்ரீசாந்த் தேம்பி தேம்பி அழுதது அனைவரையும் கலங்க வைத்தது. ஆனால் இது தொடர்பான வீடியோ காட்சி மறைக்கப்பட்டது. சம்பவம் குறித்து விசாரணை நடத்திய இந்திய கிரிக்கெட் வாரியம் அந்த சீசனில் எஞ்சிய 11 ஆட்டங்களிலும், 5 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாட ஹர்பஜன்சிங்குக்கு தடை விதித்தது. அதன் பிறகு பலக்கட்டங்களில் ஹர்பஜன் சிங்கிடமும் சரி, ஸ்ரீசாந்திடமும் சரி எதற்காக இருவரிடையே சண்டை ஏற்பட்டது என கேட்கப்பட்ட போது பதில் சொல்லாமல் சிரித்தே மழுப்பினர்.
இந்த நிலையில் 17 ஆண்டுக்கு பிறகு ஸ்ரீசாந்தை, ஹர்பஜன்சிங் கன்னத்தில் அறைந்த அந்த சர்ச்சைக்குரிய வீடியோ காட்சி இப்போது வெளியாகி வைரலாகி வருகிறது. ஆட்டம் முடிந்து வீரர்கள் கைகுலுக்கும் போது, ஹர்பஜன்சிங், ஸ்ரீசாந்தின் கன்னத்தில் தடாலடியாக அடிப்பதும், பிறகு இருவரும் ஒருவரையொருவர் அடிப்பது போல் பாயும் போது நடுவர்கள், சக வீரர்கள் சமாதானப்படுத்துவதும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. இப்போதும் அவர்கள் எதற்காக மோதிக் கொண்டார்கள், ஹர்பஜன்சிங்கை கோபமூட்டும் வகையில் ஸ்ரீசாந்த் என்ன சொன்னார் என்பது மர்மமாகவே உள்ளது.
இந்த நிலையில், வீடியோ வெளியானதற்கு இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீசாந்தின் மனைவி புவனேஷ்வரி கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
லலித் மோடி, மைக்கேல் க்ளார்க் உங்கள் இருவரையும் பார்க்க வெட்கமாக இருக்கிறது. மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக 2008-ல் நடந்த ஒரு சம்பவத்தை நீங்கள் இழுப்பதை பார்க்கும்போது மனிதாபிமானமற்றவர்களாக தெரிகிறீர்கள்.
அந்த சம்பவத்தில் இருந்து ஹர்பஜனும், ஸ்ரீசாந்தும் மீண்டு வந்துவிட்டனர். ஆனாலும் அந்த பழைய காயத்தை நீங்கள் மீண்டும் கிளறி விடுகிறீர்கள். இது அருவருப்பாக உள்ளது என கூறியுள்ளார்.